‘என்னது அதானி இன்னும் முதல் இடத்துல தான் இருக்காரா?’ – இந்த கேள்வி நேற்று இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியல் வெளியான வேளையில் அனைவருக்கும் தோன்றியிருக்கும். நேற்று ஹுருன் இந்தியா என்ற நிறுவனம் இந்தியாவின் டாப் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான ஹிண்டன்பர்க் அறிக்கையால் பல சறுக்கல்களை கண்டவர் அதானி. இந்த சறுக்கல்கள் இருந்துமே நேற்று வெளியான ஹுருன் பட்டியலில் அதானி மற்றும் அவரது குடும்பம் முதல் இடத்தை பிடித்துள்ளது மிகவும் ஆச்சரியமான விஷயம். இந்த பட்டியலின் படி, அவரின் சொத்து மதிப்பு 1.61 லட்சம் கோடி ஆகும். கடந்த ஆண்டை விட, கௌதம் ஆதானியின் சொத்து மதிப்பு 95 சதவிகிதம் அதிகரித்திருப்பது இன்னும் ஆச்சரியமான விஷயம்.
2020-ல்…
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2020-ம் ஆண்டு ஹுருன் பட்டியலில் கௌதம் அதானி நான்காவது இடத்தை பிடித்திருந்தார். 2024-ம் ஆண்டு பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ள முகேஷ் அம்பானி 2020-ம் ஆண்டு முதல் இடத்தில் இருந்தார். இந்த ஐந்து ஆண்டுகளில் அதானியில் சொத்து மதிப்பு 8.3 மடங்கு உயர்ந்திருக்கிறது. ஆனால் அம்பானியின் சொத்து மதிப்பு 1.5 மடங்கு மட்டுமே உயர்ந்திருக்கிறது.
முதலிடம் எப்படி?
2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானதும் அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு சுமார் 80 சதவிகிதம் வரை சரிந்தன. ஆனால் 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் முதலே அதானி பங்குகளின் மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக ஏறி மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப தொடங்கிவிட்டன.
மேலும், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணையில் இருக்கும் நிலையில், இதுவரை அதானிக்கு பாதகமான உத்தரவுகள் ஏதும் வரவில்லை. இதனால் அதானி பங்குகளின் மதிப்பு பழைய நிலையை நெருங்கி வருகின்றன. ஆனால், ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு முன்பாக இருந்த பங்கு மதிப்பை இன்னும் எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ஆரம்பத்தில் சறுக்கல்கள் இருந்தாலும், மீண்டும் மீண்டு வரத் தொடங்கியதே அதானியின் முதல் இடத்திற்கு காரணம் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88