`அக்பர் சிறந்த மன்னர் எனக் கூறும் பாடப்புத்தகங்கள் எரிக்கப்படும்!’ – ராஜஸ்தான் கல்வி அமைச்சர் பேச்சு

ராஜஸ்தான் கல்வித்துறை அமைச்சர் மதன் திலாவர், எந்த பாடப்புத்தகம் முகலாய மன்னர் அக்பர் சிறந்தவர் எனக் கூறினாலும் அது எரிக்கப்படும் எனப் பேசியுள்ளார். மேலும், அக்பர் பல ஆண்டுகளுக்கு இந்தியாவைக் கொள்ளையடித்தார் என்றும் அவரை ராஜஸ்தானில் எந்த பாடப்புத்தகமும் ‘சிறந்த ஆளுமை’ எனக் குறிப்பிடக் கூடாது என்றும் பேசியுள்ளார்.

உதய்பூரில் உள்ள சுகதியா பல்கலைக்கழகத்தில் பேசிய அவர், “நன்றாகச் சோதித்துவிட்டோம் எந்த புத்தகத்திலும் அக்பர் பற்றிய குறிப்புகள் இல்லை. அப்படி இருந்தால் அந்தப் புத்தகம் எரிக்கப்படும்” என்றார்.

ராஜஸ்தான் மாநில கல்வியமைச்சர் மதன் திலாவர்

“அக்பர் ஓர் ஆக்கிரமிப்பாளர், அவரைச் சிறந்தவர் எனக் கூறுவது முட்டாள்தனம்” எனவும் அமைச்சர் பேசியுள்ளார்.

ராஜஸ்தானில் உள்ள மேவாரை ஆண்ட மஹரனா பிரதாப் (பிரதாப் சிங் I) குறித்துப் பேசிய அமைச்சர், “மன்னர் பிரதாப்புக்கு உரிய வரலாற்று அங்கீகாரம் கிடைக்கவில்லை” எனக் கூறியுள்ளார்.

அக்பர் குறித்து அமைச்சர் திலாவர் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசுவது இது முதன்முறை அல்ல. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அக்பரை `ரேப்பிஸ்ட்’ என்று குறிப்பிட்டதுடன், நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பாடப் புத்தகங்களிலும் மாமன்னர் அக்பர் சிறந்தவர் எனக் குறிப்பிட்டிருப்பதை நீக்க வேண்டும் எனப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.