TVK – NTK: விஜய்யுடன் கூட்டணி; சீமான் முயற்சி வீணானதா?! பின்னணி என்ன?

“கூட்டணி குறித்து தம்பி விஜய்தான் முடிவெடுக்க வேண்டும்” என பேசிவந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “2026 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டி” எனத் தடாலடியாக அறிவித்துள்ளார். விஜய்யை வளைக்கும் சீமானின் முயற்சி வீணானதா என்பது குறித்து விசாரித்தோம்.

நம்மிடம் பேசிய இரு கட்சிகளின் உள் விவரம் அறிந்தவர்கள், “விஜய் விரும்பினால் இணைந்து பயணிப்போம் என்பதுதான் சீமானின் விருப்பமாக இருந்தது. பல மாதங்களாகவே செய்தியாளர்களின் சந்திப்பின் மூலம் அதனை வெளிப்படுத்தியதோடு, விஜய்யைக் கடந்த மே மாதம் நேரில் சந்தித்து அரசியல் நகர்வுகள் மற்றும் கூட்டணி தொடர்பாகவும் பேசினார் அவர். ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டவில்லை. தி.மு.க, பா.ஜ.க எதிர்ப்பு மற்றும் தமிழ்தேசிய கொள்கைகள் என இருவருக்கு ஒத்துப்போகும் அம்சம் பல இருப்பதாக இருகட்சியினரும் பேசிவந்ததால் கூட்டணி உறுதியாக அமைந்துவிடும் என்ற தோற்றம் ஏற்பட்டது.

சீமான்

எனினும் தனித்துப் போட்டியிடுவதே நா.த.க-வின் நிலைப்பாடாக இருந்து வருகிறது. அப்படியே கூட்டணி அமைந்தாலும் அது நா.த.க தலைமையிலானதாக இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். ஒருவேளை விஜய் தலைமையை ஏற்று கூட்டணிக்கு போனால் நா.த.க தனித்த அடையாளத்தை இழந்துவிடும். மேலும் தலைவர் பிம்பத்தை சீமான் இழந்துவிடுவார் என்ற பேச்சும் கிளம்பியது.

த.வெ.க தரப்பினரோ `விஜய்யை முதன்மை சக்தியாகவும், முதலமைச்சர் வேட்பாளராகவும் முன்னிறுத்திவிட்டு மற்ற கட்சிகளுக்கு சொற்ப தொகுதிகளை கொடுக்கலாம்’ என கருதுகிறார்கள். இந்நிலையில் விஜய் – சீமான் கூட்டணி அமைந்தால் `யார் தலைமை` என்ற குழப்பம் ஏற்படவே விக்கிரவாண்டி இடைத் தேர்தல் பிரசாரத்தில் `8 ஆண்டுகளுக்கு முன்பே தேர்தல் அரசியலுக்கு வந்த நான்தான் பெரியவன்’ என சீமான் ஒப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்ததை விஜய் தரப்பு துளியும் ரசிக்கவில்லை. எனவே யார் தலைமை வகிப்பது என்பதில் ஏற்பட்ட முரணால் முடிவுக்கு வந்திருக்கிறது விஜய் – சீமான் கூட்டணி பேச்சு” என்றனர்

விஜய் – TVK Vijay – த.வெ.க

இதுகுறித்து நம்மிடம் பேசிய நா.த.க-வினர் சிலர், “விஜய் அரசியல் வருகையை அண்ணன் சீமான் வரவேற்று பேசினாரே தவிர, விஜய்யுடன் கூட்டணி அமைக்கிறோம் என உறுதியாக சொல்லவில்லை. நாங்கள் கட்சி ஆரம்பித்ததில் இருந்து தனித்து போட்டியிடுகிறோம். அது தொடரும் என அறிவித்திருக்கிறார் அவ்வளவுதான். தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கின்றன, தமிழ்தேசிய கொள்கைகளையும் நா.த.க-வின் தலைமையும் ஏற்றுக் கொள்ளும் கட்சியினரை கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம். நா.த.க எந்த காலத்திலும் கொள்கையில் சமரசம் செய்யாது” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88