ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வெற்றிபெற்றது. அந்த கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக பதவியேற்றார். `இந்தியா’ கூட்டணியிலும் ஹேமந்த் சோரன் அங்கம் வகிக்கிறார். இந்நிலையில் பா.ஜ.க விசாரணை அமைப்புகள் மூலம் அழுத்தம் கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நிலம் வாங்கினார். அதில் ஹேமந்த் சோரன் நிதி மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து அவர் தனது பதவியை கடந்த ஜனவரி 31-ம் தேதி ராஜினாமா செய்தார். அன்றைய தினமே அவர் கைதும் செய்யப்பட்டார். பிறகு அவரது கட்சியை சேர்ந்த சம்பாய் சோரன் முதல்வராக பதவியேற்றார். முன்னதாக ஹேமந்த் சோரனின் மனைவிதான் முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என்கிற தகவல்கள் பரவின. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக சம்பாய் சோரன் பதவிக்கு கொண்டுவரப்பட்டார்.
சிறையில் 5 மாதங்கள் இருந்த ஹேமந்த் சோரனுக்கு அந்த மாநில உயர் நீதிமன்றம் கடந்த ஜூலை 28-ம் தேதி ஜாமீன் வழங்கியது. பிறகு அவரை சட்டப்பேரவை கட்சி தலைவராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்எல்ஏக்கள் மீண்டும் தேர்வு செய்தனர். இதையடுத்து முதல்வர் பதவியை சம்பாய் சோரன் ராஜினாமா செய்தார். இதையடுத்து ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். இங்கிருந்துதான் பிரச்னையும் தொடங்கியது. இதை பா.ஜ.க மிகவும் சரியாக பயன்படுத்திக்கொண்டது.
அதாவது ஹேமந்த் சோரன் சிறையில் இருந்தபோது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-வுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. மேலும் பழங்குடியினரின் வாக்குகள் இந்தியா கூட்டணிக்குதான் சென்றிருந்தது. இதற்கு சம்பாய் சோரன்தான் முக்கிய காரணம். பழங்குடியின மக்களிடையே பெரும் செல்வாக்கு மிக்க தலைவராக இருக்கிறார் அவர். இதனால்தான் அவரை ‘கொல்ஹான் டைகர்’ என அந்த மக்கள் அழைக்கிறார்கள்.
மறுபக்கம் தங்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததில் பா.ஜ.க தலைவர்கள் அப்செட். எனவே அவர்கள் விரைவில் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவை வீழ்த்த திட்டமிட்டிருந்தனர். இந்த நேரத்தில்தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருந்த சம்பாய் சோரன் அதிருப்தியில் இருந்தார். எனவே அவரை தங்கள் பக்கம் கொண்டுவர பா.ஜ.க தீவிர முயற்சி மேற்கொண்டது. அந்த நேரத்தில்தான் ‘கசப்பு மாத்திரையை விழுங்கிக் கொண்டிருக்கிறேன்’ என பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “கோல்ஹான் என்ற சிறிய கிராமத்தில் வசிக்கும் ஓர் ஏழை விவசாயியின் மகனை, இந்த நிலைக்குக் கொண்டு வந்தது யார் என உங்கள் மனதில் பல கேள்விகள் எழும். ஜார்க்கண்ட் மாநிலத்தின் 12-வது முதல்வராகப் பணியாற்ற, கூட்டணி என்னைத் தேர்வு செய்தது.
நான் பதவியேற்ற நாள் முதல் கடைசி நாள் (ஜூலை 3) வரை அரசுக்கான எனது கடமைகளை முழு ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்புடனும் செய்தேன். இந்தக் காலகட்டத்தில் பொதுநலன் கருதிப் பல முடிவுகளை எடுத்தோம். எனது ஆட்சிக்காலத்தில் நான் யாருக்கும், எந்தத் தவறும் செய்யவில்லை என்பது ஜார்க்கண்டிலுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் கூடத் தெரியும். இதற்கிடையில், ஹல் திவாஸுக்கு அடுத்த நாள், அதற்கு அடுத்த இரண்டு நாள்களுக்கு எனது அனைத்து நிகழ்ச்சிகளும் கட்சித் தலைமையால் ரத்துசெய்யப்பட்டன என்பதை அறிந்தேன். இது குறித்துக் கேட்டபோது, ‘ஜூலை 3-ம் தேதி சட்டமன்றக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அதுவரை உங்களால் முதல்வராகச் செயல்பட முடியாது’ எனக் கூறினார்கள். ஒரு முதலமைச்சரின் நிகழ்ச்சிகள், இன்னொருவரால் ரத்துசெய்யப்படுவதைவிட ஜனநாயகத்தில் அவமானகரமான செயல் வேறெதுவும் இருக்க முடியுமா?. இந்தக் கசப்பு மாத்திரையை விழுங்கிக்கொண்டிருந்தாலும், கடந்த 40 ஆண்டுக்கால எனது களங்கமற்ற அரசியல் பயணத்தில் முதன்முறையாக, உள்ளிருந்து உடைந்துபோனேன்.
என்ன செய்வதென்று புரியவில்லை. இரண்டு நாள்கள், நான் அமைதியாக உட்கார்ந்து சுயபரிசோதனை செய்து, இதில் என் தவற்றைத் தேடிக்கொண்டிருந்தேன். எனக்கு அதிகாரப் பேராசை கொஞ்சம்கூட இல்லை. ஆனால், சுயமரியாதை உண்டு. சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தை அழைக்க முதலமைச்சருக்கு உரிமை இருந்தாலும், கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலைக்கூட என்னிடம் தெரிவிக்கவில்லை. கூட்டத்தின்போது, என்னை ராஜினாமா செய்யும்படி கூறப்பட்டது. எனக்கு அதிகாரப் பேராசை இல்லை என்பதால் உடனடியாக ராஜினாமா செய்தேன். ஆனால், என் சுயமரியாதையின் மேல் விழுந்த அடியால் என் இதயம் உணர்ச்சிவசப்பட்டது. கடந்த மூன்று நாள்களாக நான் எதிர்கொள்ளும் அவமானகரமான நடத்தையால், மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன்.
நான் என் கண்ணீரைக் கட்டுப்படுத்த முயல்கிறேன். ஆனால் அவர்கள் பதவியைப் பெறுவதில் மட்டுமே ஆர்வமாக இருந்தனர். என் முழு வாழ்க்கையையும் எந்தக் கட்சிக்காக அர்ப்பணித்தேனோ, அந்தக் கட்சியில் இனி எனக்கு எந்த மரியாதையும் இல்லை என்பதை உணர்ந்தேன். இதற்கிடையில், இது போன்ற பல அவமானகரமான சம்பவங்கள் நடந்தன. அதை நான் இப்போது குறிப்பிட விரும்பவில்லை. இத்தனை அவமானங்களுக்கும் அவமதிப்புகளுக்கும் பிறகு, மாற்றுப் பாதையைத் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டேன். கனத்த இதயத்துடன், அதே சட்டமன்றக் கூட்டத்தில் நான் சொன்னேன் ‘என் வாழ்வின் புதிய அத்தியாயம் இன்றிலிருந்து தொடங்கப்போகிறது. ஒன்று, அரசியலிலிருந்து ஓய்வுபெறுவது. இரண்டாவதாக, எனக்கென்று தனி அமைப்பை உருவாக்குவது. மூன்றாவதாக, இந்தப் பாதையில் எனக்கு ஒரு துணை கிடைத்தால், அவருடன் மேலும் பயணிப்பது. அதேநேரம், இது எனது தனிப்பட்ட போராட்டம். அதனால் எந்தக் கட்சி உறுப்பினரையும் இதில் ஈடுபடுத்தவோ அல்லது இந்த அமைப்புக்குத் தீங்கு விளைவிக்கவோ எனக்கு எந்த எண்ணமும் இல்லை. நாங்கள் எங்கள் ரத்தத்தாலும் வியர்வையாலும் வளர்த்த கட்சிக்கு தீங்கு விளைவிப்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது” என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து அவரை தங்கள் பக்கம் இழுக்க பா.ஜ.க தலைவர்கள் தீவிரம் காட்டினார். அந்த நேரத்தில் ‘புதிய கட்சி தொடங்கப்போவதாக சம்பாய் சோரன் அறிவித்திருந்தார். அப்போது பேசியவர், “அரசியல் ஒய்வு அல்லது தனி அமைப்பு அல்லது நண்பர் என்று மூன்று சாய்ஸ் முன்பு குறிப்பிட்டிருந்தேன். எனவே, அரசியலில் நான் தற்போது ஓய்வுபெறப் போவதில்லை. புதிய கட்சியை அமைத்து வலுப்படுத்தப் போகிறேன். ஒருவேளை இந்தப் பயணத்தில் ஒரு நண்பரைக் கண்டால் அவரோடு பயணிப்பேன். ஒரே நாளில் 30,000 முதல் 40,000 தொண்டர்கள் வரமுடியும் எனும்போது, புதிய கட்சி ஆரம்பிப்பதில் எனக்கென்ன பிரச்னை. இன்னும் ஒரு வாரத்தில் எல்லாம் தெளிவாகிவிடும்” என சொல்லியிருந்தார். ஆனாலும் அவர் பாஜகவில்தான் இணைய போகிறார் என்கிற தகவல்கள் காட்டுத்தீ போல பரவி வந்தது. அப்போது பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர்களை அவர் சந்தித்தார் என்கிற தகவலும் வெளியானது.
இதற்கிடையில் ஜார்க்கண்ட் மாநிலத்துக்கான பா.ஜ.க-வின் தேர்தல் பொறுப்பாளராக இருக்கும் ஹிமந்த பிஸ்வா சர்மா, “ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், நமது நாட்டின் புகழ்பெற்ற பழங்குடியின தலைவருமான சம்பாய் சோரன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அவர் ஆகஸ்ட் 30-ம் தேதி ராஞ்சியில் அதிகாரப்பூர்வமாக பா.ஜ.க-வில் இணைவார்” எனக் குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் நீண்ட காலமாக சம்பாய் சோரன் முடிவு என்ன என்பதில் நிலவி வந்த குழப்பம் முடிவுக்கு வந்திருக்கிறது. அதேநேரம் ஹேமந்த் சோரன் பின்னடைவை சந்தித்திருக்கிறார். பழங்குடி சமுதாய மக்களிடத்தில் சம்பாய் சோரனுக்கு மிகுந்த செல்வாக்கு இருக்கிறது. இதனால் வரும் சட்டப்பேரவை தேர்தலில் ஹேமந்த் சோரனுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். குறிப்பாக பழங்குடியின வாக்குகள் பா.ஜ.க பக்கம் செல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. தேர்தலுக்கு மிக குறுகிய காலமே இருப்பதால் ஜார்கண்ட் அரசியல் களத்தில் சம்பாய் சோரனை வைத்து பல்வேறு அரசியல் ஆட்டங்களை பா.ஜ.க ஆடும். எனவே என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88