கோவை: வெளிநாட்டு பெண்கள்.. 117 ஏஜென்ட்கள்; பாலியல் தொழிலில் மாதம் ரூ.50 லட்சம்… சிக்கிய தரகர்!

கோவை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஸ்டார் ஹோட்டல்களில் வெளிநாட்டு பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக தகவல் வெளியானது. இது குறித்து கோவை காவல்துறை தனிப்படை அமைத்து விசாரணையை தொடங்கியது.

இந்த நெட்வொர்க்கின் மூளையாகச் செயல்பட்ட சிக்கந்தர் பாஷா (41) மற்றும் ஏஜென்ட் ஸ்டீபன் ராஜ் (30) ஆகியோரை கொல்கத்தாவில் வைத்து போலீஸார் கைதுசெய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் `பகீர்’ தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சிக்கந்தர் பாஷா மீது கோவை, திருப்பூர், ஈரோடு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர் முன்பு திண்டுக்கல் மாவட்டத்தில் செல்போன் கடை நடத்தி வந்தார். அப்போது சுமார் ரூ.50 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

சிக்கந்தர் பாஷா

பிறகு தன்னுடைய நண்பர் அசோக் மூலம், ஷேக் அப்துல் காதர் என்பவர் அறிமுகமாகியுள்ளார். அவர் மீது பல்வேறு மோசடி வழக்குகள் உள்ளன. அவரின் நிழலாக வலம் வந்த சிக்கந்தர், பாலியல் தொழிலை கற்றுள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு முதல், சிக்கந்தர் பாலியல் தொழிலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். பாலியல் தொழிலை நிர்வகிக்க 8 மேனேஜர்களை நியமித்துள்ளார். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ஏராளமான ஏஜென்ட்களும் அறிமுகமானார்கள்.  பாலியல் தொழிலுக்காக ஆல் இந்தியா ஏஜென்ட் குரூப் என்ற வாட்ஸ் அப் குழுவை உருவாக்கியுள்ளனர்.

ஸ்டீபன்

இதில் இந்தியா, ரஷ்யா, இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலுள்ள சுமார் 117 ஏஜென்ட்கள் உள்ளனர். டெல்லியைச் சேர்ந்த கபீர் சிங் என்பவர் இந்த நெட்வொர்க்கை பின்னணியில் இருந்து இயக்கும் முக்கிய நபராவார்.

இப்படி இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர்.  பாலியல் தொழிலில் கிடைத்த  லாபத்தில், பெங்களூரில் ஒரு பிரியாணி கடையும் நடத்தி வருகின்றனர். வெளிநாட்டு பெண்களை சுற்றுலாவுக்கான விசா மூலம் இந்தியா வரவழைத்து, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர்.

நட்சத்திர ஹோட்டல்

இதன்மூலம் மாதம் ரூ.50 லட்சம் சம்பாதித்துள்ளனர். கோவையில் உள்ள முக்கியமான 8 நட்சத்திர ஹோட்டல்களில், நீண்ட நாள்கள் தங்கி இருந்தவர்கள் மற்றும் வந்து சென்றவர்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டன.

இவர்கள் கொல்கத்தாவில் இருந்து இந்த நெட்வொர்க்கை இயக்கியுள்ளனர். இதையடுத்து  பாலியல் தொழிலில் ஈடுபட்ட 15 பெண்கள் போலீஸால் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த கும்பலிடம் இருந்து 10 சிம்கார்டுகள், 16 செல்போன்கள், 7 வங்கி கணக்கு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது

கபீர் சிங்கை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த கும்பலின் வங்கிக் கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட இருவரையும் குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.