கல்விக் கொள்கையா, மத்திய அரசின் நிதியா? – திமுக அரசின் முக்கிய முடிவு என்ன..?

நிறுத்தப்பட்ட நிதி!

ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு மாநில அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளின் வளர்ச்சி பணிகளுக்காக நிதி ஒதுக்குவது வழக்கம். இந்த நிதியை மாநில அரசு பெறுவதற்கு மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையில் பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் பள்ளி வளர்ச்சிப் பணிகளுக்கான நிதி உதவியை மத்திய அரசு வழங்கும். இந்த திட்டத்தில் இதுவரை தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப், டெல்லி போன்ற மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

பள்ளிக் கல்வித் துறை

இந்த திட்டத்தில் இணைய வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இணையாத மாநிலங்களுக்கு வழங்கப்படு வந்த மத்திய அரசின் கல்வித் திட்ட நிதியை நிறுத்திவிட்டது. இதனால் தமிழகத்துக்கு வரவேண்டிய கடந்த ஆண்டு நான்காவது தவணை நிதி 573 கோடி ரூபாய் மற்றும் நடப்பாண்டு நிதியும் இதுவரை மத்திய அரசு விடுவிக்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடங்கி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வரை பலரும் கோரிக்கை வைத்தும் இதுவரை நிதி விடுவிக்கப்படவில்லை. பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டத்தில் இணைந்தால்தான் நிதி வழங்கப்படும் என்று மத்திய அரசு கூறுவதாகத் தமிழக அரசு தகவல் தெரிவிக்கிறது.

கடிதம் எழுதிய முதல்வர்!

நிதி நிறுத்தப்பட நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதில், “தமிழகம் உள்பட சில மாநிலங்களில் ‘சமக்ரா சிக்‌ஷா’ திட்டத்தின்கீழ் வழங்கப்பட வேண்டிய முதல் தவணை நிதி விடுவிக்கப்படவில்லை. 2024-25-ம் கல்வியாண்டில் தமிழகத்துக்கு ரூ.3,586 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் மத்திய அரசின் பங்கு ரூ.2,152 கோடியாகும் (60சதவீதம்). மத்திய அரசின் அந்த பங்களிப்பைப் பெறுவதற்கு ஏதுவாக முன்மொழிவுகள் ஏப்ரல் மாதமே சமர்ப்பிக்கப்பட்டது. எனினும், முதல் தவணையான ரூ.573 கோடியை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பிஎம்ஸ்ரீ பள்ளிகளில் தேசிய கல்விக் கொள்கையை (NEP) முழுமையாக அமல்படுத்துவதை, தற்போதைய சமக்ரா சிக்‌ஷா திட்டத்தின்கீழ் நிதியை அனுமதிப்பதற்கான முன் நிபந்தனையாக இணைக்க மத்திய அரசு முயல்வது தெரிய வந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட மாநிலங்களுக்கு நிதி தரப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையில் உள்ள குறிப்பிட்ட சில விதிகள் ஏற்புடையதாக இல்லை.

முதல்வர் ஸ்டாலின் / திமுக

பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் சேர புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறைந்தபட்ச மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. சமக்ரா சிக்‌ஷா திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு வழங்கவேண்டிய நிதியை நிறுத்தி வைக்கும் மத்திய அரசின் தற்போதைய நடவடிக்கை, பின்தங்கிய நிலையில் வாழும் லட்சக்கணக்கான குழந்தைகளின் கல்வி மற்றும் ஆசிரியர்களை நேரடியாகப் பாதிக்கும். இத்தகைய நடவடிக்கை சமக்ரா சிக்‌ஷா திட்டத்தின் பிரதான நோக்கமான எந்தவொரு குழந்தைக்கும் கல்வி வாய்ப்பு மறுக்கப்படக் கூடாது என்பதற்கு எதிரானது. எனவே, சமக்ரா சிக்‌ஷா திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்கப் பிரதமர் நரேந்திர மோடி இதில் நேரடியாகத் தலையிட வேண்டும். விவாதங்கள் தேவைப்படும் ஒரு கொள்கையைக் கல்விக்கான நிதி வழங்கிடும் விஷயத்துடன் பொருத்திடக் கூடாது” என்று குறிப்பிட்டிருந்தார். முதல்வர் ஸ்டாலின் மட்டுமின்றி தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் நிதியை நிறுத்தக்கூடாது என்று மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.

திமுக அரசின் நிலைப்பாடு

முதலமைச்சர் எழுதிய கடிதத்துக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “சமக்ரா சிக்‌ஷா திட்டத்தின் கீழ் தமிழகத்தைச் சேர்ந்த 10 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். புதிய கல்விக் கொள்கை தமிழ்நாட்டின் பள்ளிகளில் தமிழ் கற்பிப்பதற்கு ஆதரவு அளிக்கிறது. மத்திய அரசு பலமொழிகள் மற்றும் தாய்மொழியில் கல்வி பெறுவதை ஊக்குவிக்கிறது. தேசிய கல்விக் கொள்கையை முழுமையாகச் செயல்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திடவில்லை. பிஎம் ஸ்ரீ திட்டத்தைக் கல்வியின் தரத்தை மேம்படுத்த ஏற்றுக்கொள்வது அவசியம். தமிழக அரசு அளித்திருக்கும் உறுதிமொழியின்படி, ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

அன்பில் மகேஸ்

இந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், “நாங்கள் சமக்ரா சிக்‌ஷா அபியான் திட்டத்துக்காக நிதியைக் கேட்கிறோம். ஆனால், அவர்கள் பிஎம் ஸ்ரீ திட்டத்தைக் கணக்கில் கொண்டு பதிலளிக்கிறீர்கள். இதையும் அதையும் முடிச்சுப் போடாமல், தயவு செய்து நிதியைக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். எந்த சூழலிலும் கொள்கையை விட்டுக்கொடுத்து மத்திய அரசிடமிருந்து நிதியைப் பெற மாட்டோம். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருப்பதைப் போல, நாம் எந்த ஒப்பந்தத்துக்கும் ஒப்புக்கொள்ளவில்லை” என்று பேசினார்.

தமிழக அர்சு!

உண்மையில் திமுக அரசின் நிலைப்பாடு என்ன அதிகாரிகளிடம் என்ன பேசப்பட்டது என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் பேசினோம். “தற்போது மத்திய அரசு நிறுத்தியுள்ள நிதியினை 15 ஆயிரம் ஆசிரியர்கள், ஐந்தாயிரம் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் என மொத்தம் 20 ஆயிரம் பேருக்குச் சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு எப்படி நிதி ஒதுக்குவது என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது. அந்த கூட்டத்திலும் மத்திய அரசுக்கு எப்படி அழுத்தம் கொடுக்கவேண்டும் என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதே தவிர அவர்களின் கோரிக்கையை ஒப்புக்கொள்வதாகத் தமிழக அரசு இல்லை. எந்த சூழலிலும் நிதிக்காகத் தமிழக அரசின் எந்த கொள்கைகளையும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அழுத்தமாக பல்வேறு இடங்களில் சொல்லியிருக்கிறார். தற்போது மத்திய அரசு நிதி வழங்காத சூழலில் மாநில அரசின் நிதியிலிருந்து ஆசிரியர்களுக்குச் சம்பளம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று கூறினார்கள்.