`முருகனுக்குத் தமிழ், ஆங்கிலம் தெரியுமா என விமர்சித்த திமுக-வினர், இப்போது..’- கடம்பூர் ராஜூ காட்டம்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில்  செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ,  ”நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என, அ.தி.மு.க ஆட்சியில் இறுதி வரை போரடினோம்.  நீதிமன்றத் தீர்ப்பு காரணமாக நீட் தேர்வு நடைபெற்றது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டினை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார்.

கடம்பூர் ராஜூ

இதனால், அரசு பள்ளி மாணவர்கள், ஏழை, எளிய மக்களின் குழந்தைகள் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் நிலை உருவாகி உள்ளது. ஆனால், ஒரே கையெழுத்தில் நீட் தேர்வினை ரத்து செய்து விடுவதாக கூறிய தி.மு.க, 3 ஆண்டுகளாகியும் அதனை செய்யமால் ஏமாற்றி வருகிறது. ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ஒன்று கூடி எடப்பாடி பழனிசாமியை முதல்வராகத் தேர்ந்தெடுத்தோம். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் துயரப்பட்டு இருந்த எங்களுடன், அவருடைய நிழலாக இருந்த சசிகலா எங்களுக்கு ஆதரவாக இருந்ததார்.

அ.தி.மு.க-வின் 124 சட்டமன்ற உறுப்பினர்கள் சேர்ந்துதான் கையெழுத்துயிட்டு எடப்பாடி பழனிசாமியை முதல்வராகத் தேர்ந்தெடுத்தோம். பா.ஜ.க-வைப்போல் வடமாநிலங்களில் குழப்பம் செய்தோ, அல்லது சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்ததைப்போலவோ நாங்கள் ஆட்சி அமைக்கவில்லை. கர்நாடக மாநிலத்தில்கூட சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி குழப்பத்தினை ஏற்படுத்த பா.ஜ.க முயன்று வருகிறது.

கடம்பூர் ராஜூ

வடமாநிலங்களில் அசிங்கமான அரசியல் நடத்தி பேரம் பேசி, ஆட்சியைக் கவிழ்த்து, அரசியலை கேலி கூத்தாக்கிய கட்சிதான் பா.ஜ.க. அ.தி.மு.க ஆட்சியில் இந்து அறநிலையத்துறை மூலம் செய்யப்பட்ட பணிகள் குறித்தும், நடைமுறைப்படுத்த திட்டங்கள் குறித்தும் அமைச்சர் உதயநிதி தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை. அப்போது அவர் நடிகராக மட்டும்தான் இருந்தார். முருகனுக்கு தமிழ், ஆங்கிலம் தெரியுமா என்று விமர்சித்தவர்கள்தான் தி.மு.க-வினர்.

ராமர் என்ன இன்ஜினீயரா என்று சேது சமூத்திர திட்டம் தொடர்பாக விமர்சனம் செய்தனர். எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு, ஆளும் கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு… எப்போதும் தி.மு.க இரட்டை நிலைப்பாட்டில்தான் இருக்கும். இந்து அறநிலைத்துறை அ.தி.மு.க ஆட்சியில் அறமாக இருந்தது. ஆனால், தற்போதைய தி.மு.க ஆட்சியில் அதை கேலிக்கூத்தாக்கி வைத்துள்ளனர்.

பழனி முத்தமிழ் முருகன் மாநாடு

பழனியில் நடைபெற்ற மாநாட்டில் பல நாடுகளில் இருக்கும் முருக பக்தர்கள் அழைக்கப்படவில்லை. பழனியில் நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாடு என்பது தி.மு.க-வின் சுய விளம்பரத்திற்காக நடத்தப்பட்ட மாநாடு. கடவுளை ஏமாற்றுக்கின்ற மாநாடு. இதுவரை தி.மு.க-வின் ஆட்சியில் மக்களை ஏமாற்றி வந்தனர். தற்போது கடவுளை ஏமாற்ற முயற்சித்துள்ளனர் என்பதுதான் இந்த மாநாட்டின் மூலம் நமக்கு கிடைத்த செய்தி. .தி.மு.க-விற்கு கடவுள் தண்டனை கிடைக்கும்” என்றார்.