மானாமதுரை அருகே இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்த, கொலையாளிகளை கைது செய்யவேண்டுமென்று ஊர்மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்ததால், பதற்றம் எற்பட்டது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள கீழப்பசலையைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் பிரவீன். நேற்று இரவு கோவையிலிருந்து சொந்த ஊரான கீழப்பசலைக்குச் செல்ல பேருந்தில் வந்தவர், பேருந்து நிலையத்திலிருந்து நண்பர்கள் 3 பேருடன் இரு சக்கர வாகனத்தில் கீழப்பசலைக்குச் சென்றுள்ளார்.
அப்போது இவர்களை ஆயுதங்களுடன் வழிமறித்த கும்பலொன்று தாக்குதல் நடத்த, 4 பேரும் தப்பி செல்ல முயன்றபோது, பிரவீன் மட்டும் அக்கும்பலிடம் சிக்கியுள்ளார்.
அருகிலுள்ள தீயனூர் கண்மாய் பகுதிக்கு பிரவீனைக் கொண்டு சென்ற கும்பல், முகத்தைச் சிதைத்து கொடூரமாக வெட்டிக் கொலைசெய்துவிட்டு, தப்பிச் சென்றுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற மானாமதுரை காவல்துறையினர், பிரவீன் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவத்தால் அதிர்ச்சியும் ஆத்திரமுமடைந்த பிரவீனின் உறவினர்கள், மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், இன்று காலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்பு காவல்துறையினர் அவர்களைச் சமாதானப்படுத்தினர். இது, முன் விரோதத்தில் நடந்த கொலை என்று சொல்லப்படுகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், காளையார்கோயில் பகுதிகளில் இளைஞர்கள் குற்றங்களில் ஈடுபடுவதும், கொலையாவதும் தொடர்கதையாகி வருகிறது என்று கவலையை வெளிப்படுத்துகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.