`கூட்டணி குறித்து நான் பேசியதை தவறாகச் சித்திரித்துவிட்டனர்’ – அமைச்சர் கேஎன் நேரு விளக்கம்

திருச்சி மாவட்டம், லால்குடியில் உள்ள மண்டபத்தில் ஒன்றிய அளவிலான தி.மு.க பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய தி.மு.க முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு, “கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த அமைப்பு, வரும் சட்டமன்றத் தேர்தலில் இருக்கும் என்று சொல்ல முடியாது”என்று பேசினார். அதைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சிகள் ஒற்றுமை பற்றி அமைச்சர் தவறாகப் பேசுகிறார் என்ற அளவில் கே.என்.நேருவின் பேச்சு சர்ச்சையானது. இந்நிலையில், இந்திய நாட்டின் விடுதலைப் போராட்ட வீரரும், சுதேசி கப்பலோட்டிய தமிழருமான தியாகி வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 153 – வது பிறந்த தினத்தை முன்னிட்டு, திருச்சி நீதிமன்றம் எதிரே உள்ள வ.உ.சி-யின் முழு உருவச்சிலைக்கு, பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், திருச்சி நீதிமன்றம் எதிரே உள்ள வ.உ.சி சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

கே.என்.நேரு

“லால்குடியில் கூட்டணி பற்றி நான் பேசியதை திருத்தி தவறாக செய்தி வெளியிட்டுள்ளனர். எங்கள் கூட்டணி சரியான கூட்டணி. தி.மு.க தலைவர் எங்கள் கூட்டணியை எப்பொழுதும் விட்டுக் கொடுக்கமாட்டார். ஜெயலலிதா 38 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலமைச்சராக ஆன பின்பு சட்டமன்றத்தில் பெருமையாகப் பேசினார்கள். அதேபோல், கலைஞருக்குப் பின்பு தளபதி ஆட்சியை தொடர்ச்சியாக அடுத்த முறையும் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் நான் பேசினேன். கூட்டணியை நாங்கள் யாரும் விட்டுக் கொடுத்து போவதில்லை. எங்கள் கூட்டணி அருமையான கூட்டணி. கூட்டணி கட்சி தலைவர்கள் எங்களிடம் அருமையாக பழகிக்கொண்டு உள்ளனர். வேண்டும் என்றே நான் பேசியதை மாற்றி செய்தி வெளியிட்டுள்ளனர்” என்றார்.