அண்மையில் வெளியான இயக்குநர் மாரி செல்வராஜின் `வாழை’ திரைப்படத்தின் கதை குறித்து எழுத்தாளர் சோ.தர்மனின் முகநூல் பதிவு விவாதத்தைக் கிளம்பியிருக்கிறது.
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் திரைப்படங்களின் இயக்குநர் மாரி செல்வராஜ். `தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்’, `மறக்கவே நினைக்கிறேன்’ போன்ற நூல்களால் எழுத்தாளராகவும் அறியப்படுகிறார். இவர் திருவைகுண்டம் வட்டம், புளியங்குளம் ஊரில் பிறந்து வளர்ந்தவர். தன் சொந்த வாழ்க்கை அனுபவங்களைப் புனைவு கலந்து வாழை திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார். பார்வையாளர்களுக்கும் தன் அனுபவத்தைக் கடத்துவதில் வெற்றியும் பெற்றுள்ளார்.
அண்மையில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘வாழை’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சிறுவயதில் தானும், தன் குடும்பத்தாரும், தன் கிராமத்தினரும் அனுபவித்த வலியை திரைப்படமாக வாழை மூலமாக மாற்றியிருக்கிறார் மாரி செல்வராஜ். சிறுவயதில் தான் வாழை சுமந்து வேலை பார்த்த அனுபவத்தை தன் நூல்களிலும் எழுதியிருக்கிறார்.
தற்கால கரிசல் நில எழுத்தாளர்களில் நன்கு அறியப்பட்டவர் சோ.தர்மன். கூகை, சூல் உட்பட சில நாவல்களையும் குறிப்பிடத்தக்கச் சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். இவரது படைப்புகளுக்காக மாநில அரசு விருது, சாகித்ய அகாடமி விருது, ஆனந்த விகடன் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில், வாழை படத்தின் கதை குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியிருந்தார் சோ.தர்மன். அதில், “ஏராளமான நண்பர்களிடமிருந்து போன் கால்கள்.வாழை படம் பாருங்கள்.உங்கள் சிறுகதை அப்படியே இருக்கிறது என்று.இன்று படம் பார்த்தேன். என் உடன் பிறந்த தம்பியும் என் தாய் மாமாவும் பெண் எடுத்திருக்கிற ஊர் திருவைகுண்டம் அருகில் உள்ள பொன்னங்குறிச்சி.வாழைதான் பிரதான விவசாயம்.நான் அங்கு போகும் போதெல்லாம் வாழைத்தார் சுமக்கும் சிறுவர்களின் கஷ்டத்தை பார்த்து எழுதியதுதான் என்னுடைய “வாழையடி……” என்கிற சிறுகதை. என் கதையில் லாரி, டிரைவர், கிளீனர், இடைத்தரகர், முதலாளி, சிறுவர்கள், சிறுமிகள், அவர்கள் படுகின்ற கஷ்டம்,கூலி உயர்வு எல்லாம் உண்டு.ஆனால் டீச்சர்,கர்ச்சீப்,காலாவதியாகிப் போன பொருட்கள், கம்னியூஸ்ட் கட்சி சின்னம், துன்பவியல் விபத்து கிடையாது.
வெகுஜன ஊடகமான சினிமாவுக்கு வந்ததால் வாழை கொண்டாடப்படுகிறது. ஆனால் பத்தாண்டுகளுக்கு முன்பே சிறுகதையாக எழுதிய என்கதை இலக்கியமாகவே நின்று விட்டது.இன்று கொண்டாடப்படுகின்ற ஒரு கதையை பத்தாண்டுகளுக்கு முன்பே நான் எழுதியிருக்கிறேன் என்று சந்தோஷப்பட்டுக் கொள்கிறேன் .ஒருபடைப்பாளி என்கிற வகையில் கர்வமும் கொள்கிறேன்.இச் சிறுகதை என்னுடைய “நீர்ப் பழி”என்கிற சிறுகதைத் தொகுப்பில் இரண்டாம் கதையாக இடம் பெற்றிருக்கிறது. கிராமங்களில் வாழையைப் பற்றி ஒரு சொலவடை உண்டு. வாழை வாழவும் வைக்கும்.தாழவும் வைக்கும். என்னை வாழை வாழ வைக்கவில்லை.” என்று கூறியுள்ளார். ஆனால் அந்தக் கதைக்கும் வாழை படத்துக்கும் என்ன சம்பந்தம், மாரி செல்வராஜின் சொந்த வாழ்க்கை அனுபவம் அந்தப் படம் என பலரும் பதிவிட்டு வருகின்றனர். சரி, எழுத்தாளர் சோ.தர்மனின் கதையில் எழுதியிருப்பது என்ன?
வாழையடி…
ஓர் அதிகாலையில் தரகரும் கிளீனரும் பேரம் பேசி மக்களை வாழைத்தார் சுமக்க அழைப்பதாகத் தொடங்குகிறது இந்த சிறுகதை. வாழை தோப்புக்குச் செல்லும் பயணம், வாழையைத் தூக்கும் விதம் என விரிந்து சிறுவர்களின் வலியைப் பதிவு செய்கிறது. எறும்புகளாக வரப்பில் வாழைத்தாருடன் நடந்து செல்லும் சிறுவர் சிறுமியரும் அவர்களை அதிகாரம் செய்யும் தரகரும் முக்கிய மாந்தர்களாக இடம் பெற்றிருக்கின்றனர். வாய்க்கால் நீரில் கொண்டாட்டமாக நடமாடும் சிறுமி ஒருத்திக்கு நடக்கும் துன்பியல் நிகழ்வோடு இச்சிறுகதை முடிகிறது.
வாழை சுமக்கும் சிறுவர் கதை என்ற காரணத்துக்காக வாழை திரைப்படத்தின் கதையை கேள்விக்குட்படுத்துவது முறையானதல்ல. வாழையடி, சிறுகதையில் வாழைத்தோப்பிற்கு வெளியிலான அவர்களது வாழ்க்கையைக் காட்டவில்லை. வாழைத் தோப்பு, திருவைகுண்டம் என்ற களம் ஒன்றாக இருந்தாலும், வாழை திரைப்படத்தின் கதையை வாழையடி கதையின் நீட்சியாகவோ அல்லது இன்ஸ்பிரேஷனாகவோ கருத முடியாதபடி இரண்டும் வெவ்வேறு வெளிகளில் பயணிக்கின்றன.
மறுபுறம், வாழை திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ள வாழ்க்கை குறித்து இதற்கு முன்னரே, ஆனந்த விகடனில் வெளியான தனது மறக்கவே நினைக்கிறேன் தொடரில் ஆழமாகவே பேசுயுள்ளார் மாரி செல்வராஜ். மேலும், அண்மையில் இத்திரைப்படம் குறித்தும், அதற்குப் பின்னான வாழ்க்கை குறித்தும் விரிவான ஆவணப்படத்தையும் சினிமா விகடன் யூட்யூப் சேனல் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வாழையடி… சிறுகதை குறித்து மாரி செல்வராஜ்…
வாழையடி சிறுகதை குறித்து தன் முகநூல் பக்கத்தில் நேற்று எழுதியுள்ளார். அதில், “வாழைக்காய் சுமை தூக்கும் தொழிலாளர்களைப் பற்றி எழுத்தாளர் சோ.தர்மன் வாழையடி என்ற பெயரில் எழுதிய சிறுகதையை இப்போதுதான் வாசித்தேன். இதோ அந்த வாழையடி சிறுகதை. அவசியம் இந்த கதையை அனைவரும் வாசியுங்கள்… எழுத்தாளர் சோ.தர்மன் அவர்களுக்கு நன்றி (வாழையடி… கதைக்கான லிங்கை கொடுத்துள்ளார்).” என்று கூறியுள்ளார்.
இயக்குநர் மாரிசெல்வராஜ் தன் வாழ்வில் நடந்த துயர் மிக்க ஒரு சம்பவத்தை, அதில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் நெகிழ்ந்து பாராட்டும்படி படைப்பாக்கியிருக்கிறார். இப்படியிருக்க வாழை திரைப்படம் எழுத்தாளர் சோ.தர்மனின் கதையிலிருந்து எடுக்கப்பட்டது எனச் சொல்லி பதிவிடுவது அபத்தம்.
இந்நிலையில் புளியங்குளத்தில் வாழும் வாழை படத்தின் நிஜ சம்பவத்துடன் தொடர்புடைய மக்கள் சொல்லியிருக்கும் தகவல் கீழே உள்ள வீடியோவில்….