சமீப ஆண்டுகளாக, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், குறிப்பாக பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் புல்டோசர்களைக் கொண்டு வீடுகளை இடிக்கும் காட்சிகள் அதிகரித்திருக்கின்றன. இந்த நடவடிக்கைளுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தற்போது கடுமை காட்டியிருக்கிறது!
புல்டோசர் கலாசாரத்தை முதலில் தொடங்கியது உத்தரப்பிரதேச பா.ஜ.க அரசுதான். குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகளை இடிக்கும் நடவடிக்கையை வாடிக்கையாக செய்து வந்தார் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத். இதனால் அவரை, `புல்டோசர் பாபா’ என்றே அவரது ஆதரவாளர்கள் அழைத்துவந்தனர். தொடர்ந்து, அண்டை மாநிலமான மத்தியப் பிரதேசத்துக்கும் இந்தக் கலாசாரம் பரவியது. அப்போதைய ம.பி முதல்வரும், இப்போதைய மத்திய அமைச்சருமான சிவராஜ் சிங் செளகானுக்கு இதனால் `புல்டோசர் மாமா’ என்று பெயரிட்டனர் பா.ஜ.க ஆதரவாளர்கள்.
ஹரியானா, ராஜஸ்தான் போன்ற பா.ஜ.க ஆளும் மாநிலங்களிலும் புல்டோசர் கலாசாரம் பரவ, மாநில பா.ஜ.க அரசுகளின் அடையாளச் சின்னங்களாக மாறின புல்டோசர்கள். புல்டோசர்கள் மூலம் இடிக்கப்பட்ட வீடுகளில் பெரும்பான்மையானவை இஸ்லாமிய மக்களுக்குச் சொந்தமானது. இதனால், “சிறுபான்மை மக்களை ஒடுக்க பா.ஜ.க கொண்டுவந்திருக்கும் புது ஆயுதம்தான் புல்டோசர்” என விமர்சனங்கள் கிளம்பின.
இந்த நிலையில், 2022-ம் ஆண்டு, டெல்லியின் ஜாஹாங்கிர்புரியில் நடந்த அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வகுப்புவாத வன்முறைகள் வெடித்தன. அந்தச் சமயத்தில், ஜாஹாங்கிர்புரியிலுள்ள இஸ்லாமியர்களின் வீடுகள் பலவும் புல்டோசர்கள் கொண்டு இடிக்கப்படவே, உச்ச நீதிமன்றம் தலையிட்டு அதற்குத் தடை விதித்தது. இதையடுத்து, புல்டோசர் கலாசாரத்துக்கு தடைவிதிக்கக் கோரி பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்த நிலையில், அது தொடர்பாக பொதுநல மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இது தொடர்பான மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, உ.பி அரசின் சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “குற்றம்சாட்டப்பட்டவர் என்பதற்காக ஒருவரின் வீட்டை இடிக்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. முறையான அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு நீண்ட காலம் முன்பாகவே நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பது தொடர்பாக பிரமாணப் பத்திரத்தில் நாங்கள் தாக்கல் செய்துள்ளோம்” என்று வாதிட்டார்.
நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாத் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, “ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் என்ற அடிப்படையில் அவரது வீட்டை எப்படி இடிக்க முடியும்… குற்றவாளியாக இருந்தால்கூட சட்டத்தின் விதிமுறைகளை பின்பற்றாமல், அவரது வீட்டை இடிக்க முடியாது. எந்தவொருக் கட்டடத்தை இடிக்கவும் சட்டங்கள் உள்ளன. ஆனால், அவை அடிக்கடி மீறப்படுகின்றன. கட்டுமானங்கள் இடிப்பது தொடர்பாக முழு நாட்டுக்குமான ஒரு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுப்போம்” என்று கூறியிருக்கின்றனர்.
உச்ச நீதிமன்றத்தின் கருத்துகளை வரவேற்றிருக்கும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “கட்டுக்கடங்காத அதிகாரத்தின் அடையாளமாக மாறிய புல்டோசர், குடிமக்களின் உரிமைகளை காலில் போட்டு மிதித்து, ஆணவத்துடன், தொடர்ந்து சட்டத்துக்குச் சவால் விடுத்து வருகிறது. ‘விரைவான நீதி’ என்ற போர்வையில், சாதாரண குடிமக்கள், ஏழைகளின் வீடுகள்மீது ‘பயத்தின் ஆட்சியை’ நிறுவும் நோக்கத்துடன் புல்டோசர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த விஷயத்தில், உச்ச நீதிமன்றம் தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிடும் என்றும், பா.ஜ.க அரசாங்கத்தின் இந்த ஜனநாயக விரோத செயல்பாடுகளிலிருந்து குடிமக்களைப் பாதுகாக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம். பாபா சாகேப் அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி நாடு இயங்கும், அதிகாரத்தின் சாட்டையால் அல்ல” என்று கூறியிருக்கிறார்.
உ.பி காங்கிரஸ் தலைவர் அஜய் ராய், “உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நாங்கள் வரவேற்கிறோம். மக்களுக்கு நீதி கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் சட்டத்தின்படியே இருக்க வேண்டும். நீதித் துறையில் புல்டோசர்களுக்கு இடம் இல்லை” என்றிருக்கிறார்.
சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், “சுயநலத்துக்காக சிலர் புல்டோசரைப் பயன்படுத்துகின்றனர். 2027-ல் சமாஜ்வாடி ஆட்சி அமைந்தவுடன் மாநிலத்தில் உள்ள அனைத்து புல்டோசர்களும் கோராக்பூரை நோக்கி திருப்பிவிடப்படும்” என்று கூறியிருக்கிறார். அதாவது, `யோகி ஆதித்யநாத் மாடாதிபதியாக செயல்பட்ட கோரக்பூர் நகருக்கு புல்டோசர்களை அனுப்பிவிடுவோம்’ என்பதைக் குறிக்கும் வகையில் அகிலேஷ் பேசியிருக்கிறார்.
அகிலேஷுக்குப் பதிலடி கொடுத்துப் பேசிய ஆதித்யநாத், “புல்டோசரை இயக்க அனைவரும் தகுதியானவர்கள் அல்ல. மனதில் துணிவு கொண்டவர்களால் மட்டுமே அதனை இயக்க முடியும். கலவரக்காரர்களுக்கு முன்பு மண்டியிடுபவர்களால் புல்டோசர் முன் நிற்க முடியாது” என்று பேசியிருக்கிறார்.
உச்ச நீதிமன்றம் கண்டித்த பிறகும், யோகி ஆதித்யநாத் இப்படிப் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாகப் பேசும் தேசிய அரசியல் பார்வையாளர்கள், “இதுவரையிலும் சுமார் ஒன்றரை லட்சம் வீடுகள் புல்டோசர் நடவடிக்கைகள் மூலம் இடிக்கப்பட்டிருக்கின்றன. இதில் பெரும்பாலான வீடுகள் இஸ்லாமியர்களுக்குச் சொந்தமானது. அவர்களை அச்சுறுத்தவே யோகி தலைமையிலான உ.பி அரசு இப்படிச் செய்கிறது. அவரைப் பின் தொடர்ந்து, பா.ஜ.க ஆளும் மாநிலங்களிலும் இந்த முறை பின்பற்றப்பட்டது.
ஆனால், தற்போது உச்ச நீதிமன்றம் எழுப்பியிருக்கும் கேள்விகள் தீவிரமானவை. எனவே, இந்த நடவடிக்கை மூலம் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட யோகி ஆதித்யநாத்துக்கு உச்ச நீதிமன்றத்தின் கருத்துகள் செக் வைத்திருக்கின்றன. இப்போது புல்டோசர் பயன்பாடு குறித்து யோகி வீராப்பாக பேசினாலும், கட்டுமானங்கள் இடிப்பு தொடர்பான வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் வெளியிட்ட பிறகு, புல்டோசர் நடவடிக்கைகள் நிச்சயம் கட்டுக்குள் வரும்” என்கிறார்கள்.