விஜய் கட்சியின் மாநாட்டுக்கு அனுமதி தாமதிக்கப்படுவதற்கு காரணமே அதிகார வர்கத்தின் நெருக்கடியென அரசியல் வட்டாரத்தில் பேசிவரும் நிலையில், விஜய்யை கண்டு தி.மு.க அஞ்சுகிறதென அ.தி.மு.க, பா.ஜ.க, மற்றும் நா.த.க-வினர் விமர்சிக்கிறார்கள். நிதர்சனத்தில் மாநாட்டுக்கு அனுமதி வழங்க அஞ்சுகிறதா திமுக என அலசினோம்..?
செப்டம்பர் 23-ம் தேதி நடைபெறவுள்ள கட்சியின் மாநாட்டுக்கு அனுமதிதர வேண்டுமென விழுப்புரம் எஸ்.பி-யிடம் ஆகஸ்ட் 28-ம் தேதி அனுமதி கோரினார் த.வெ.க பொதுச் செயலாளர் ஆனந்த். தொடர்ந்து மாநாடு ஏற்பாடுகள் தொடர்பாக 21 கேள்விகளை எழுப்பியிருக்கிறது காவல்துறை. இதனால் மாநாட்டுக்கு அனுமதி தராமல் நெருக்கடியை ஏற்படுத்துகிறது தி.மு.க என்ற கருத்து சமூக வலைதளங்களில் பரவின.
நம்மிடம் பேசிய த.வெ.க-வினர் சிலர், “மாநாடு நடத்த வேண்டுமென இடம் தேடியபோதும் ஆளும் கட்சியின் முக்கிய புள்ளிகளே குடைச்சல் கொடுத்தனர். ஆகஸ்ட் 22-ம் தேதி கொடி அறிமுகம் செய்து வைத்தபோது, எங்கள்மீதான கவனத்தை திருப்ப `அமைச்சரவை மாற்றம்’ என்ற செய்தியை கிளப்பிவிட்டதும் ஆளும் தரப்பு தான்.
இப்போது மாநாட்டுக்கான அனுமதியை கேட்கும்போது `எத்தனை பெண்கள்..எத்தனை ஆண்கள்’ என கேள்விகளை கேட்டிருக்கிறார்கள். மற்ற கட்சிகள் மாநாடு நடக்கும்போது இப்படி 21 கேள்விகளை கேட்ட உதாரணங்களே இல்லை” என்றனர்.
இது குறித்து விளக்கமளித்துப் பேசிய தி.மு.க பிரமுகர்களோ, “மாநாட்டுக்கான அனுமதியை கோரும்போதும் ஒருசில கேள்விகளை காவல்துறை முன்வைப்பது மிக இயல்பானது. பிரபல நடிகராக விஜய் திகழும் நிலையில் மாநாட்டு எவ்வளவுபேர் வருவார்கள். வேறு அரசியல் சினிமா பிரபலங்கள் வருவார்களா.. சிறப்பு விருந்தினர்கள் வருகைக்கான பாதை.. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு வசதி உள்ளிட்டவைகள் குறித்து கேள்வி எழுப்புவது பாதுகாப்பு வழங்குவதற்குத்தானே. அது எப்படி அரசியலாகும்.
தி.மு.க மாநாடு நடத்தினாலும் இந்த கேள்விகளை காவல்துறை முன்னிறுத்துவார்கள். ஆனால் விஜய் கட்சியினரும் எந்த அரசியல் அனுபவமும் இல்லாததால் தி.மு.க நெருக்கடி கொடுப்பதாக திரித்து அதைவைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்கிறார்கள். திட்டமிட்டு தி.மு.க மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டுமென மற்ற கட்சிகளும் எங்கள்மீது பாய்கிறார்கள். விஜய்யின் அரசியல் வருகையை தி.மு.க-வும் வரவேற்க தான் செய்கிறது” என்றனர்.
காவல்துறை தரப்பிலோ, “மாநாடு நடத்தவேண்டும் என்று ஆளும் கட்சி சார்பாக அனுமதி கேட்டாலும் பல விவரங்கள் கேட்கப்படும். பெரும்பாலும் திமுக, அதிமுக போன்ற கட்சிகள் மாநாட்டுக்கு அனுமதி கேட்கும்போது அவர்களே யாருடைய இடத்தில், எப்போது நிகழ்ச்சி தொடங்கும், யார் வருவார்கள், யாரிடம் எல்லாம் அனுமதி வாங்கப்பட்டிருக்கிறது, என்ன வசதிகள், ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கொடுத்துவிடுவார்கள். இவர்கள் அனுமதி கேட்டுக் கொடுத்த கடிதத்தில் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என்ற நேரம் கூட விரிவாக இல்லை. ஒன்றரை லட்சம் பேர் வருகிறார்கள் என்றால், அவர்களுக்குத் தேவையான வசதிகள் என்ன செய்யப்படுகிறது என்பது தொடங்கிப் பாதுகாப்பு வசதிகள் அனைத்தையுமே தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கு இருக்கிறது. ஒன்றரை லட்சம் பேர் வருவார்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். அவர்களுக்கான வாகன நிறுத்தத்துக்கு என்ன செய்யப்போகிறார்கள் என்பதும் முக்கியம். அனைத்துக்கும் பதில் கிடைத்துவிட்டால் அனுமதி கொடுப்பதில் எங்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. இது எந்த அரசியல் அழுத்தமும் இல்லை” என்கிறார்கள்.
நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள் சிலரோ, “த.வெ.க தரப்பில் மாநாட்டுக்கான அனுமதி கோரிய நிலையில் விழுப்புரம் காவல்துறை சில கேள்விகளை எழுப்பியது என்றால் உடனடியாக அவர்கள் அதற்கு பதிலளித்திருக்கலாம். செப்டம்பர் 1-ம் தேதி விளக்கம்கேட்கப்பட்ட நிலையில் செப்டம்பர் 5-ம் தேதி வரை விளக்கமளிக்காமல் இருப்பது விஜய் கட்சியின் தவறுதான். விளக்கம் கொடுத்த பிறகும் காவல்துறை தாமதித்தால் அதில் உள்நோக்கம் இருப்பதாக சந்தேகிக்கலாம். ஆனால் மாநாட்டுக்கான அனுமதி கிடைப்பதில் இப்போது ஏற்பட்டிருக்கும் தாமதத்துக்கு காரணம் விஜய் தரப்பும்தான்” என்றனர்.
காவல்துறைக்கான கேள்விகளுக்கு த.வெ.க எப்போதும் பதிலளிக்கும்.. அதன்மீது காவல்துறை என்ன முடிவெடுக்கப் போகிறதென பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!