“21 வயதில் ரூ.3,600 கோடிக்கு சொந்தக்காரர்” என்ற தலைப்பை பார்த்ததும், ‘நம்ம என்ன 21 வயசுல பண்ணிட்டு இருந்தோம்?’ என்று உங்கள் மைண்ட் வாய்ஸ் செல்கிறதா… யார் இவர்? ஜெப்டோ(Zepto) நிறுவனத்தின் இணை நிறுவனர் கைவல்யா வோஹ்ரா.
இந்த ஆண்டு மட்டுமல்லாமல், கடந்த மூன்று ஆண்டுகளாகவே ஹுருனின் ‘இந்தியாவின் டாப் பணக்கார இளைஞர்கள்’ பட்டியலில் முதல் இடம் பிடித்து வருகிறார். அதாவது இவரது 19 வயதில் இருந்து இவர் இந்த பட்டியலில் இடம் பிடித்து வருகிறார்.
யார் இந்த கைவல்யா வோஹ்ரா?
பெங்குளூரூவை சேர்ந்தவர் கைவல்யா வோஹ்ரா. ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி துறையில் படிப்பை தொடங்கியிருக்கிறார் கைவல்யா வோஹ்ரா. அங்கே நட்பான ஆதித் பலிச்சாவும், இவரும் சேர்ந்து ஜெப்டோ நிறுவனம் தொடங்க தங்களது படிப்பை பாதியில் நிறுத்தி வெளிவந்திருக்கிறார்கள்.
இரண்டாம் இடம் கூட…
ஹுருன் பட்டியலில் கைவல்யா வோஹ்ரா மட்டுமல்ல, ஆதித் பலிச்சாவும் இடம்பெற்றிருக்கிறார். அதுவும் இரண்டாவது இடம். இவருக்கு வயது 22. இவரது சொத்து மதிப்பு ரூ.4,300 கோடி. ஒரு வயது அதிகம் என்பதால் இவருக்கு இரண்டாம் இடம் வழங்கப்பட்டுள்ளது.
எப்படி தொடங்கப்பட்டது ஜெப்டோ?
கொரோனா காலத்தில் காய்கறி, மளிகை பொருட்கள் வாங்க வெளியே செல்வதும், கிடைப்பதும் பெரிய சவாலாக இருந்தது. இந்த சவாலை எதிர்கொண்ட இருவருக்கும், அங்கே தான் தொடங்கி இருக்கிறது ஜெப்டோவின் யோசனை.
ஜெப்டோவிற்கு முன்பு, கிரனகார்ட்(KiranaKart) என்னும் சூப்பர் மார்க்கெட் டெலிவரி சர்வீஸை தொடங்கியது கைவல்யா வோஹ்ரா- ஆதித் பலிச்சா கூட்டணி. இந்த டெலிவரி சர்வீஸில் சூப்பர் மார்க்கெட்களுடன் கைகோர்த்து 45 நிமிடத்தில் பொருள்களை டெலிவரி செய்து வந்தனர். ஆனால் கிரனகார்ட்டிற்கு பெரிய வரவேற்பு இல்லாமல் போனது.
இதனால் அவர்கள் தங்களது ஐடியாவை சற்று மாற்றி 10 நிமிடத்தில் டெலிவரி என்று ஜெப்டோவை 2021-ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார்கள். இந்த ஐடியா பல்வேறு முதலீட்டாளர்களை ஈர்த்து முதலீடுகளை அள்ளியது.
ஜெப்டோவிற்கு இருக்கும் வரவேற்பு
‘நேரடியாக கடைக்கு செல்ல வேண்டாம்’, ‘ஈசி டெலிவரி’ என பல ப்ளஸ்கள் இருப்பதால், ஜெப்டோவை பல வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.!
விகடன் Whatsapp சேனலுடன் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்: https://whatsapp.com/channel/0029Va7F0Hj0bIdoYCCkqs41