இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மீண்டும் வன்முறை அலை எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு முதல் குக்கி மற்றும் மெய்தி மக்கள் இடையான வன்முறை தீவிரமாகியிருக்கிறது. சில மாதங்களாகத் தணிந்திருந்த வன்முறை மீண்டும் வெடித்துள்ளதால், கல்வி நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
மணிப்பூர் மாநிலம், ஜிரிபாம் மாவட்டத்தில் சனிக்கிழமை (இன்று) நடந்த சண்டையில் 5 பேர் மரணமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தூங்கிக்கொண்டிருந்த நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், இருதரப்பு துப்பாக்கிச் சூட்டில் மேலும் 4 பேர் மரணித்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஜிரிபாம் மாவட்டத்தின் மலைப்பிரதேசத்தை ஒட்டிய கிராமத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இருதரப்பு மோதலில் 3 ‘மலை சார்ந்த ஆயுதப் போராளிகள்’ மரணமடைந்ததாகக் கூறப்படுகின்றது.
பிஷ்ணுபூர் மாவட்டத்தில் முந்தைய தினம் நடந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார், 5 பேர் காயமடைந்தனர். அந்த தாக்குதலில் ஆயுதமேந்திய குழுவினர் கிராமங்களின் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த வாரத் தொடக்கத்தில் மேற்கு இம்பாலில் ட்ரோன் மூலம் குண்டுகள் போடப்பட்டு நடந்த தாக்குதலில், இரண்டு பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.
மீண்டும் எழும் வன்முறைகளைக் கடுமையாகக் கண்டித்த மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் இவற்றை “தீவிரவாத நடவடிக்கைகள்” என்றார்.
“மணிப்பூர் அரசு இந்த தான்தோன்றி தாக்குதல்களைத் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. பழங்குடி மக்கள் மீதான இந்தத் தீவிரவாத தாக்குதல்களுக்கு முறையான பதிலடி வழங்கும்” எனவும் பேசியிருக்கிறார்.
வன்முறைச் சம்பவங்களால் செப்டம்பர் 7-ம் தேதி கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. மணிப்பூரின் பள்ளத்தாக்கு பகுதிகளில் செயல்படும் மணிப்பூர் ஒருமைப்பாட்டிற்கான ஒருங்கிணைப்புக் குழு (COCOMI) காலவரையற்ற “பொது அவசரநிலையை” அறிவித்தது. குக்கி ஆயுதக்குழுக்களின் இடைவிடாத தாக்குதலைச் சுட்டிக்காட்டி மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும் படி கேட்டுக்கொண்டுள்ளது.
மணிப்பூரில் இயல்புநிலைத் திரும்பும் வரை இந்த அவசரநிலை நீடிக்கும் என COCOMI தரப்பில் கூறப்பட்டுள்ளது.