ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. பலர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலரைக் காணவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இயல்பு நிலைக்குக் கொண்டுவர முயன்றுவருவதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஆந்திர மாநிலத் துணை முதலமைச்சரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான நடிகர் பவன் கல்யாண் ஏன் வெள்ள பாதிப்புகளைச் சென்று பார்வையிடவில்லை எனக் கேள்வி எழுந்தது.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள பவன் கல்யாண், “நான் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாகச் சென்றால் அங்குக் கூட்டம் கூடி, நிவாரணப் பணிகள் தடைப்படலாம் என அதிகாரிகள் கோரிக்கை வைத்ததாலேயே பின்வாங்கிக்கொண்டேன்.” எனக் கூறியுள்ளார்.
“கடந்த 72 மணி நேரமாக அதிகாரிகள் இடைவிடாமல் பணியாற்றி வருகின்றனர். நான் நடவடிக்கைகளில் சேர்ந்தால், அது மீட்புப் பணிகளுக்கு உதவ வேண்டுமே தவிர, நானே அவர்களுக்குச் சுமையாக மாறிவிடக் கூடாது” என்றார்.
வெள்ள நிவாரணத்துக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் வழங்கியிருக்கிறார் பவன் கல்யாண்.
செப்டம்பர் 2 ஆம் தேதி பவன் கல்யாணுக்குப் பிறந்த நாள் வந்தது. அப்போது இரு மாநிலங்களைக் கடுமையாக வெள்ள தாக்கியிருந்தது. அப்போது, தான் பிறந்தநாளைக் கொண்டாடவில்லை என்றும், வெள்ள பாதிப்புகளை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் டிவிட்டரில் தெரிவித்திருந்தார் பவன் கல்யாண்.
முன்னணி தெலுங்கு நடிகரான மகேஷ் பாபு ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்குத் தலா 50 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார். மேலும், ஜூனியர் என்.டி.ஆர், சித்து ஜொன்னலகட்டா, விஷ்வக் சென், தயாரிப்பாளர்கள் நாக வம்சி, எஸ். ராதாகிருஷ்ணா மற்றும் இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் ஆகிய திரைத்துறையினரும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கியுள்ளனர்.