விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், மத்திய அரசின் சர்வோதயா சங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட காதி பவன் திறப்பு விழா நடைபெற்றது. இந்தநிகழ்ச்சியில் காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தின் தலைவர் மனோஜ் குமார் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு காதிபவனை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து, விருதுநகரில் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின்(KVIC), குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் மூலம் (எம்.எஸ்.எம்.இ) பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் மானியத்தொகை விடுவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்த காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணைய தலைவர் மனோஜ்குமார், பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், 270.77 கோடி ரூபாய் மானியத்தொகை விடுவித்தார்.
தொடர்ந்து அவர், நிகழ்ச்சியில் பேசுகையில், “பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் KVIC ஒவ்வொரு நாளும் புதிய சாதனைகளை படைத்து வருகிறது. பிரதமரின் பிராண்ட் பவர் காரணமாக, காதி மற்றும் கிராமத்தொழில் தயாரிப்புகளின் விற்பனை 2023-24 நிதியாண்டில் ரூ.1.5 லட்சம் கோடியை கடந்துள்ளது. மொத்தம் 10.17லட்சம் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (PMEGP) கீழ், 270.77 கோடி ரூபாய் மானியத்தொகை விடுவிக்கப்பட்டதன் மூலம் நாடு முழுவதும் 9,583 புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டு 1,05,413 புதிய நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த பயனாளிகளுக்கு மட்டும் ரூ.10 கோடி மானியம் கிடைத்திருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில், இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 9 லட்சத்து 58 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய திட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், PMEGP திட்டம் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் 83 லட்சத்திற்கும் அதிகமான புதிய வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 74 காதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 2023-24 நிதியாண்டில், காதி உற்பத்தி 224.12 கோடி ரூபாயாகவும், தற்போதைய காலகட்டத்தில் 397.63 கோடி ரூபாய் மதிப்பிலான காதி பொருட்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் காதி நடவடிக்கைகள் மூலம் மொத்தம் 11,872 கைவினைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர்” என பேசினார்.
நிகழ்ச்சியின் முன்னதாக, மூத்தக்குடி நூற்போருக்கு கதர் ஆடை அணிவித்து கெளரவித்த, காதி மற்றும் கிராமத்தொழில்கள் ஆணையத் தலைவர் மனோஜ்குமார், இளைஞர்களை கவரும் வகையில் காதி மூலமாக புதிதாக வடிவமைக்கப்பட்ட அங்கவஸ்திரத்தை அறிமுகப்படுத்தினார்.