`ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவை என் ரத்தத்தால் வளர்த்தேன்; இன்று…!’- பாஜக-வில் இணைந்த சம்பாய் சோரன்

ஜார்க்கண்டில் தற்போது முதலமைச்சராக இருக்கும் ஹேமந்த் சோரன் நில மோசடி வழக்கில் சிறையிலடைக்கப்பட்டபோது, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான சம்பாய் சோரன் முதல்வராக்கப்பட்டார். அதையடுத்து, ஹேமந்த் சோரன் சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்ததும் ஜூலை மீண்டும் முதல்வரானார். இந்த சம்பவத்துக்குப் பிறகு சம்பாய் சோரன் பா.ஜ.க-வில் இணையப் போவதாகப் பேச்சுகள் அடிபட்டன.

சம்பாய் சோரன்

அதற்கேற்றவாறு சம்பாய் சோரனும், புதிய தொடங்குவதாகவும், அப்படியில்லையென்றால் வேறொருவருடன் இணைந்து பணியாற்றுவதாகவும் வெளிப்படையாகக் கூறிவந்தார். மேலும், இரண்டு நாள்களுக்கு முன்னர், தன்னுடைய எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர் பதவியை இவர் ராஜினாமா செய்தார். இந்த நிலையில், சம்பாய் சோரன் இன்று ராஞ்சியில் பா.ஜ.க தலைவர்கள் சிவராஜ் சிங் சவுகான், ஹிமந்த பிஸ்வா சர்மா, பாபுலால் மராண்டி உள்ளிட்டோர் முன்னிலையில் அந்தக் கட்சியில் இணைந்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய சம்பாய் சோரன், “மக்களுக்கு நீதி கிடைப்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவை என் வியர்வையாலும், ரத்தத்தாலும் நான் வளர்த்தேன். ஆனால், அதே கட்சியால் நான் அவமானப்படுத்தப்பட்டேன். அவமானத்தைப் பொறுத்துக்கொள்ளும் நிலையில் இல்லை. அதனால், பா.ஜ.க-வில் சேரவேண்டிய நிலைக்கு ஆளானேன். இன்று உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியில் உறுப்பினராக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

ஜார்க்கண்ட் அரசால், டெல்லி மற்றும் கொல்கத்தாவில் நான் கண்காணிப்புக்குள்ளானபோது, பா.ஜ.க-வில் சேரவேண்டும் என்ற எனது தீர்மானம் வலுவானது” என்று கூறினார்.

ஜார்க்கண்ட்டில் ஹேமந்த் சோரன் அரசின் மிகப்பெரிய பலமே அங்கிருக்கும் பழங்குடி மக்களின் ஆதரவுதான் என்றிருக்கும் நிலையில், மாநில பழங்குடியினர் நலத்துறை அமைச்சராகச் செயல்பட்ட சம்பாய் சோரன் விலகியது அந்தக் கட்சியில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.