சி.பி.ஐ ஜூன் 26-ல் கெஜ்ரிவாலைக் கைதுசெய்தது. ஆகஸ்ட் 5-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் அவரது கைதை உறுதி செய்தது. ஆகஸ்ட் 14-ம் தேதி கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்தது. மேலும் ஜெஜ்ரிவால் கைது குறித்து சி.பி.ஐ விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது.
இந்த வழக்கு, இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் உஜ்ஜால் புயான் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, கெஜ்ரிவால் கைதுசெய்யப்படும் முன் சி.பி.ஐ நோட்டீஸ் அனுப்பவில்லை என்றும், விசாரணை நீதிமன்றம் ஒருதலை பட்சமாக கைது உத்தரவு பிறப்பித்தது என்றும் வாதாடினார்.
மேலும் கெஜ்ரிவாலின் பெயர் சி.பி.ஐ எஃப்.ஐ.ஆரில் இல்லை என்றும், அரசியலமைப்புச் செயல்பாட்டாளரான அவர் தப்பியோடும் அபாயம் இல்லை என்றும் தெரிவித்தார்.
பண மோசடி வழக்கில் ஏற்கெனவே உச்ச நீதிமன்றமும் விசாரணை நீதிமன்றமும் அவருக்கு ஜாமீன் வழங்கியிருப்பதைச் சுட்டிக்காட்டினார். மேலும், “மதுபானக் கொள்கை வழக்கு காரணமாக சிறையில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலை, 2 ஆண்டுகள் கைதுசெய்யாமல் இருந்த சி.பி.ஐ, அமலாக்கத்துறை பண மோசடி வழக்கில் ஜாமீன் பெற்ற பிறகு ஜூன் 26-ம் தேதி `முன்கூட்டிய கைது (Insurance Arrest)’ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது” எனக் குற்றம்சாட்டினார்.
அப்போது அபிஷேக் சிங்வியிடம், “நீங்கள் ஜாமீனுக்காக வாதாடுகின்றீர்களா, அவரது கைதை எதிர்த்து வாதாடுகிறீர்களா, இரண்டையும் கலக்க முடியாது” என நீதிபதிகள் தெரிவித்தனர்.
டெல்லி உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் ஜாமீன் குறித்து விசாரணை நீதிமன்றத்தில் மனு அளிக்கக் கூறியிருந்தது. ஆனாலும் அவர் மீண்டும் உயர் நீதிமன்றத்திலேயே மனு அளித்தார் என்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது என வாதாடினார், சி.பி.ஐ சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்.