லண்டன் சென்ற அண்ணாமலை; தமிழக பாஜக-வை நிர்வகிக்க ஹெச்.ராஜா தலைமையில் குழு அமைத்த டெல்லி மேலிடம்!

தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, அரசியல் மேற்படிப்புக்காக லண்டன் செல்வதாகச் செய்தி வெளியானபோதே, அவர் மீண்டும் தமிழகம் திரும்பும் வரையில் யார் மாநில பொறுப்பைக் கவனித்துக்கொள்வது என்ற கேள்வி எழுந்தது. அதோடு, இவர்கள் தலைவராகப் போகிறார்கள் என்று முன்னாள் மாநிலத் தலைவர் உட்பட சிலரின் பெயர்களும் அடிபட்டன.

அண்ணாமலை

ஆனால், அவை வெறும் பேச்சுகளாக மட்டுமே இருந்தன. இவ்வாறிருக்க, முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா கிளம்பிய அன்றே, அண்ணாமலையும் லண்டன் புறப்பட்டார். அங்கு, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மூன்று மாத காலம் அரசியல் படிக்கவிருக்கிறார். இந்த நிலையில், மாநிலத்தில் அவரின் பணிகளைக் கவனிக்க ஹெச்.ராஜா தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

பாஜக அறிக்கை

இது தொடர்பாக, பா.ஜ.க தேசியச் செயலாளர் அருண் சிங் வெளியிட்ட அறிக்கையில், `பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வழிகாட்டுதலின்படி, ஒருங்கிணைப்புக் குழுவில் ஹெச்.ராஜா ஒருங்கிணைப்பாளராகவும், சக்கரவர்த்தி, கனகசபாபதி, முருகானந்தம், ராம சீனிவாசன், எஸ்.ஆர்.சேகர் ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தக் குழு, கட்சிக் கூட்டங்களை நடத்தி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.