மோடியின் புருனே பயணம் இந்தியாவுக்கு எப்படி பலனளிக்கும்?

பிரதமர் நரேந்திர மோடி இன்று புருனே சென்றடைந்துள்ளார். புருனே உடனான உறவை வலுப்படுத்தும் விதமாக இந்த பயணம் அமையும் எனக் கூறப்பட்டுள்ளது. வணிக ரீதியிலும் இந்த பயணம் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

புருனோ தீவில் உள்ள சிறிய நாடான புருனே, இஸ்லாத்தை அதிகாரப்பூர்வ மதமாகக் கொண்டிருக்கும் நாடு. இங்கு இன்றும் மன்னராட்சி முறையில் சுல்தான்தான் ஆட்சி செய்கிறார்.

பிரதமர் மோடி தன் பதிவில், சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவையும் அரச குடும்பத்தினரையும் காண ஆவலாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

இந்தியா மற்றும் புருனே இடையே 40 ஆண்டுகளாக தூதரக உறவு இருந்தாலும் புருனேவுக்கு ஒரு இந்திய பிரதமர் செல்வது இதுவே முதன்முறை.

இந்திய வம்சாவளியினர் 1930 முதலே புருனேவில் வசித்து வருகின்றனர். தற்போது 14,500 இந்தியர்கள் அங்கு வாழ்வதாகக் கூறப்படுகிறது.

இந்தியர்கள் எண்ணெய், எரிவாயுத் துறைகளில் தொழிலாளர்களாக பணியாற்றுகின்றனர். ஐடி ஊழியர், ஆசிரியர், என்ஜினியர்களாகவும் இருக்கின்றனர். ஜவுளித் துறையில் இந்திய முதலாளிகளும் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

இந்தியா தற்போது பின்பற்றும் ‘Act East’ கொள்கையில் புருனே முக்கியத்துவம் பெற்ற நாடாக இருக்கிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கமான ASEAN-ல் 2012 முதல் 2015 வரை இந்தியாவின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டிருக்கிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 2023 இல் 195.2 மில்லியன் டாலர்கள், 2022 இல் 382.8 மில்லியன் மற்றும் 2021 இல் $522.7 மில்லியனாக இருந்திருக்கிறது.

2014ம் ஆண்டு மியான்மரில் நடந்த ASEAN உச்சி மாநாட்டிலும், 2017ல் பிலிப்பைன்ஸில் நடந்த கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடி, சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவைச் சந்தித்துள்ளார்.

பிரதமர் மோடியின் பயணம், பாதுகாப்பு ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு, எரிசக்தி, விண்வெளி தொழில்நுட்பம், சுகாதாரம், திறன் மேம்பாடு, கலாச்சாரம் மற்றும் புதிய துறைகளில் இருநாட்டு உறவை வலுப்படுத்தும் என இந்திய வெளியுறவுத்துறைக் கூறியிருக்கிறது.