“பா.ஜ.க வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் தி.மு.க கூட்டணியில் தொடர்கிறேன்!”

பா.ஜ.க-வுடன் தி.மு.க காட்டிவரும் இணக்கம், சர்ச்சையான முருகன் மாநாடு, தி.மு.க கூட்டணிக்குள் ஏற்பட்டிருக்கும் முரண்பாடு உள்ளிட்ட கேள்விகளுடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகனைச் சந்தித்தேன்…

“எல்லோரும் முருகன் மாநாட்டின் தீர்மானங்களை விமர்சித்துக்கொண்டிருக்கும்போது, நீங்களோ ‘மாநாடு நடத்தியதே தவறு’ என்கிறீர்களே ஏன்?!”

“மதச்சார்பற்ற கொள்கையைப் பேசி, அனைத்து மதத்தினரின் வாக்குகளையும் பெற்று ஆட்சி அமைத்த தி.மு.க அரசு, இப்போது முருகருக்கு மாநாடு நடத்தியதை நான் எதிர்க்கிறேன். மதச்சார்பற்ற அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் தலைமையில் இப்படியான நிகழ்வுகளை நடத்தலாமா… அதிலும், ‘ஆன்மிகப் பாடல்களை பள்ளிப் பாடத்தில் கொண்டுவருவோம்’ என்றெல்லாம் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மதச்சார்பின்மைக்கு முற்றிலும் விரோதமானவை!”

“ ‘திராவிட மாடல் அரசு எல்லோருக்குமானது’ என்கிறபோது, ஆன்மிக உணர்வாளர்களுக்கான ஒரு நிகழ்வாகத்தானே மாநாட்டைப் பார்க்க வேண்டும்?”

“அப்படியென்றால், இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்துவர்களுக்குமான விழாவை இப்படி அரசே எடுத்து நடத்தி அவர்கள் விரும்பும் தீர்மானத்தை அரசு முன்னெடுக்குமா… முதலில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள அனைத்துக் கோயில்களிலும் தேவாரம், திருவாசகங்களைப் பாட தமிழ் ஓதுவார்களுக்கு அனுமதியில்லாத சூழலில், இப்படி வரலாற்றில் இல்லாத வகையில் கடவுளுக்கு மாநாடு நடத்தி, தீர்மானங்கள் நிறைவேற்றுவது பெரும்பான்மை மதத்தினரை ஆதரவாக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்குத்தானே ஆளாக்கும்!”

தி.வேல்முருகன்

“ ‘ஆளுநரின் தேநீர் விருந்து, கலைஞர் நினைவு நாணயம் வெளியீட்டு விழா இவை இரண்டும் அரசுத் தரப்பு நிகழ்ச்சிகள்’ என தி.மு.க விளக்கமளித்துவிட்ட பிறகும்கூட விமர்சித்துக்கொண்டேயிருக்கிறீர்களே?”

“தி.மு.க அரசு தயாரித்த உரையைத்தான் சட்டமன்றத்தில் வாசிக்க மறுத்தார் ஆளுநர். மேலும், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு எதிராகவும் செயல்பட்டார். இப்படி அரசுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் குரலாகச் செயல்படுபவரின் நிகழ்ச்சியில், ‘அரசுத் தரப்பில் பங்கேற்றோம்’ எனச் சொல்வதும், ‘தி.மு.க அரசுக்கும் கட்சிக்கும் வெவ்வேறு நிலைப்பாடுகள் உண்டு’ என்பதிலும் எந்த லாஜிக்கும் இல்லையே! ஒன்றிய அரசின் பிரதிநிதி இல்லாமல் எம்.ஜி.ஆருக்கு எடப்பாடி பழனிசாமி நாணயம் வெளியிடும்போது, கலைஞரின் நினைவு நாணயத்தை ஆசிரியர் கி.வீரமணி போன்ற முன்னோடிகளைவைத்து வெளியிடாமல், தி.மு.க ஆட்சியைக் கலைக்க மனு கொடுத்த ராஜ்நாத் சிங்கை ஏன் அழைக்க வேண்டும்?”

“தி.மு.க ஆட்சியில் அதிகாரிகள்தான் தவறு செய்கிறார்கள் என முன்பு சொல்லிவந்த நீங்கள், இப்போது ஆட்சியாளர்கள்மீதே குற்றம்சாட்டுகிறீர்களே… இரண்டில் எது உண்மை?”

“சாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு, நில வளம் சார்ந்த மக்கள் போராட்டம் உள்ளிட்ட பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்பதில் அரசின் மீதும், முதலமைச்சர் மீதும் ஆதங்கம் இருப்பது உண்மைதான். அதேசமயம் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க மனப்பான்மையில் செயல்பட்டு, இட ஒதுக்கீடு கோரிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள் சில அதிகாரிகள். ஆளுநர் மற்றும் மத்திய உள்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் அதிகாரிகளும், வடநாட்டு அதிகாரிகளும் தமிழர்களை உயர் பொறுப்புகளுக்கு வரவிடாமல், தங்களுக்கு வேண்டியவர்களை நியமித்துக்கொள்கிறார்கள். தி.மு.க ஆட்சி என்றில்லை, இரு திராவிட ஆட்சிகளிலுமே அமைச்சர்களும் முதலமைச்சர்களும் அதிகாரத்தைக் கைவசம் வைத்திருக்காமல், இப்படி அதிகாரிகளை ஆளவிட்டால் சமூக நீதி எங்கிருந்து வரும்?”

“சரி… இப்படி உங்கள் கோரிக்கைகளெல்லாம் அலட்சியப்படுத்தப்படும் கூட்டணியில் ஏன் தொடர்கிறீர்கள்?”

“தமிழ்நாட்டு மக்களுக்காக உரிமைக்குரல் எழுப்புவதற்கு எம்.எல்.ஏ-வாக வேண்டும்… அதற்கு திராவிடக் கட்சிகளோடுதான் கூட்டணி வைக்கவேண்டியிருக்கிறது. எனக்கான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு மண்ணுக்கும் மக்களுக்கும் தீர்வு கண்டிருக்கிறேன். தி.மு.க ஆட்சியிலும் பிரச்னைகளைச் சுட்டிக்காட்டி தீர்வு காண முயல்கிறேன்… அதற்கான சூழலை முதலமைச்சரே ஏற்படுத்திக் கொடுத்தாலும் அதிகார வர்க்கம் இடையில் புகுந்து தடுக்கிறது.”

“பா.ம.க-வுடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நெருக்கம் காட்டுவதன் பின்னணி என்ன… ராமதாஸை ரகசியமாக சந்தித்தீர்களாமே?”

“பா.ம.க நிறுவனர் ராமதாஸை ரகசியமாகச் சந்திக்கவேண்டிய அவசியம் எனக்கில்லை. அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படுகிற பொதுத் தலைவராக வளர்ந்துவரும் நான், மீண்டும் பா.ம.க-வோடு இணையப்போவதில்லை. சமூக நீதி போராட்டக் களத்துக்கு ராமதாஸ் அழைத்தால் அதைப் பரிசீலிப்பேன் என்றுதான் சொல்லிவருகிறேன்.”

“கொடி அறிமுகம் செய்து மாநாட்டுக்குத் தயாராகும் விஜய் கட்சியின் பெயரும், `TVK’ என்றே அடையாளப் படுத்தப்படுகிறதே?”

“பல ஆண்டுகளாகவே பத்திரிகை ஊடகங்களில் எங்கள் கட்சியும் `TVK’ என அடையாளப்பட்டிருக்கிறது. எனவே, விஜய் தன் கட்சியின் பெயரை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனப் பொதுவெளியில் கோரிக்கை விடுக்கிறேன். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கும் முறையாகக் கடிதம் எழுதியிருக்கிறேன். மற்றபடி அரசியலுக்கு வரும் விஜய்யை வரவேற்கிறேன். மத்திய, மாநில அரசுகளில் தமிழர்களின் பிரதிநிதித்துவம், தத்தளிக்கும் தமிழ்ச் சமூகத்தின் பிரச்னைகள் குறித்தும், தமிழீழம் பற்றியும் சரியான நிலைப்பாட்டை எடுத்தால் அவரைப் பாராட்டவும் செய்வேன்!”

“அப்படியென்றால், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கூட்டணி நிலைப்பாட்டில் விரைவிலேயே மாற்றத்தை எதிர்பார்க்கலாமா?”

“தி.மு.க-வுடன் பல்வேறு பிரச்னைகளும், அவர்கள்மீது கோபமும் இருந்தாலும் மனிதகுல விரோத பா.ஜ.க தமிழ்நாட்டில் வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் அத்தனையையும் பொறுத்துக்கொண்டு தி.மு.க கூட்டணியில் தொடர்கிறேன். இதுதான் எங்களது இப்போதைய நிலைப்பாடு!”