Ebrahim Raisi: `இப்ராஹிம் ரைசி மரணத்துக்கான காரணம் இதுதான்’ – விசாரணை அறிக்கை முடிவை அறிவித்த இரான்!

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) கடந்த மே மாதம், அஜர்பைஜான் நாட்டில் அணை திறப்பு விழாவில் கலந்துகொண்டுவிட்டு சொந்த நாட்டுக்குத் திரும்புகையில், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அப்போது இந்தச் சம்பவம் சர்வதேச அரசியலில் பேசுபொருளாக அமைந்தது. ஆரம்பத்தில், இப்ராஹிம் ரைசி மரணத்தில் இஸ்ரேலின் சதித்திட்டம் இருக்கலாம் என்ற பல பேச்சுகள் அடிபட்டன.

இரான் – இப்ராஹிம் ரைசி

இருப்பினும், இந்தச் சம்பவத்தில் சதி இருப்பதாகத் தெரியவில்லை என அமெரிக்கா கூறிவந்தது. இந்த நிலையில், இப்ராஹிம் ரைசியின் மரணம் தொடர்பான விசாரணையில் ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணத்தை அந்நாட்டு அரசு தற்போது தெரிவித்திருக்கிறது.

இப்ராஹிம் ரைசி

நேற்றைய தினம் இரான் அரசுத் தொலைக்காட்சி அறிவித்த விசாரணை அறிக்கையில், `ஹெலிகாப்டர் விபத்தானது சவாலான காலநிலை மற்றும் வளிமண்டல சூழலால் ஏற்பட்டது. குறிப்பாக, அடர்த்தியான மூடுபனி தோன்றியதால், ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானது. மேலும், ஹெலிகாப்டர் பாகங்களில் சதித்திட்டத்துக்கான எந்த அறிகுறியும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஹெலிகாப்டர் விபத்தில் இப்ராஹிம் ரைசி, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் உட்பட சிலர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.