பழைய ஓய்வூதியம் ரத்து..!
இந்தியாவில் நீண்டகாலம் நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டு, புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதன்படி, 2004-ம் ஆண்டுக்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்த அனைவரும் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வருகிறார்கள்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி, அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்படும். அதாவது, ஓர் அரசு ஊழியர் கடைசியாகப் பெற்ற சம்பளத்தில் 50 சதவிகிதம் ஓய்வூதியமாக வழங்கப்படும். ஓய்வுபெறும் ஊழியர்களுக்கும், அவர்களுக்குப் பிறகு குடும்பத்தினருக்கும் மாதாந்திர ஓய்வூதியமும் பணிக்கொடை போன்ற பயன்களும் அளிக்கப்பட்டுவந்தன.
2004-ம் ஆண்டு, ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இந்தப் பயன்கள் இல்லை. எனவே, ‘அனைத்து ஊழியர்களுக்கும் சமூக, பொருளாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதற்காக, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும்’ என்று மத்திய, மாநில அரசு ஊழியர்கள் போராடிவருகிறார்கள். அரசு ஊழியர்களின் வாக்குகள், அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் வாக்குகள் கணிசமாக இருப்பதால், தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவருவோம்’ என்ற வாக்குறுதியை அளிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றன.
தமிழ்நாட்டில் தி.மு.க-வும் அந்த வாக்குறுதியை அளித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவர வாய்ப்பே இல்லை என்று அடியோடு மறுத்தார். 2016-ல் ஜெயலலிதாவும், பழைய ஓய்வுதியத் திட்டத்தைக் கொண்டுவருவோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தார். மத்திய பா.ஜ.க அரசும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவருவதற்கு சாத்தியமே இல்லை என்று சொல்லிவந்தது.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்
இந்த நிலையில், ‘ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது மத்திய அரசு.இந்தத் தகவலை மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘அரசு ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பு தொடர்பாக கவலை தெரிவிக்கப்படுகிறது. அதில், ஓய்வூதியம் முக்கியமானதாக இருக்கிறது’ என்றார். தேசிய ஓய்வூதிய முறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்ற அரசு ஊழியர்களின் கோரிக்கை குறித்து பேசிய அவர், அது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது என்றும், தற்போது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறினார்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து பல மாற்றங்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் காட்டிலும், அதிக ஓய்வூதியம் கிடைக்கும் என்கிறார்கள் அரசு தரப்பில்.
இந்த நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு அழுத்தங்கள் அதிகரித்திருக்கின்றன. ‘பழைய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டுவருவோம் என்ற தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதியை எள்ளளவும் மாற்றமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்று தலைமைச்செயலக சங்கம் உள்பட பல்வேறு அரசு ஊழியர் அமைப்புகள் வலியுறுத்தியிருக்கின்றன.
தமிழ்நாடு தலைமைச் செயலக சங்க தலைவர் கு.வெங்கடேசன், ‘மத்திய அரசு அறிவித்திருக்கும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை வரவேற்கிறோம். இந்தத் திட்டத்தின் அடிப்படையில், மத்திய அரசின் பணிக்கு 2004 ஜனவரி 1-ம் தேதிக்கு பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பழைய ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக செயல்படுத்தாமல், ஒரு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத்தை உத்தரவாதப்படுத்தும் இலக்கை நோக்கி மத்திய அரசு சென்றிருக்கிறது. இதுநாள் வரை குடும்ப ஓய்வூதியம் முற்றிலும் மறுக்கப்பட்ட நிலையில், அதற்கான திறவுகோலுக்கு மத்திய அரசு தற்போது வித்திட்டிருக்கிறது.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தற்போது ஆட்சிப் பொறுப்பில் உள்ள திமுக அரசு, 40 மாதங்கள் கடந்த நிலையில், தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதி திட்டத்தை எள்ளளவும் மாற்றமின்றி நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள தலைமைச் செயலக சங்கம் கேட்டுக் கொள்கிறது’ என்று கு.வெங்கடேசன் வலியுறுத்தியிருக்கிறார்.
மக்களவைத் தேர்தலின்போது, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக வாக்குறுதி எதையும் பா.ஜ.க அளிக்கவில்லை. ஆனால், மூன்றாவது முறையாக மோடி தலைமையில் பா.ஜ.க ஆட்சியமைத்திருக்கும் நிலையில், ஒருங்கிணைந்த ஓய்வூதியம் என்ற வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஆகியவற்றை 2025-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறது.
இதன் மூலமாக, ஓய்வூதியத் திட்டம் விவகாரத்தில் பா.ஜ.க அரசு மீது அரசு ஊழியர்களுக்கு இருந்த அதிருப்தி ஓரளவு குறையலாம். தமிழகத்தைப் பொறுத்தளவில், 2026-ல் சட்டமன்றத் தேர்தலை தி.மு.க எதிர்கொள்ளப்போகிறது. இந்த நிலையில், ஓய்வூதியம் குறித்து மாநில அரசு ஊழியர்கள் முன்வைக்கும் கோரிக்கையைப் பரிசீலித்து நிறைவேற்ற வேண்டிய அழுத்தம் தி.மு.க அரசு எழுந்திருக்கிறது.
அரசின் வருவாயில் பெரும் பகுதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் சம்பளத்துக்கும், ஓய்வூதியத்துக்கும் போகிறது என்று ஆட்சியாளர்கள் கவலையுடன் கூறினாலும், தேர்தலில் வெற்றிபெறுவதற்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் ஆதரவு அரசியல் கட்சிகளுக்குத் தேவையாக இருக்கிறது. எனவே, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என்று மத்திய அரசு கொண்டுவந்திருப்பதைப்போல ஏதாவது ஒன்றை செய்ய வேண்டிய கட்டாயம் ஸ்டாலின் அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88