புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, “முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வேண்டுமென்றால் தமிழகத்தில் பாதுகாப்பு இல்லாமல் இருக்கலாம். மற்றபடி, தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியாக உள்ளது. அதனால் தான், தொழில் முதலீட்டாளர்கள் தமிழகத்தை தேடி வருகின்றனர்.
சென்னை பள்ளி விவகாரத்தில் தலைமை ஆசிரியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, இனிமேல் வேறு எந்த ஆசிரியர்களும் இதுபோல் தவறு செய்ய கூடாது என்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை.
சிறைத்துறையின் உயர் அதிகாரிகளுக்கு, கைதிகளை வேலைக்கு வைத்துக் கொள்ளக்கூடாது என்று உத்தரவு போட்டுள்ளோம். அதையும் மீறி ஒரு சில இடங்களில் விதிமுறைமீறல் சம்பவம் நடந்துள்ளது. அது குறித்தான நடவடிக்கை எடுத்து வருகிறோம். இது தொடர்பாக, சிறை கைதிகளிடம் புகார் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குத் தொடரப்படும்.
ஆளுநருக்கு யாரோ எழுதி கொடுத்து பேசுவதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. ஆளுநர் சொந்தமாக எதையும் பேசுவதில்லை. தமிழ்நாட்டில் கல்வி தரம் தாழ்ந்து விட்டதாக சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தியாவிலேயே தமிழகம் தான் கல்வித்தரத்தில் முதலிடம் வகிக்கிறது. வடமொழியின் ஆதிக்கத்தை திணிப்பதற்காக ஆளுநர் உள்ளிட்டோர் இதுபோன்ற உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.
தொழில் முதலீட்டில் நாங்கள் அன்றாட விவரங்களை செய்தித்தாள்களில் வெளியிடுகின்றோம். வெளிப்படைத்தன்மையோடு செயல்படுகின்றோம். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தமிழகம் தொழில்துறையில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. அதனால் தான் அடுத்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு தொழில் தொடங்க வரும்போது நாங்கள் அதிக சலுகை அளிக்கிறோம்.
எங்கள் மாநிலத்திற்கு வாருங்கள் என்று கூறுமளவிற்கு, தமிழகம் தொழில் துறையில் முன்னேற்றம் அடைந்துள்ளது. விஜயைக் கண்டு நாங்கள் அஞ்சவில்லை. எங்களுக்கு பலமான போட்டி போடக்கூடிய கட்சி தேவை. அப்போதுதான், நாங்கள் உற்சாகமாக தேர்தல் பணி ஆற்ற முடியும். திமுக மக்களை நம்பி இருக்கும் இயக்கம். எனவே, திமுக யாரைக் கண்டும் அஞ்ச தேவையில்லை. மக்கள் நல திட்டங்களை செய்துவிட்டு தான் தேர்தலை சந்திக்கப் போகிறோம்” என்றார்.