உலக கோடீஸ்வரர்களில் ஒருவரும், பிரபல தொழிலதிபருமான எலான் மஸ்க் டெஸ்லா, ஸ்பேஸ் X உள்ளிட்ட ஐந்து நிறுவனங்களின் CEO, தலைவர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தில் பல விதமான வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரித்து விற்கப்படுகிறது. மேலும், இந்த நிறுவனம் புதிய முயற்சியாக `ரெடிமேட் வீட்டையும்’ விற்பனைக்குக் கொண்டு வரப் போவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அதுவும் 10,000 டாலர் – 15,000 டாலருக்குள்ள அந்த ரெடிமேடு வீட்டை விற்கப் போவதாகக் கூறப்படுகிறது… இதை நம்பலாமா?
அலசி ஆராய்ந்ததில், இது `எலான் மஸ்க் ரிவைண்ட்’ என்கிற யூடியூப் சேனலில்தான் முதலில் பதிவிடப்பட்டுள்ளது. இதையடுத்து நிறைய சேனல்கள் இதே பதிவைப் பகிர்ந்திருக்கின்றன. இந்த வீடியோக்களின் தம்ப் நைல்ஸ் என்னவோ, டெஸ்லா வீடும் அருகில் எலான் மஸ்க் இருப்பது போன்று தான் இருக்கிறது. அதனால், சட்டென அனைவரும் வீடியோவில் என்னதான் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள, வீடியோவை முழுமையாகப் பார்க்கின்றனர். ஆனால், அந்த வீடியோவில் ஒன்றுமேயில்லை…
இது வெறும் மாடல் தான்!
அதாவது இந்த `டெஸ்லா டைனி ஹௌஸ்’ எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தின் பொருள்களைச் சோதனை செய்வதற்காகவும், அவற்றின் பயன்பாட்டைக் காட்சிப்படுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்ட ஒரு மாதிரிதான். குறிப்பாக சூரிய ஆற்றலையும், காற்று ஆற்றலையும் உபயோகிப்பதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி இது சந்தையில் விற்பனைக்கு வரப்போவதாக அதிகாரபூர்வமான எந்த தகவலும் டெஸ்லாவிடம் இருந்து வரவில்லை. இந்த வீடு ஸ்பேஸ் X நிறுவனம் இருக்கும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் வர வாய்ப்புள்ளதா?
டெஸ்லா நிறுவனம் நவீன பொருள்களையும் வாகனங்களையும் உருவாக்குவதில் தீவிரம் காட்டிவருகிறது. மேலும் எலானின் ஸ்பேஸ் X நிறுவனத்தின் கொள்கையே மக்கள் சுலபமாகப் பக்கத்து நாடுகளுக்குப் போக விமான வசதி இருப்பதுபோல், நம் அண்டை கோளான செவ்வாய்க் கிரகத்திற்குச் சென்று வர ராக்கெட் தயாரிப்பது தான். எலான் மஸ்க்குக்கு இது போன்ற புதிய எண்ணங்கள் இருப்பதுபோலவே… மலிவான (prefab house) வீடுகளைத் தயாரித்து விற்க வேண்டும் என்ற விருப்பமும் இருந்தாலும், இப்போதைக்கு இது அவரின் இலக்குகளின் வரிசையில் மிகத் தொலைவில் உள்ளதாகும். இது எதிர்காலத்தில் வர வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
எலான் இந்த மாதிரி வீட்டில்தான் வசிக்கிறாரா?
வீடு, நிலம் போன்ற சொத்துகளில் ஈடுபாடு இல்லாதவர் எலான் மஸ்க். இந்நிலையில் எலான் இது போன்று தயாரிக்கப்பட்ட சிறிய வீடு ஒன்றை 2021-ம் ஆண்டு வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. `BOXABLE’ என்ற நிறுவனத்திலிருந்து கிட்டத்தட்ட 50,000 டாலர் மதிப்பிலான இந்த வீட்டை வாங்கி, தன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் வைத்துள்ளார். இதை அவர் உபயோகித்தும் வருகிறார். ஒரு சதுர பெட்டிபோல் இந்த வீடு இருக்கும். ஒரு ஆள் வசிக்கும் வசதி இருக்கக்கூடிய வீடு.
500 சதுர அடிக்குள் முழுவதுமாக கட்டி நாம் கேட்கும் இடத்தில் வைக்கப்படும் இது போன்ற நவீன குட்டி வீடுகள், தற்போது வரை இந்தியாவில் குறைவுதான். ஆனால் ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற இடங்களில் விற்பனைக்கு உள்ளது. இது எதிர்காலத்தில் வந்தாலும் விலை அதிகமாகவே இருக்கும் எனக் கருதப்படுகிறது. மேலும் இவை எளிதாக இடம் மாற்றிக்கொள்ளும் வகையில் இருக்கக்கூடியவை. ஆனால் இவை அமைக்கப்படவேண்டிய இடம் நமக்குச் சொந்தமானதாக இருக்கவேண்டும்.
நம் ஊரில் போர்டபிளான கன்டெய்னர் வீடுகள், அலுவலகங்கள் பிரபலமடைந்து வருவதுபோல், விரைவில் இந்த நவீன குட்டி வீடுகளும் மக்களிடையே வரவேற்பைப் பெறக்கூடும்!