கொலை முயற்சி வழக்கில் இந்திய குடியரசு கட்சி மாநில துணைத் தலைவர் கைது!

சேலம் சிவதாபுரத்தைச் சேர்ந்தவர் பிரம்மமூர்த்தி. பிரபல ரவுடியான இவர்மீது சேலம், நாமக்கல் காவல்நிலையங்களில் கொலை முயற்சி, திருட்டு வழக்கு உள்ளிட்ட 55 -க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்து வருகிறது. இதனை மறைப்பதற்காக இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) பிரிவில் மாநில துணைத்தலைவர் பதவியை வாங்கிக்கொண்டு அரசியல் போர்வையில் சமீபகாலமாக வலம்வந்துள்ளார்.

பிரம்மமூர்த்தி

கடந்த 2 மாதத்திற்கு முன் சேலம் மாவட்ட மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அது இவருடைய பிறந்தநாளன்று சேலத்தில் உள்ள முக்கிய ரவுடிகள் சிலர் கலந்துக்கொண்டு கேக் வெட்டியுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களின் மூலம் வைரலாகவே காவல்துறை மேல்மட்ட அதிகாரிகள் பிரம்மமூர்த்தியை உடனே கைது செய்யக்கூறி உத்தரவிட்டுள்ளனர். அதன்மூலம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை தெரிந்து பிரம்மமூர்த்தி தலைமறைவாகியுள்ளார். அவரை பிடிப்பதற்காக சங்ககிரி டி.எஸ்.பி ராஜா தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார் அப்போதைய எஸ்.பி அருண் கபிலன்.

இதற்கிடையில் சேலம் மாநகர செவ்வாய்பேட்டை காவல் நிலைய எல்லையில் 11.08.2024 அன்று பிறந்தநாள் விழா ஒன்றில் போலீஸாரால் தேடப்பட்டு வரும் பிரம்மமூர்த்தி தரப்புக்கும், மற்றொரு ரவுடி கும்பலுக்கும் இடையே அடிதடி தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்மூலம் செவ்வாய்பேட்டை போலீஸார் பிரம்மமூர்த்தி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர். ஆனால், அதிலிலும் பிரம்மமூர்த்தி தலைமறைவாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 02.09.2024 அன்று செவ்வாய்பேட்டை போலீஸார் வெங்கடப்பன் ரோட்டில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அப்போது ஃபார்சுனர் காரில் வந்த பிரம்மமூர்த்தி போலீஸாரைக் கண்டு தப்பியோட முயன்றுள்ளார். அப்போது போலீஸார் சேலம் அரசு மருத்துவமனை பழைய ஓ.பி கேட் அருகே சுற்றிவளைத்து பிடித்துள்ளனர். அப்போது காரில் இருந்த பிரம்மமூர்த்தியுடன் சிலர் இருந்துள்ளனர். மேலும் வாகனத்தை சோதனை செய்தபோது, பட்டாக்கத்தி ஒன்று இருந்தது மீட்கப்பட்டுள்ளது. ஆனால் போலீஸார் சம்பந்தப்பட்ட காரையோ, அதில் இருந்த நபர்களையோ கைது செய்யவில்லை. பிரம்மமூர்த்தியை மட்டும் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

கைது

இதுகுறித்து காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, “பிரம்மமூர்த்தியை ஏற்கனவே கைது செய்யக்கூறி சென்னை அளவிலான மேலதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். காரணம், அவரது பிறந்தநாள் விழாவில் சில ஏ-ப்ளஸ் ரவுடிகள் கலந்துக்கொண்டு கேக் வெட்டியுள்ளனர். அதனைத்தொடர்ந்து அவர் கட்டப்பஞ்சாயத்து போன்றவற்றில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால், அவரை கைது செய்துள்ளனர். மேலும் ஏற்கனவே இவர் சேலம் சிறையில் இருந்து வெளியில் வந்தபோது, சிறையின் வாசலிலேயே இவருடைய ஆதரவாளர்கள் கேக் வெட்டி, வெடி வெடித்து ஆரவாரமாக கொண்டாடினர். இந்த நிலையில் மீண்டும் சேலம் சிறையில் பிரம்மமூர்த்தியை அடைத்திருப்பது மேலும் பதட்டமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது” என்றனர்.