அமைச்சர் பெரியகருப்பனின் சம்பந்தி கேபிஎஸ் கண்ணன் நேரடி அரசியலில் இறங்குகிறார் என்பது அரசல் புரசல் பேச்சாக இருந்த நிலையில், சமீபத்தில் அவர் நடத்திய கிருஷ்ண ஜெயந்தி நிகழ்ச்சி அதை உறுதிப்படுத்தியது.
தொழிலதிபராகவும், யாதவர் சமுதாயப் பிரமுகராகவும் உள்ள கேபிஎஸ் கண்ணன், கிருஷ்ண ஜெயந்தி அன்று மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியிலுள்ள 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சமுதாயக் கொடியை ஏற்றி விழாக்களை அவர் நடத்தியது அனைவராலும் கவனிக்கப்பட காரணம், அது அமைச்சர் மூர்த்தியின் தொகுதி என்பதுதான்.
ஏற்கனவே கேபிஎஸ் கண்ணனுக்கும், அமைச்சர் ராஜகண்ணப்பனின் ஆதரவாளர்களுக்கும் இடையே யாதவர் கல்லூரி நிர்வாகம் சம்பந்தமாக பிரச்னை ஏற்பட்டு நீதிமன்றம் வரை சென்ற நிலையில் தற்போது கிருஷ்ண ஜெயந்தி விழா கிழக்குத் தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்த என்ன காரணம் என்று கேபிஎஸ் கண்ணனிடமே கேட்டேன், “கிருஷ்ண ஜெயந்தி விழாவை கிழக்குத் தொகுதியில் கொடியேற்றி கொண்டாடியதை சமுதாய ரீதியாக நடந்தது சொல்ல முடியாது. அனைத்து சாதி, மதத்தினரும் கலந்துகொண்டு சிறப்பித்த விழா என்றுதான் சொல்ல வேண்டும். அந்தளவுக்கு மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
கிழக்குத் தொகுதியில் உள்ள யாதவர் சமூக மக்கள் இந்தாண்டு சிறப்பாக கொண்டாட வேண்டுமென்று முடிவெடுத்ததால் அத்தொகுதிக்குள் அமைந்துள்ள யாதவர் கல்லூரியில் தொடங்கி வரிசையாக ஒவ்வொரு ஊர்களிலும் யாதவர் குலக்க்கொடியை ஏற்றுவது என முடிவு செய்தோம். அதை சிறப்பாக செய்து முடித்தோம். மற்றபடி இதில் அரசியல் எல்லாம் இல்லை. காவல்துறை முதலில் அனுமதி தரவில்லை, அவரவர் சொந்த இடங்களில்தான் கொடியேற்றும் நிகழ்ச்சி என்பதால் அனுமதித்தார்கள். இது முழுக்க கண்ணனின் புகழ்பாடும், கீதை போதித்த நல்லொழுக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் நடத்திய விழாதான்.
இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை, எனக்கு அனைத்து சமூகத்திலும் நண்பர்கள் உள்ளனர். அனைத்து சமூகத்தினருக்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறோம், அந்த அடிப்படையில் இத்தொகுதியில் யாதவர் சமூகத்தினர் மெஜாரிட்டியாக இருந்தாலும், ஒவ்வொரு தேர்தலின்போதும் யாதவ சமுதாயத்தினருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. அதனால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் யாதவரை திமுக நிறுத்த வேண்டும் என்பதில் சமுதாய மக்கள் உறுதியாக உள்ளார்கள். அந்த கோரிக்கையை வலியுறுத்தும் வகையில்தான் சமூக ரீதியாக மக்கள் ஒருங்கிணைந்து வருகிறார்கள்.” என்றவரிடம்,
“நீங்கள் இந்த தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளீர்களா?” என்றோம்.
“யாதவருக்கு இத்தொகுதியை ஒதுக்க வேண்டுமென்பதுதான் எங்கள் முதல் கோரிக்கை. அப்படியே நான் போட்டியிட நினைத்தாலும் வேறு கட்சி சார்பில் போட்டியிட முடியாது, என் சம்பந்திக்காக திமுக சார்பில்தான் போட்டியிட வேண்டும்..” என்றார்.
உதயநிதி நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டில் தீவிரம் காட்டி வருவதால் தன் தொகுதியில் சக அமைச்சர் பெரியகருப்பனின் சம்பந்தி நடத்திய நிகழ்ச்சி குறித்து அமைச்சர் பி.மூர்த்தி தரப்பு கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில், இவர் நடத்திய நிகழ்ச்சிக்கு போட்டியாக, மற்றொரு குழுவினர் அமைச்சர் ராஜகண்ணப்பனின் மகன் பிரபு ராஜகண்ணப்பனை அழைத்து வந்து கிருஷ்ண ஜெயந்தி விழாவை கொண்டாடியதாக சொல்லப்பட்டது. இது குறித்து ராஜகண்ணப்பன் தரப்பில் கேட்டோம், “சமுதாயத்தின் பெயரை சொல்லிக்கொண்டு யாரோ நடத்திய கிருஷ்ண ஜெயந்தி விழா பற்றியெல்லாம் எங்களுக்குத் தெரியாது. எங்கள் அமைச்சரின் மகன் நீண்டகாலமாக மதுரையில் நடைபெறும் கிருஷ்ண ஜெயந்தி விழாக்களில் அமைதியாக கலந்துகொண்டு அமைதியாக திரும்பி விடுவார். அப்படியிருக்கும்போது யாருக்கும் போட்டியாக விழா நடத்துவது எங்கள் வழக்கமில்லை” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY