மகா விஷ்ணுவின் மறுபிறவி பேச்சு; மாணவர்களை என்ன செய்யும் தெரியுமா? – உளவியல் நிபுணர் எச்சரிக்கை

போன ஜென்மத்தில் நீங்கள் என்ன செய்தீர்களோ அதைப் பொறுத்தே உங்களுக்கு இந்தப் பிறவி கொடுக்கப்பட்டிருக்கிறது என்று பேசியதோடு, மாற்றுத்திறனாளிகள் குறித்தும் அறிவியலுக்குப் புறம்பாகப் பேசிய மஹா விஷ்ணு என்பவர், சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் மாணவர்களிடையே மூட நம்பிக்கையை விதைக்க முயன்ற செய்திதான் தற்போது தமிழகமெங்கும் வைரலாகிக்கொண்டிருக்கிறது.

இதையொட்டி சம்பந்தப்பட்ட பேச்சாளர் வேறு சில பள்ளிகளில் பேசிய வீடியோக்களும் தற்போது சோஷியல் மீடியாக்களில் பகிரப்பட்டு வருகின்றன. அசோக் நகர் பள்ளியில், அறிவுக்கும் அறிவியலுக்கும் ஒவ்வாத கருத்துக்களைப் பேசியவர், இன்னொரு வீடியோவில் எவ்வளவுக்கு எவ்வளவு வேகமாக மந்திரம் சொல்கிறீர்களோ அந்தளவுக்குப் பிரபஞ்ச சக்தியை உணர முடியும் என்று பிற்போக்குத்தனமாகப் பேசுகிறார். அதே வீடியோவில் மாணவிகள் பலர் தியான நிலையில் அமர்ந்தபடி அழுதுகொண்டிருக்கிறார்கள். சிலர், கதறுகிறார்கள்.

உளவியல் நிபுணர் சரஸ் பாஸ்கர்

உளவியல் நிபுணர் கருத்து

தன்னம்பிக்கைப் பேச்சு என்ற பெயரில், பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகளை மாணவர்களின் மனதில் விதைப்பது என்ன மாதிரியான உளவியல் பிரச்னைகளை ஏற்படுத்தும் என உளவியல் நிபுணர் சரஸ் பாஸ்கர் அவர்களிடம் கேட்டோம். சரஸ் பாஸ்கர் உள்பட 10 உளவியல் ஆலோசகர்கள், சென்னை கவுன்சிலிங் ஃபவுண்டேஷன் சார்பாக, 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கிற 35 அரசுப் பள்ளிக்கூட மாணவர்களுக்கு ஃபோகஸ், ஆங்கர் மேனேஜ்மென்ட் போன்ற வழிகாட்டல் பயிற்சிகளைக் கொடுத்து வருகின்றனர்.

”உளவியல்ரீதியாக டீன் ஏஜ் மிகவும் முக்கியமான பருவம். ஹார்மோன் மாற்றங்களும், அதனால் ஏற்படுகிற உடல் மற்றும் மனம் சார்ந்த சவால்கள் அதிகமாக இருக்கும் பருவம் இது. குடும்பத்தினருக்குக் கொடுக்கிற அன்பு, அக்கறை, மரியாதை, கவனம் ஆகியவற்றைவிட நண்பர்களுக்கு அதிகம் கொடுப்பார்கள். இதன் காரணமாக குடும்பத்தினரை விட்டு மனதளவில் விலக ஆரம்பிப்பார்கள். எதிர்த்துப் பேசுவது, பொய் சொல்வது, என் ஃபிரெண்டுக்கு அவன் அப்பா, அம்மா லேட்டஸ்ட் செல்போன் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். நீங்களும் வாங்கிக் கொடுங்கள் என்று அடம்பிடிக்கிற வயதும் இதுதான்.

கல்வித்துறை செய்ய வேண்டியவை

இன்றைய பள்ளிக்கூடங்களில் ஒழுக்கம் பற்றிப் போதிக்கும் மாரல் பீரியட் பெரும்பாலும் இருப்பதில்லை. அந்த வகுப்பும் மாணவர்களுக்கு அவசியம். அதேபோல, மாணவர்களின் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும் பீரியடும் வாரம் ஒன்று இருக்க வேண்டும். இந்த இரண்டு பீரியட்களும் நம் கல்வித்துறையிலிருந்தால், இன்றைய மாணவர்களிடம் காணப்படுகிற சில ஒழுக்கக்குறைவான செயல்களை ஆரம்பத்திலேயே களைய முடியும் என்பது என் கருத்து” என்றவர் தொடர்ந்தார்.

பாரா ஒலிம்பிக்கில் மெடல்களை குவித்துக்கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளிகளைக் கீழ்மைப்படுத்துவதுபோல பேசுவது, பிற்போக்குத்தனமான சிந்தனை.

Mahavishnu – Ashok Nagar speech

மாணவர்களுக்கு அவசியமில்லை

”தன்னம்பிக்கை பேச்சாளர் என்று சொல்லப்படுகிற மஹாவிஷ்ணுவின் வீடியோக்களை நானும் பார்த்தேன். மறுபிறவியெல்லாம் மாணவர்களுக்கு அவசியமே இல்லாத டாபிக். இந்தப் பிறவியில் நீ உண்மையாக இருக்கிறாயா, நேர்மையாக இருக்கிறாயா, மற்றவர்களுக்குப் பயனுள்ளவனாக இருக்கிறாயா, அப்படியிருக்க நீ என்னென்ன செய்ய வேண்டும் என்று பேசியிருந்தால், அது தன்னம்பிக்கை ஏற்படுத்தும் பேச்சாக இருந்திருக்கும். ஆனால், ‘போன பிறவியில செஞ்ச தவறு’ என்று, மாற்றுத்திறனாளிகளை ‘நீங்கள் பாவம் செய்தவர்கள்; அதனால்தான் துன்பப்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள்’ என்று சொல்லி அவர்களைச் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்துவதுபோல பேசியிருக்கிறார். பாரா ஒலிம்பிக்கில் மெடல்களை குவித்துக்கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளிகளைக் கீழ்மைப்படுத்துவதுபோல பேசுவது, பிற்போக்குத்தனமான சிந்தனை. மறுபிறவி பற்றிய பேச்செல்லாம் மாணவர்களை அச்சுறுத்தும். இதைப் பள்ளிக்கூடங்களில் அனுமதிக்கவே கூடாது.” என்கிறார் உளவியல் ஆலோசகர் சரஸ் பாஸ்கர், அழுத்தமாக..!