“பாஜக தலைமை அண்ணாமலையை எப்படி அனுப்பி வைப்பது என தெரியாமல் தவித்தது, அண்ணாமலையே வெளிநாட்டுக்கு பயணித்ததால் தமிழகம் அமைதி நிலைக்குத் திரும்பியுள்ளது…” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார்.
அலங்காநல்லூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார், “பா.ஜ.க-வில் தற்போது பொறுப்புக்கு வந்துள்ளவர்கள் திறமை, அனுபவம், பண்பாடு மிக்கவர்கள். அண்ணாமலையின் வெளிநாட்டு பயணத்தால் பா.ஜ.க தொண்டர்களுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது.
மத்திய அரசு, மாநில அரசுக்கு வழங்க வேண்டிய வெள்ள நிவாரணம், ரயில்வே திட்ட நிதி, மெட்ரோ ரயில் திட்ட நிதி உள்ளிட்ட நிலுவையில் உள்ள நிதிகளை ஹெச்.ராஜா பெற்றுத்தர வேண்டும். தமிழக மக்களை திசை திருப்பாமல் தேவையானவற்றை செய்ய வேண்டும்,
திரைப்படத்தில் ஒட்டுமொத்த வாழ்க்கையின் வளர்ச்சியை 3 மணி நேரத்திற்குள் காட்டுவார்கள், அதை இன்றைக்கு நேரில் பார்க்கிறோம். சினிமாவைப்போல 3 ஆண்டுகளில் நடிகர், எம்.எல்.ஏ, அமைச்சர் என வளர்ந்த உதயநிதி, தற்போது அறிவிக்கப்படாத முதலமைச்சராச் செயல்படும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்.
இந்திய அரசியல் வரலாற்றில் அமைச்சர் உதயநிதியைப்போல யாரும் வளர்ச்சி பெறவில்லை. இந்த வளர்ச்சி அவரது உழைப்புக்கு கிடைத்ததா? அல்லது தந்தை, தாத்தாவின் உழைப்புக்கு கிடைத்ததா? என விளக்க வேண்டும்” என்று பேசினார்.