IC 814 The Kandahar Hijack: இந்தி நடிகர் விஜய் வர்மா நடிப்பில், நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் `IC 814 காந்தஹார் ஹைஜாக்’ தொடர் தற்போது விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. சமூக வலைதளங்களிலும், #BoycottBollywood, #BoycottNetflix போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன.
“1999-ல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814-ஐ பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான ஹர்கத்-உல்-முஜாஹிதீனைச் சேர்ந்தவர்கள் கடத்திய சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்தில், கடத்தல்காரர்களில் சிலரின் பெயரை இந்து பெயராக வைத்திருப்பதே விவாதப்பொருளாக மாற காரணம்” என்று கூறப்படுகிறது.
இதனால் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், இத்தொடரில் இடம்பெற்றிருக்கும் அம்சங்கள் குறித்து விளக்கமளிக்குமாறு இந்தியாவின் நெட்ஃபிலிக்ஸ் தலைமை அதிகாரியிடம் தெரிவித்திருக்கிறது.
மறுபக்கம், அரசியல் வட்டாரங்கள் தரப்பிலிருந்து இத்தொடருக்கு எதிர்ப்பு கிளப்பியிருக்கிறது. அதில், பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் அமித் மாளவியா, “IC-814 விமானத்தைக் கடத்தியவர்கள் தீவிரவாதிகள். அவர்களின் முஸ்லிம் அடையாளங்களை மறைக்க மாற்றுப்பெயர்கள் இதில் வைக்கப்பட்டிருக்கிறது. இதனால், IC-814 விமானத்தைக் கடத்தியவர்கள் இந்துக்கள் என மக்கள் நினைப்பார்கள். இது பாகிஸ்தான் தீவிரவாதிகளின் குற்றங்களை மூடி மறைக்கும் இடதுசாரிகளின் அஜெண்டா. 1970-களிலிருந்தே கம்யூனிஸ்ட்டுகள் இதைத் தீவிரமாகப் பயன்படுத்தி வருகின்றனர்” என்று ட்வீட் செய்திருக்கிறார்.
இந்த நிலையில், நடிகையும் பா.ஜ.க எம்.பி-யுமான கங்கனா ரனாவத், ஓடிடி தளங்களில் இதுபோன்ற திரைப்படங்களை எடுக்க கம்யூனிஸ்ட்டுகளுக்கும், இடதுசாரிகளும் சுதந்திரமிருப்பதாகவும், ஒருமைப்பாடு கருத்து கொண்ட படங்களை எடுக்க தேசியவாதிகளுக்கு அனுமதி இல்லை என்றும் விமர்சனம் செய்திருக்கிறார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் கங்கனா ரனாவத், “கற்பனை செய்ய முடியாத அளவிலான வன்முறை, நிர்வாண காட்சிகளை, ஓடிடி தளங்களில் எந்தவித தணிக்கையோ அல்லது எந்தவித விளைவுகளோ இல்லாமல் ஒருவர் காட்டலாம் என்கிறது இங்குள்ள சட்டம். ஏன், அரசியல் ரீதியாகத் தூண்டப்பட்ட தீய நோக்கங்களுக்கு ஏற்ப நிஜ வாழ்க்கை நிகழ்வுகளைக்கூட சிதைக்கலாம்.
இதுபோன்ற தேச விரோத வெளிப்பாடுகளுக்கு, உலகெங்கிலும் உள்ள கம்யூனிஸ்ட்டுகள் அல்லது இடதுசாரிகளுக்கு அனைத்து சுதந்திரமும் இருக்கிறது. ஆனால், ஒரு தேசியவாதியாக பாரதத்தின் ஒருமைப்பாடு தொடர்பாகத் திரைப்படங்களைத் தயாரிக்க ஓடிடி தளங்கள் அனுமதிப்பதில்லை. இதுபோன்ற தணிக்கைகள், நாட்டை துண்டாடக்கூடாது என வரலாற்று உண்மைகளைப் படமாக்கும் நம்மில் சிலருக்கு மட்டுமே தெரிகிறது. இது மிகவும் மோசமானது” என்று கூறியிருக்கிறார்.