`கமிஷன் வாங்குகிறார்… கட்சியை வளர்க்கவில்லை’ – ஒரத்தநாடு திமுக கூட்டத்தில் சலசலப்பு!

ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் எம்.ராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி, மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், தெற்கு ஒன்றிய செயலாளர் முருகையனுக்கு எதிராக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலரும் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.

திமுக கூட்டத்தில் சலசலப்பு

இது குறித்து திமுக தரப்பில் சிலரிடம் பேசினோம், “தெற்கு ஒன்றியச் செயலாளர் கட்சியினரை மதிப்பதில்லை. அவருக்கு நெருக்கமாக இருக்கும் நான்கு பேரை மட்டும் வளர்த்து விடுகிறார். மற்றவர்களுக்கு கட்சி தொடர்பான விஷயங்களை தெரியப்படுத்துவதில்லை. அவரது நடவடிக்கையால் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அவர் மீது அதிருப்தியில் இருந்தனர். இந்த நிலையில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது முருகையனுக்கு எதிராக பலரும் பேசினர். மேடைக்கு சென்று அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

கமிஷன் மட்டும் வாங்குகிறார் கட்சியை வளர்ப்பதில்லை, தெற்கு ஒன்றியத்தில் திமுக-வை அழித்து விட்டார், பல கிளைகளில் கொடிக்கம்பம் நடப்பட்டு மூன்று ஆண்டுகளாக கொடி ஏற்றப்படாமல் உள்ளது. கமிஷன் வாங்குவதில் காட்டும் ஆர்வத்தை கிளைகளில் கட்சி கொடி ஏற்றுவதில் காட்டுவதில்லை. அவருடைய கிளையிலேயே கொடி ஏற்றவில்லைனு பேசியதால் முருகையன் தரப்புக்கும், அவருக்கு எதிராக பேசியவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்ப்பட்டது. எம்.ராமச்சந்திரன் அவர்களை சமாதானப்படுத்த முயன்றார் முடியவில்லை. மகேஷ் கிருஷ்ணசாமி நடப்பதை பார்த்து கொண்டு ரியாக்‌ஷன் காட்டாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தார்.

எல்.ஜி.அண்ணா, மைக்கை பிடித்து எல்லோரும் உட்காருங்கள் ப்ளீஸ் என சொல்லிக்கொண்டே இருந்தார் யாரும் கேட்கவில்லை. இதனால் கூட்டத்தில் ஏற்ப்பட்ட சலசலப்பு அடங்கவில்லை. இதைத்தொடர்ந்து மேடையில் பேசிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன், எம்.பி முரசொலி ஆகியோர் தெற்கு ஒன்றியத்தில் கவனம் செலுத்தி என்ன நடக்கிறது என ஆராய்ந்து குறைகளை களைந்து கட்சியை ஒழுங்குப்படுத்த வேண்டும் என்றனர். ஒன்றிய செயலாளருக்கு எதிராக எழுந்த எதிர்ப்பு அடங்காததால் அவசர அவசரமாக கூட்டத்தை முடித்துவிட்டனர்” என்றனர்.