அரசுப்பள்ளியில் ஆன்மிகமென சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி பரபரப்பை கிளப்பிய மகா விஷ்ணு ஆஸ்திரேலியாவிலிருந்து இன்று மதியம் சென்னை திரும்புகிறார்.
‘என் மீதான புகார்களுக்கு நேரில் பதில் தருகிறேன்’ என நேற்று மாலை வீடியோவும் வெளியிட்டிருந்த நிலையில் இவரின் வருகை எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது. இதனிடையே மகா மகாவிஷ்ணு குறித்தும் அவரின் செயல்பாடுகள் குறித்தும் பல்வேறு வீடியோக்களும் தகவல்களும் வந்த வண்ணமிருக்கின்றன. சமீபத்தில் கொடைக்கானலில் ரீட்ரீட் வகுப்புகள் என விளம்பரம் கொடுத்து இவர் நடத்திய பயிற்சி வகுப்புகளில் ஆண்களும் பெண்களும் ஆட்டம் பாட்டு என உற்சாகமாக இருந்த காட்சி அந்த வீடியோக்களில் பதிவாகி இருக்கின்றன.
இந்த ரீட்ரீட் வகுப்புகள் குறித்து மகா விஷ்ணுவின் ஆசிரம வட்டாரத்தில் கேட்டோம். “மெடிட்டேஷனின் ஒரு பகுதியாக இந்த மாதிரியான வகுப்புகள் நடக்கும். கலந்துகிடறவங்க அவர்களின் விருப்பத்தின் பேரில்தான் வர்றாங்க. ஒரு பயிற்சினா முழுநேரமும் அதுலேயேவா இருப்பாங்க. ரிலாக்ஸாக சின்ன சின்னக் கொண்டாட்டங்கள் கேளிக்கைகள் இருக்காதா? அந்த மாதிரியானதுதான் அந்த டான்ஸ் எல்லாம். இதைப் பெரிசாக்கத் தேவையில்லை.” என்றார்கள் அவர்கள்
டிவி மூலம் கிடைத்த சிறிய புகழ்…அதை தாண்டி எந்தப் பின்புலமும் இல்லாமல் இன்று பல வெளிநாடுகளில் தன் ஆசிரம் கிளைகளை நிறுவும் அளவுக்கு எப்படி வளர்ச்சி? என்கிற கேள்விதான் அரசுக்கு மட்டுமல்ல கடந்த இரு நாள்களாக இவர் குறித்த தகவலைக் கேள்விப்பட்ட எல்லோருக்கும் எழுகிறது.
“அண்ணே, அவன் ஏதோ பண்றான். கொஞ்ச நாள் முன்னாடி என்கிட்ட வந்தான். என்.ஜி.ஓ வச்சிருக்கேன். அதை பண்றேன். இதை பண்றேன்னு சொன்னான். நாங்க செய்கிற சில வேலைகள் குறித்து கேட்டான். அதோட சரி கிளம்பிட்டான். ஆனா அவன் மீது அப்போவே எனக்கொரு டவுட் வந்தது!” என்கிறார் தனியாக ட்ரஸ்ட் ஒன்று வைத்து தன்னால் முடிந்த உதவிகளை செய்து வரும் அந்த நகைச்சுவை நடிகர்.
அரசுக்கும் மகா விஷ்ணுவின் பின்னணி குறித்து சந்தேகம் கிளம்பவே தற்போது காவல்துறை, வருவாய்துறை என பல கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டிருக்கிறது. மதுரை அலங்காநல்லூரிலுள்ள மகா விஷ்ணுவின் தாத்தா பாட்டி வீடு உள்ளது. அந்த ஊரிலிருந்து ஜீ டிவியின் ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர் சரவணமுத்துவிடம் நேற்று தாலுகாவின் வருவாய் ஆய்வாளர் பேசியிருக்கிறார்.
“இந்த பகுதியிலிருந்து டிவி நிகழ்ச்சி, சினிமா தொடர்பான விஷயன்னா என்னைதான் கேப்பாங்க. இந்த பையனுடைய தாத்தா பாட்டி குறித்து கேட்டாங்க. அவங்க ஊர் இங்கிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்துல இருக்கு. அங்கையும் போயிருப்பாங்கனு நினைக்கிறேன்.” என்றார் சரவண முத்து. தொடர்ச்சியான புகார்கள், வலுக்கும் எதிர்ப்புகள் காரணமாக இன்று சென்னை திரும்பும் விஷ்னு கைதாவாரா என காவல்துறையினரிடம் கேட்டோம். ” நிலைமை சீரியஸாகத்தான் இருக்கு. உயரதிகாரிகள் தரப்புல என்ன உத்தரவு வருதோ அதன்படி நடவடிக்கை இருக்கும்.” என்கின்றனர்.