`பெண்களின் திருமண வயதை 21-ஆக உயர்த்த வேண்டும்!’ – மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

இந்தியாவில் குழந்தைத் திருமணங்களைத் தடுக்கும் வகையில், 2006-ல் மத்திய அரசால் குழந்தைத் திருமணம் தடைச் கொண்டுவரப்பட்டு, ஆண்களின் திருமண வயது 21-ஆகவும், பெண்களின் திருமண வயது 18-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. அதையடுத்து கடந்த 2021 இறுதியில் மத்திய அரசு, ஆண்களைப் போலவே பெண்களுக்கும் திருமண வயதை 21 ஆக நிர்ணயிக்க குழந்தைத் திருமணம் தடைச் சட்டம் 2006-ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், சில காரணங்களால் இன்னும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

குழந்தைத் திருமணம்

இத்தகைய சூழலில், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் இமாச்சலப் பிரதேசத்தில், திருமண வயது விவகாரத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே சமத்துவம் கொண்டுவரும் வகையில் பெண்களின் திருமண வயதை 21-ஆக அதிகரிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இமாச்சலப் பிரதேச அரசின் செயலை புரட்சிகரமானது வரவேற்றிருக்கும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ், இந்த விவகாரத்தில் நிலுவையிலிருக்கும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.

இது குறித்து ராமதாஸ், “பெண்களின் திருமணத்துக்கான குறைந்தபட்ச வயதை 18-லிருந்து 21-ஆக உயர்த்த வழிவகை செய்யும் சட்டம் இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது பெண்களின் கல்வி மற்றும் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் புரட்சிகரமான சட்டமாகும். தேசிய அளவில் இத்தகைய சட்டத்தைக் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த காங்கிரஸ் கட்சி தலைமையிலான மாநில அரசே இத்தகைய சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றியிருப்பது வரவேற்கத்தக்கது.

ராமதாஸ்

பெண்களின் திருமண வயதை 21-ஆக உயர்த்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக பா.ம.க வலியுறுத்தி வருகிறது. கர்நாடக மாநில உயர் நீதிமன்றம், ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உள்ளிட்ட பல உயர் நீதிமன்றங்களும் திருமண வயதை 21-ஆக உயர்த்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கியிருக்கின்றன. அந்தக் கோரிக்கை பத்தாண்டுகளுக்கும் மேலாக நிறைவேற்றப்படாமல் இருந்த நேரத்தில் இமாச்சலப் பிரதேச அரசு, பெண்களின் திருமண வயதை உயர்த்திச் சட்டம் இயற்றியிருப்பது உண்மையாகவே பெண்களின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

உலகில் நுண்ணூட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெண்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. அதற்கான காரணங்களில் முதன்மையானது பெண்களுக்கு இளம் வயதில் திருமணமாவதும், இளம் வயதிலேயே அவர்கள் தாய்மையடைவதும் தான். அவர்களின் நுண்ணூட்டச் சத்துக் குறைபாடு குழந்தைகளுக்கும் நீடிப்பதால் இந்தியாவில் நுண்ணூட்டச் சத்துக் குறைபாட்டைக் கட்டுப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. பெண்களின் திருமண வயது 21-ஆக உயர்த்தப்பட்டால், அது நுண்ணூட்டச்சத்துக் குறைவை கட்டுப்படுத்த பெரிதும் உதவும் என்பதில் ஐயம் இல்லை. இதற்காகவே இந்த சட்டத்தை வரவேற்கலாம்.

திருமணம்

தேசிய குடும்ப நல கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 56 சதவிகித பெண்களுக்கு 21 வயதுக்கு முன்பாக திருமணம் நடைபெறுகிறது. அதிலும் குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்து பெண்களில் 75 சதவிகிதத்தினருக்கு 21 வயதுக்கு முன்பாகவே திருமணம் நடைபெற்று விடுகிறது. இதனால், அந்தப் பெண்களால் பட்டப்படிப்பை படிக்க முடிவதில்லை. போதிய கல்வியறிவு இல்லாததால் அவர்கள், அவர்களின் அனைத்துத் தேவைகளுக்கு குடும்பத்தினரையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது. மாறாக, பெண்களின் திருமண வயது 21-ஆக உயர்த்தப்பட்டால், அனைத்துப் பெண்களும் குறைந்தபட்சம் ஒரு பட்டப்படிப்பை படிக்க முடியும். இது அவர்களின் முன்னேற்றத்துக்கும், தற்சார்புக்கும் வழிவகுக்கும்.

பெண்களின் திருமண வயதை 21 வயதாக உயர்த்துவது குறித்து வல்லுநர் குழுவை அமைத்து ஆய்வு செய்த மத்திய அரசு, அதனடிப்படையில் சட்ட முன்வரைவை தயாரித்து கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தது. ஆனால், சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அந்த சட்ட முன்வரைவு நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை ஆய்வு செய்வதற்காக நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு வழங்கப்பட்ட காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்ட போதிலும் நிலைக்குழு அதன் பரிந்துரையை வழங்கவில்லை.

ஸ்டாலின் – மோடி

நிலைக்குழுவின் காலக்கெடுவை இனியும் நீட்டிக்காமல், அதன் அறிக்கையைப் பெற்று பெண்களின் திருமண வயதை 21-க உயர்த்தும் சட்ட முன்வரைவை வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசும் பெண்களின் திருமண வயதை உயர்த்தும் சட்டத்தை தமிழக சட்டப் பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்” என்று வலியுறுத்தியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88