TVK Vijay: “தனித்து போட்டியா… தனிக் கூட்டணியா… விஜய் கையிலெடுக்கும் வியூகமென்ன?

`விஜய் தனித்துப் போட்டியிட முடிவெடுத்ததால்தான் சீமான் கூட்டணி நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டாரா?’ என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுந்திருக்கின்றன. இந்நிலையில் மெகா கூட்டணி அமைப்பதே கைக்கொடுக்குமென விஜய்க்கு அரசியல் ஆலோசகர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் சொல்கிறார்கள் விஜய் கட்சியினர். அவர்களது அரசியல் வியூகம்தான் என்ன?

அரசியல் கட்சி தொடங்கிய நடிகர்களான விஜயகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் முதல் தேர்தலில் தனித்தே போட்டியிட்டனர். இயக்குநராக இருந்த சீமானும் 234 தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்தினார். இதில் தே.மு.தி.க மட்டும் 8.4% வாக்குகளை பெற்று விஜயகாந்த் மட்டும் எம்.எல்.ஏ-வானார். நம்மிடம் பேசிய கட்சி விவகாரம் அறிந்த சிலர், “2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்பது விஜய்யின் விருப்பம். தனித்துப் போட்டியிடுவதே போதுமானதா அல்லது கூட்டணி அவசியமா என்பது குறித்து கட்சி தொடங்குவதற்கு முன்பிலிருந்தே ஆலோசனை செய்கிறார் அவர்.

த.வெ.க – விஜய்

விஜய்யின் அரசியல் ஆலோசகரான ஜான் ஆரோக்கியசாமி என்பவர் 2016-ல் `மாற்றம் முன்னேற்றம் அன்புமணி’ என்ற பா.ம.க-வின் தேர்தல் வியூக வகுப்பாளராகவும், 2021-ல் நா.த.க-வின் ஆலோசகராகவும் இருந்தவர். இதனால் எப்படியாவது பா.ம.க மற்றும் நா.க.க-வை கூட்டணியில் இணைக்க விரும்பினார். விஜய்க்கு ராகுல் காந்தி மற்றும் திருமாவளவன்மீது நன்மதிப்பு உண்டு. ஆகையால் மேற்படி கட்சிகளில் விஜய்யின் தலைமையை ஏற்பவர்களை ஒருங்கிணைத்து கூட்டணி அமைக்கவே விரும்புகிறது த.வெ.க முகாம்” என்கிறார்கள்.

நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள், “1967 முதலே தமிழ்நாடு அரசியலில் கூட்டணி பார்முலா தான் எடுபடுகிறது. 70 ஆண்டுகால தி.மு.க-வும், 50 ஆண்டுகால அ.தி.மு.க ஆகிய கட்சிகளே கூட்டணிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதை வைத்தும் விஜய்காந்த், கமல்ஹாசன் ஆகியோரின் அனுபவத்தை வைத்தும் தனித்து போட்டி கதைக்கு ஆகாதென விஜய் தரப்பினர் புரிந்து கொள்ளவேண்டும். மீறி தனித்துதான் போட்டியிடுவேன் என முடிவெடுத்தால் அவர் எதிர்பார்க்கும் தாக்கம் ஏற்படாது” என்றனர்.

ஸ்டாலின், அன்புமணி, சீமான்

நம்மிடம் பேசிய விஜய் கட்சியின் முக்கியப் புள்ளிகள், “கட்சி ஆக்ட்டிவாகாத இச்சூழலில் எந்த கட்சியும் எங்களுடன் கூட்டணிக்கோ வெளிப்படையான ஆதரவையோ தராது. எங்களுடன் வருவதாக சொன்ன சீமானும் `யார் தலைமை’ என்ற விவகாரத்தில் முரண்பட்டிருக்கிறார். இப்போதைக்கு தனித்துப் போட்டி என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி 234 சட்டமன்ற தொகுதிகளிலும் கட்சி வலுப்படுத்துகிறோம். எங்கள் தலைவர் விஜய் முழு நேர அரசியலுக்கு வந்து தமிழ்நாடெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆர்ப்பாட்டம், போராட்டமென அதிரடி காட்டும்போதுதான் பல அரசியல் கட்சிகள் கூட்டணிக்கு வர ஆயத்தமாவார்கள். அன்றைய சூழலை பொறுத்து கூட்டணி அமையலாம்.

ராகுல் காந்தி, திருமாவளவன் சந்திப்பு

மாநில கட்சிகளாக விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி ஆகியவற்றை நட்பு சக்தியாகவே பார்க்கிறோம். அதேபோல் காங்கிரஸ், இடதுசாரிகளுடனும் எந்த பிரச்னையுமில்லை. இப்போதைக்கு மறைமுக பேச்சுவார்த்தைகள் நடந்தாலும் முடிவு 2025 பிற்பகுதியில்தான் தெரியவரும்” என்றனர் நம்பிக்கையுடன்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY