‘சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தும் ஆர்எஸ்எஸ்’ – கவனத்தில் கொள்ளுமா மோடி அரசு?!

சாதிவாரி கணக்கெடுப்பு

இந்தியாவில் ஆங்கிலேயர் காலத்தில் 1931-ம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில்தான் தற்போது வரையில் இடஒதுக்கீடு மற்றும் நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இந்தச்சூழலில் கடந்த 2011-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சமூக பொருளாதார சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் அரசியல் காரணங்கள் இருப்பதாகச் சொல்லி அதனை வெளியிடவில்லை. பிறகு ஆட்சிக்கு வந்த பா.ஜ.க-வும் புள்ளிவிவரங்களை வெளியிடவில்லை. இந்த சூழலில்தான் மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என அரசியல் காட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன.

சாதிவாரி கணக்கெடுப்பு

இதுதொடர்பாக காங்கிரஸ், தி.மு.க, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிரமாகக் குரல் எழுப்பி வருகின்றன. ‘நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்’ எனக் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்தது. அப்போது பேசிய ராகுல் காந்தி, “சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது முக்கியமானது. அதைச் செய்யாமல் கொள்கைகளை வகுக்க முடியாது. தலித்துகள், பிற்படுத்தப்பட்டவர்கள், பழங்குடி மக்கள், பெண்கள், சிறுபான்மையினர், பொதுப்பிரிவினர் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பது தெரிந்து கொள்ள வேண்டும். அப்படிச் செய்யாமல் அவர்களுக்கென்று எவ்வாறு கொள்கைகளை வகுக்க முடியும்?” எனத் தெரிவித்திருந்தார்.

மத்திய அரசு சொல்லும் காரணம்

’இதேபோல் தி.மு.க-வும் சாதிவாரி கணக்கெடுப்பில் தீவிரம் காட்டி வருகிறது. தமிழக சட்டமன்றத்தில் கடந்த 2011-ம் ஆண்டு, “இந்திய மக்கள் அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் சம உரிமை மற்றும் வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் திட்டங்களைத் தீட்டி, சட்டங்கள் இயற்ற வழிவகை செய்யச் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம். எனவே, 2021-ம் ஆண்டு மேற்கொள்ள வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனே தொடங்க வேண்டும். அத்துடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் இணைத்தே நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறோம்” எனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு எதிர்க்கட்சிகள் பலவும் சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி வரும் சூழலில் மத்திய அரசு தயக்கம் காட்டி வருகிறது.

முதல்வர் ஸ்டாலின்

முன்னதாக இதற்கான காரணம் குறித்து மத்திய அரசு வழக்கு விசாரணை ஒன்றின் போது அளித்த பதிலில், “சமூக-பொருளாதார சாதிக் கணக்கெடுப்பை நடத்துவது நிர்வாக ரீதியாகக் கடினமானது. அதேநேரத்தில் சிக்கலானதும் கூட. இதற்கு ஒரே பட்டியலில் பல்வேறு சாதி வகைகள் இருக்கின்றன, அதாவது மத்திய பட்டியலில் 2,479 பிற்படுத்தப்பட்ட சாதிகள் இருக்கின்றன. ஆனால் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பட்டியல்களின்படி 3,150 சாதிகள் உள்ளன. ஆகவே மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதி தொடர்பான கேள்வியைக் மக்களிடம் கேட்டால் சரியான பதில் கிடைக்காது. அதாவது அவர்கள் ஆயிரக்கணக்கான சாதிகளின் பெயர்களைத் தெரிவிப்பார்கள். இதனால் தரவுகளைச் சேகரிப்பதில் சிக்கல் ஏற்படும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேநேரத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதி ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டுவந்திருக்கிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதுகுறித்து அப்போது கருத்து தெரிவித்த தி.மு.க எம்.பி.வில்சன், “மக்கள் தொகையில் 2% இருப்பவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. 80% இருப்பவர்களுக்கு 27% வழங்கப்படுகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அப்போது இட ஒதுக்கீட்டில் உள்ள பிரச்னை சீர் செய்யப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி

ஆனாலும் பா.ஜ.க சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தத் தயக்கம் காட்டி வருகிறது. இதுதொடர்பாக கடந்த ஆண்டு சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “மக்கள் தொகையில் ஏழைகள்தான் அதிகம் இருக்கிறார்கள். அவர்களுக்குத்தான் அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும். அதுதான் எனது விருப்பம். மக்கள் தொகை அடிப்படையில் உரிமைகளை முடிவு செய்ய வேண்டுமென்றால் பெரும்பான்மை சமூகத்திற்கு அனைத்து உரிமைகளும் கிடைத்துவிடும். மறுபக்கம் சிறுபான்மையினருக்கு எந்த உரிமையும் கிடைக்காது. மக்களைச் சாதி, மத அடிப்படையில் துண்டாடக் காங்கிரஸ் விரும்புகிறது. காங்கிரஸ் கட்சி ஊழலை வளர்க்கும் கட்சி” எனப் பேசியிருந்தார்.

ஆர்.எஸ்.எஸ் சொல்லியது என்ன?

இந்த சூழலில்தான் பா.ஜ.க-வின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாகக் கூறப்பட்ட கருத்துக்கள்தான் தற்போதைய ஹாட் டாபிக். ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் அகில இந்திய ஒருங்கிணைப்புக் கூட்டம் கேரளாவின் பாலக்காட்டில் நடைபெற்றது. அதில் பேசிய தேசிய செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேத்கர், “சாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் உணர்ச்சிகரமான விஷயம். இது நமது தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு முக்கியமானது. இது மிகவும் தீவிரமாகக் கையாளப்பட வேண்டும். சில சமயங்களில், அரசாங்கத்துக்கு எண்கள் தேவைப்படுகின்றன. அப்போதுதான் அவர்களின் வளர்ச்சிக்குச் சிறப்புக் கவனம் செலுத்த முடியும். அதற்காகவே சாதிவாரி கணக்கெடுப்பு என்றால், பிரச்னை இல்லை. கடந்த காலங்களிலும் இது போன்ற கணக்கெடுப்புகள் நடந்துள்ளன. ஆனால் அது, அந்த சமூகங்கள் மற்றும் சாதிகளின் நலனைப் பற்றிப் பேசுவதாக இருக்க வேண்டும். அது ஓர் அரசியல் கருவியாகவோ அல்லது தேர்தல் பிரச்சாரத்துக்காகவோ பயன்படுத்தப்படக் கூடாது” என்றார்.

ஆர்எஸ்எஸ் – பாஜக

இதையடுத்து ஆர்எஸ்எஸ் கருத்தைக் கவனத்தில் கொள்ளுமா மோடி அரசு என்கிற கேள்வியுடன் மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் பேசினோம், “ராகுல் காந்தி பேசுவதாலேயே சாதிவாரி கணக்கெடுப்பு அரசியலாகிவிடாது. அப்போது பாஜக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இருப்பது என்ன அரசியல்?. பிற்படுத்தப்பட்டோருக்கு அதிகமான இட ஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும். உயர் சாதியினரின் வாக்குகள் உங்களுக்குக் கிடைக்காது. ஓ.சி பிரிவில் கைவைத்து விடுவார்கள் என்பதால் தானே எதிர்க்கிறீர்கள். சமூக நோக்கத்தோடுதான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கேட்கின்றன. நீங்கள் எதற்காக அமைதியாக இருக்கிறீர்கள்.

நீதிமன்றத்தில் புள்ளிவிவரங்கள் தானே கேட்கிறார்கள். வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டில் கூட இதனால்தான் பிரச்னை ஏற்பட்டது. எனவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். எஸ்.சி, எஸ்.டி கணக்கெடுப்பு நடத்தும்போது ஓபிசியின் விவரங்களையும் சேகரிக்க வேண்டியது தானே?. பீகாரில் கொண்டுவரப்பட்ட இட ஒதுக்கீடு கூட சாதிவாரி கணக்கெடுப்பு சரியானது இல்லை என்று கூறி நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. ஆர்எஸ்எஸ் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு பேசும். முதலில் இட ஒதுக்கீடு வேண்டாம் என்று கூறிய இயக்கம்தான் ஆர்எஸ்எஸ். தேர்தலுக்கு ஏற்ப அவர்களின் கொள்கைகள் மாறும். ஓட்டுவாங்க வேண்டும் என்பதற்காக மாற்றி, மாற்றிப் பேசுவார்கள்.

ப்ரியன்

ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தி, அதன்பிறகு சமஸ்கிருதம், இந்தியாவை டெல்லியிலிருந்து ஆட்சி செய்ய வேண்டும். பெண்களுக்கான இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்பதில் ஆர்எஸ்எஸ் உறுதியாக இருக்கிறது. ஓட்டு வாங்குவதில் சிக்கல் இருப்பது தெரிந்தால் ஆதரவு தெரிவிப்பது போலத் தெரிவிப்பார்கள். வாக்குகள் கிடைத்த பிறகு கண்டுகொள்ள மாட்டார்கள். 370-ஐ நீக்குவோம் என்று சொல்லியா மெகபூபாவுடன் கூட்டணி வைத்தார்கள். இதுபோல் பல விஷயங்களைச் சொல்ல முடியும். ஆகவே அதிகாரத்தைப் பிடிக்க எப்படியான நெளிவு, சுழிவும் செய்துகொள்வார்கள். அவர்களுடைய கொள்கை இட ஒதுக்கீடு இருக்கக் கூடாது. எனவே ஆர்எஸ்எஸ் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனச் சொல்வதெல்லாம் போகிற போக்கில் சொல்லும் விஷயம். அவர்களது பேச்சுகள் நியாயம் இருப்பதாக தெரியவில்லை. சந்தேகத்துக்குரியது தான்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY