பி.எம் ஸ்ரீ பள்ளிகள் திட்டம்
கடந்த 2022-ம் ஆண்டு பி.எம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தைப் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இதன் மூலம் ரூ.27,360 கோடி செலவில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நாடு முழுவதிலும் பள்ளிகள் மேம்படுத்தப்பட உள்ளன. இதில் 60% மத்திய அரசின் பங்களிப்பும், 40% மாநில அரசின் பங்களிப்பும் இருக்கும். இதன் மூலம் சுமார் 14,500 பள்ளிகளில் 1.87 கோடி குழந்தைகள் பலன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. எனவே இந்த திட்டத்திற்கான பலனைப் பெற வேண்டும் என்றால் மத்திய அரசுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும். அதன்பிறகு தேர்வு செய்யப்படும் பள்ளிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குச் செல்லும். ஆனால் இந்த திட்டத்தில் இணையத் தமிழ்நாடு, கேரளா, டெல்லி, பஞ்சாப், மேற்கு வங்கம் விருப்பம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து சமக்ரா சிக்ஷா அபியான் (எஸ்.எஸ்.ஏ) திட்டத்திற்கு அனுப்ப வேண்டிய நிதியை மத்திய கல்வி அமைச்சகம் நிறுத்தியுள்ளது.
அதாவது டெல்லி ரூ.330 கோடி, பஞ்சாப் ரூ.515 கோடி, மேற்கு வங்கம் ரூ.1,000 கோடி என நிதி நிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த வரிசையில் தமிழகத்திற்கு ரூ.2,152 கோடி நிறுத்தப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில், “2024-25-ம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு ரூ.3,586 கோடி கல்விக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், ஒன்றிய அரசின் பங்கு ரூ.2,152 கோடி. இதற்கான முன்மொழிவுகள் கடந்த ஏப்ரலிலேயே சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், முதல் தவணையான ரூ.573 கோடி விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுக்கான ரூ.249 கோடியை ஒன்றிய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. விவாதங்கள் தேவைப்படும் தேசிய கல்விக் கொள்கையினை, கல்விக்கான நிதி வழங்கிடும் விஷயத்துடன் பொருத்திடக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.
தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் என்ன?
இதையடுத்து மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மேற்கோள் காட்டி தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், “சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கான நிதியை மறுப்பது, அதே வேளையில் குறிக்கோள்களில் வெற்றியடையாதோருக்குத் தாராளமாக நிதி ஒதுக்குவது, இப்படித்தான் ஒன்றிய பா.ஜ.க அரசு தரமான கல்வியையும் சமத்துவத்தையும் ஊக்குவிக்கத் திட்டமிட்டுள்ளதா, முடிவை நாட்டுக்கும், நாட்டு மக்களின் புரிதலுக்குமே விட்டுவிடுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “ஜனநாயகத்தில் மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி இருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் ஒரு விஷயத்தை உருவாக்கும் நோக்கில் ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்துக்கு எதிராக இருப்பது அரசியல் சாசன உணர்வுக்கும் ஓர் ஒருங்கிணைந்த இந்தியாவுக்கும் எதிரானது. பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பின்னரே தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. அதில் இந்திய மக்களின் ஒட்டுமொத்த அறிவும் அடங்கியுள்ளது. தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான உங்களின் திட்டமிட்ட எதிர்ப்பில் சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன்.
தமிழ் உள்ளிட்ட தாய்மொழியில் கல்வி பயிற்றுவிப்பதை நீங்கள் எதிர்க்கிறீர்களா?, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் தேர்வுகள் நடத்துவதை நீங்கள் எதிர்க்கிறீர்களா?, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பாடத் திட்டத்தையும், பாடப் புத்தகங்களையும் உருவாக்குவதை நீங்கள் எதிர்க்கிறீர்களா?, ஒட்டுமொத்த வளர்ச்சியையும், பல்துறை அறிவையும், எதிர்கால தேவையை நிறைவேற்றக் கூடியதாகவும் அமைந்துள்ள புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறீர்களா?. அப்படி இல்லாவிட்டால், உங்களின் அரசியல் லாபத்தைத் தள்ளிவைத்துவிட்டு தமிழக மாணவர்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்து தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மிரட்டுகிறதா மத்திய அரசு?
இதையடுத்து தேசியக் கல்விக்கொள்கையை ஏற்க வேண்டும் எனத் தமிழக அரசைப் பகிரங்கமாக மிரட்டுகிறதா மத்திய அரசு என்கிற கேள்வியுடன் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரனிடம் பேசினோம், “தாய் மொழியில் கல்வி கற்பதை நாங்கள் ஆதரிக்கிறோம், நீங்கள் தடுக்கிறீர்களா எனக் கேட்கிறார்கள். குறைந்தபட்சம் கல்வி நிதி கொடுப்பதைத் தடுக்கிறீர்கள் என இங்கிருந்து குரல்கள் எழுகின்றன. கொடுக்க வேண்டிய தொகையைத் தானே முதல்வர் கேட்கிறார். அதை ஏன் கொடுக்க மறுக்கிறீர்கள். வளர்ச்சியடைந்த மாநிலங்களின் பட்டியலில், தொழில், கல்வியில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. எனவேதான் எதில் தரம் தாழ்ந்து போயிருக்கிறோம், ஏன் நிதி கொடுக்கவில்லை என்று முதல்வர் கேட்கிறார்.
அதை ஏன் மத்திய அமைச்சர் கொடுக்கவில்லை. மேலும் அவர் மாநிலங்களுக்குள் இருக்கும் போட்டியை நாங்கள் வரவேற்கிறோம் என்கிறார். உங்கள் போட்டி, பொறாமையெல்லாம் பிறகு வைத்துக்கொள்ளுங்கள்.
பி.எம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் சேராமலேயே தமிழகம் நன்றாக இருக்கிறது. எனவே வரவில்லை என்று சொல்லிவிட்டோம். பிறகு ஏன் அதைப் பேசுகிறீர்கள். ஏப்ரலில் கையெழுத்துப் போட்டுவிட்டதாகச் சொல்கிறீர்கள். தமிழகத்துக்குக் கொடுக்க வேண்டிய நிதியை ஏன் கொடுக்கவில்லை.? தமிழகத்திற்குக் கல்விக்கு நிதி ஒதுக்க மாட்டோம் என்று கூறுகிறீர்களா? வெளிப்படையாக அறிவித்துவிடுங்கள்” என்றார்.