ஆபாச மெசேஜ்… வகுப்பு எடுக்கும் போதும் வக்கிரம்… வால்பாறை கல்லூரியில் அத்துமீறிய பேராசிரியர்கள்!

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. முக்கியமாக கல்வி நிறுவனங்களிலும் மாணவிகள் மீது பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி உள்ளது.

வால்பாறை

அதில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.  கடந்த சில நாள்களுக்கு முன்பு அந்த கல்லூரிக்கு, ஒருங்கிணைந்த சேவை மையக் குழுவினர் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர்.

அப்போது கல்லூரி மாணவிகளுக்கு நிகழும் பிரச்னை குறித்து கேட்டனர். அதற்கு கல்லூரியில் படித்து வரும் 7 மாணவிகள் அதிர்ச்சி புகார்களை முன்வைத்தனர். கல்லூரியில் 2 தற்காலிக பேராசிரியர்கள், ஆய்வுக்கூட உதவியாளர், என்.சி.சி பயிற்சியாளர் ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தனர்.

பாலியல் தொல்லை ( சித்திரிப்புப் படம் )

மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவது, வாட்ஸப்பில் அசிங்கமான மெசேஜ் அனுப்புவது என்று அத்துமீறியுள்ளனர்.

வகுப்பு எடுக்கும்போது கூட மாணவிகள் அருகில் நின்று பாலியல் சீண்டல் கொடுக்கும்  வகையில் நடந்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட சமூக நலப்பிரிவு அதிகாரி அளித்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார்,

கைது

தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் சதீஸ்குமார், ராஜபாண்டி, முரளிராஜ், லேப் உதவியாளர் அன்பரசு ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.