இடம் பார்த்த த.வெ.க தலைமை!
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இவர் அரசியலுக்கு வருவார் என்று பேசப்பட்டு வந்து நிலையில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்திருக்கிறார் விஜய். இவர் ஆரம்பித்திருக்கும் புதிய கட்சிதான் தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. அரசியல் கட்சி ஆரம்பித்த கையேடு தனது கட்சியின் கொடியையும், பாடலையும் சமீபத்தில் வெளியிட்டிருந்தார். புதிய கட்சிக்குத் தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
அதோடு, கட்சியின் முதல் மாநாட்டை இந்த மாத இறுதிக்குள் நடத்தப்படும் என்றும் த.வெ.க கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். அதேபோலவே மாநாடு நடத்துவதற்குத் திருச்சி, சேலம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடங்களைப் பார்த்துவந்தனர். கடைசியாக விக்கிரவாண்டியில் த.வெ.க கட்சியில் முதல் மாநில மாநாடு நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக விழுப்புரம் காவல் ஆணையரிடம் அனுமதி கேட்டு கடிதம் அளித்திருந்தனர். அனுமதி இன்னும் வழங்கப்படாத நிலையில் காவல்துறை தரப்பில் விளக்கம் கேட்டு கடிதம் வழங்கப்பட்டிருக்கிறது.
கேள்வி கேட்ட காவல்துறை
மாநாட்டுக்கு 1.5 லட்சம் பேர் வரக்கூடும் என்று அனுமதி கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. த.வெ.க கட்சி சார்பில் புஸ்ஸி ஆனந்த் கடிதம் அளித்திருந்த நிலையில், மாநாடு நடைபெறும் இடத்தை காவல்துறை அதிகாரிகள் கட்சி நிர்வாகிகளுடன் சென்று நேரில் பார்வையிட்டனர். மேலும் மாநாடு நடத்துவது குறித்து காவல்துறை சார்பில் 21 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. அதில், `மாநாடு எந்த நேரத்தில் தொடங்கி எப்போது முடியும்… மாநாடு நடத்தத் திட்டமிட்டிருக்கும் இடத்தின் உரிமையாளர் விவரம் என்ன… மாட்டில் எத்தனை நாற்காலி போடப்படும். மாநாட்டு மேடையின் அளவு என்ன…
மாநாட்டுக்கு எந்தெந்த பகுதிகளிலிருந்து ஆள்கள் வருவார்கள். எத்தனை வாகனங்கள் வரும். அந்த வாகனங்கள் நிறுத்த இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதா… மாநாட்டில் கலந்துகொள்ளும், பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறதா… ஏற்பாடு செய்யப்படும் குடிநீர், கழிப்பறை வசதிகள்… வருபவர்களுக்கு உணவு எப்படி வழங்கப்படும்… மாநாட்டுக்கு இதனை வழித்தடங்கள் என்பது உள்ளிட்ட மாநாடு குறித்து பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டிருந்தது…”
வழக்கமான ஒன்றுதான்!
நடிகர் விஜய் புதிதாகக் கட்சி ஆரம்பிப்பது பிடிக்காமல் திமுக அரசு வேண்டுமென்றே அனுமதி வழங்காமல் இழுத்தடிக்கிறது என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த விவகாரம் குறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். “மாநாடு நடத்தவேண்டும் என்று ஆளும் கட்சி சார்பாக அனுமதி கேட்டாலும் பல விவரங்கள் கேட்கப்படும். பெரும்பாலும் திமுக, அதிமுக போன்ற கட்சிகள் மாநாட்டுக்கு அனுமதி கேட்கும்போது அவர்களே யாருடைய இடத்தில், எப்போது நிகழ்ச்சி தொடங்கும், யார் வருவார்கள், யாரிடம் எல்லாம் அனுமதி வாங்கப்பட்டிருக்கிறது, என்ன வசதிகள், ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கொடுத்துவிடுவார்கள். இவர்கள் அனுமதி கேட்டுக் கொடுத்த கடிதத்தில் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என்ற நேரம் கூட விரிவாக இல்லை.
ஒன்றரை லட்சம் பேர் வருகிறார்கள் என்றால், அவர்களுக்குத் தேவையான வசதிகள் என்ன செய்யப்படுகிறது என்பது தொடங்கிப் பாதுகாப்பு வசதிகள் அனைத்தையுமே தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கு இருக்கிறது. ஒன்றரை லட்சம் பேர் வருவார்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். அவர்களுக்கான வாகன நிறுத்தத்துக்கு என்ன செய்யப்போகிறார்கள் என்பதும் முக்கியம். அனைத்துக்கும் பதில் கிடைத்துவிட்டால் அனுமதி கொடுப்பதில் எங்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை.
அனுமதி கொடுக்கக்கூடாது என்று எந்த அழுத்தமும் யாரிடமிருந்தும் எங்களுக்கு வரவில்லை. அவர்கள் தரப்பு பதில் வந்ததும் ஆய்வு செய்து முடிவு செய்யப்படும். இப்போது அரசியல் காரணத்துக்காக அனுமதி மறுக்கப்படுகிறது என்று சொல்வது ஒருபுறம் இருந்தாலும். சரியான விளக்கங்கள் எதுவும் இல்லாது அனுமதி கொடுத்து அசம்பாவிதம் நடந்தாலும் அது அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும். அனைத்தையும் ஆலோசனை செய்யவேண்டிய தேவை எங்களுக்கு இருக்கிறது” என்றார்கள் விரிவாக.
`கண்டிப்பாக மாநாடு நடக்கும்’
காவல்துறை கேள்வி கேட்டிருக்கும் நிலையில் த.வெ.க சார்பில் அனுமதியைப் பெற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து அந்த கட்சியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் சிலரிடம் பேசினோம். “அனுமதி கேட்டு விழுப்புரம் எஸ்பி-க்கு கடிதம் கொடுத்தோம். அந்த கடிதம் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்கிடம் சென்று அவர் சொன்ன உத்தரவின் அடிப்படையில் காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்து அனுப்பினார்கள். அடுத்ததாக மாநாடு விவரங்கள் தொடர்பாகக் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. எங்கள் வழக்கறிஞர் குழுவுடன் ஆலோசனை செய்து அந்த கேள்விகளுக்குப் பதில்களைத் தயார் செய்துவிட்டோம். அடுத்த ஓரிரு தினங்களில் பதில் கடிதம் ஒப்படைக்கப்படும்.
இதற்கு முன்பாக எந்தெந்த மாநாடு நடைபெற்றது, அதில் என்ன நடந்தது என்பது குறித்தும் ஆய்வு செய்து, அதில் நடந்த குளறுபடிகள் மீண்டும் நடக்காதபடி இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்திருக்கிறோம். அதேபோல, மாநாட்டுக்கு வருபவர்களின் வாகனங்களை நிறுத்துவதும் பெரிய சிக்கலாக இருக்கும். அதனையும் சரி செய்யக் கிட்டத்தட்ட பத்து ஏக்கரில் இடம் தேர்வு செய்து வைத்திருக்கிறோம். எங்கள் தரப்பில் அனைத்து ஆவணங்களையும் சரியாகத் தயாரித்து வைத்திருக்கிறோம். இவற்றைத் தாண்டி அனுமதி மறுக்கப்பட்டால் நீதிமன்றம் சென்று அனுமதி பெறவும் தயாராக இருக்கிறோம். கண்டிப்பாகத் தலைவர் அறிவித்த தேதியில் மாநாடு நடைபெறும்” என்றார்கள் உறுதியாக.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY