கோவா என்றாலே பசுமையான மரங்கள், கடற்கரைகளுக்கு பஞ்சம் இருக்காது. இதற்காகவே இந்தியா முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கோவாவுக்கு செல்கின்றனர். கோவாவில் அதிக அளவில் பழத்தோட்டங்கள், நெல் வயல்கள் இருக்கிறது. அதோடு கட்டடங்கள் கட்டுவதற்கு தடை செய்யப்பட்ட பகுதிகளும் அதிக அளவில் இருந்தது. கடந்த 2023-ம் ஆண்டு வரை இந்த தடை அமலில் இருந்தது. அப்படியே அப்பகுதியில் கட்டடங்கள் கட்டுவதாக இருந்தால் உள்ளூர் மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்திய பிறகுதான் அதற்கு அரசு ஒப்புதல் வழங்கும்.
ஆனால் 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் மாதம் சட்டமன்றத்தில் இதற்காக சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. கோவா நகர மற்றும் தேசிய திட்டமிடுதல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ் கட்டுமானபணிகளுக்கு தடை விதிக்கப்பட்ட மற்றும் பசுமை பகுதிகளை அதன் உரிமையாளர்கள் அரசிடம் விண்ணப்பித்து அதனை குடியிருப்பு பகுதியாக மாற்றிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டிய அவசியம் இல்லை. திருத்தம் என்ற பெயரில் விண்ணப்பித்து அதனை குடியிருப்பு பகுதியாக மாற்ற முடியும். இதனால் கடந்த 18 மாதத்தில் ஏராளமானோர் தங்களது வயல், பழத்தோட்டம், மேம்படுத்த தடை விதிக்கப்பட்ட பகுதிகளை குடியிருப்பு பகுதிகளாக மாற்றும்படி கோரி விண்ணப்பித்து மாற்றிக்கொண்டுள்ளனர். இதனால் கோவா பசுமை மண்டலத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மரங்களை வெட்டிவிட்டு அதில் குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள், ரிசார்ட்கள் கட்டப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் கோவா மாநில அமைச்சர்களும் பயனடைந்துள்ளனர். கோவாவின் வனப்பகுதி மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவேண்டிய அமைச்சர்கள்தான் முதல் ஆளான சென்று தங்களது நிலங்களை இது போன்று மாற்றிக்கொண்டு அதில் கட்டடங்களை கட்ட ஆரம்பித்துள்ளனர். வனத்துறை அமைச்சர் விஷ்வஜித் ரானே, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அலெக்ஸோ ஆகியோர் இத்திட்டத்தில் பயனடைந்துள்ளனர். கடந்த 18 மாதத்தில் 20 லட்சம் சதுர மீட்டர் பசுமை மண்டலத்தில் இருந்து குடியிருப்பு பகுதிகளாக மாற்றப்பட்டு இருக்கிறது.
பில்டர்கள், தொழிலதிபர்கள், பா.ஜ.க, காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து தங்களது விவசாய நிலத்தை குடியிருப்பு பகுதிகளாக ஆவணங்களில் திருத்தம் செய்து அதில் கட்டடங்கள் கட்டுகின்றனர். அல்லது அதனை அதிக விலைக்கு விற்பனை செய்துவிடுகின்றனர். இதனால் பல லட்சம் மதிப்புள்ள நிலம் பல கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தாழ்வான மலையைக்கூட முன்பு குடியிருப்பு பகுதியாக இருந்தது என்றும், அதில் தவறுதலாக பசுமை பகுதி என்று அறிவித்துவிட்டனர் என்றும், அதனை திருத்தி கொடுக்கும்படி கூறி குடியிருப்பு பகுதிகளாக மாற்றிக்கொள்கின்றன்ர். இதற்கு 500 முதல் 50000 ரூபாய் வரை இடத்திற்கு தக்கபடி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணத்துடன் நகர திட்டமிடுதல் துறையில் நில ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் வந்து பார்த்து அறிக்கை கொடுப்பர்.
அந்த அறிக்கை உயர்மட்டக்கமிட்டிக்கு செல்லும். அக்கமிட்டியின் பரிந்துரைப்படி நகர் திட்டமிடுதல் கமிஷனர் நிலத்திருத்தத்திற்கு ஒப்புதல் கொடுத்து உத்தரவிடுவார். கோவா வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலா பகுதி என்பதால் கட்டுமானங்கள் கட்டுவதற்கு அதிக அளவில் நிலம் தேவையாக இருக்கிறது. இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் குளோடே ஆர்வரிஸ் கூறுகையில், “மலையின் தாழ்வான பகுதியில் கணக்கெடுப்பு நடக்கும் போது எப்படி தவறு நடந்திருக்க வாய்ப்பு இருக்க முடியும்?. இதன் மூலம் மலையின் சரிவான பகுதி, வயல்கள், பசுமைப்பகுதிகளை ரியல் எஸ்டேட் மாபியாக்கள் அழித்துவிடுவர். நீர்நிலைகள், மலைகள், நெல் வயல்களை இழக்க நேரிடும்”என்று அச்சம் தெரிவித்தார்.
கோவாவில் முதல் முறையாக 1988-ம் ஆண்டு ஒரு சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு நிலத்தை குடியிருப்பு பகுதிகளாக மாற்றிக்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் தங்களது விவசாய நிலத்தை குடியிருப்பு நிலமாக மாற்றி கட்டடங்களை கட்டினர். இதனால் புற்றீசல் போன்று கட்டடங்கள் உருவானது. இதையடுத்து 2005-ம் ஆண்டு மீண்டும் இது போன்று விவசாய நிலங்களை குடியிருப்பு நிலமாக மாற்றும் திட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு 2023-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட புதிய சட்டத்திருத்தத்தின் படி தனியார் நில உரிமையாளர்கள் மனு கொடுத்து தங்களது நிலத்தில் திருத்தங்களை செய்து கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதில்தான் அமைச்சர்கள், அரசியல்வாதிகள் பயனடைந்துள்ளனர் என்கிற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY