Video: சொந்த கட்சி MLA மீதே முட்டைகளை வீசிய மூத்த நிர்வாகிகள்… தெலங்கானா காங்கிரஸில் அதிருப்தி!

ஆந்திரப் பிரதேசம் 2014-ல் இரண்டு மாநிலங்களாப் பிரிக்கப்பட்ட பிறகு ஆந்திரா, தெலங்கானா இரண்டிலுமே ஆட்சியைப் பிடிக்க முடியாமல் காங்கிரஸ் திணறி வந்தது. அப்படியான சூழலில் தெலங்கானா மாநிலம் உதயமானதிலிருந்து தொடர்ச்சியாக 9 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி (முதலில் தெலங்கானா ராஷ்டிர சமிதி) அரசை, கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் வீழ்த்தி ஆட்சியமைத்தது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ காலே யாதய்யா – தெலங்கானா

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து இன்னும் ஒரு வருடம்கூட ஆகாத நிலையில், சொந்த கட்சி எம்.எல்.ஏ காலே யாதய்யா மீது காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் முட்டைகள் மற்றும் தக்காளிகளை வீசிய சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த சம்பவமானது, காலே யாதய்யா தான் பிரதிநிதித்துவப்படுத்தும் செவெல்லா தொகுதியிலுள்ள ஷாபாத் பகுதிக்குச் சென்றபோது நடந்திருக்கிறது. அப்போது, எம்.எல்.ஏ காரை வழிமறித்த காங்கிரஸ் நிர்வாகிகள் முட்டைகளையும், தக்காளிகளையும் கார்மீது வீசினர்.

மேலும், வீதியில் அமர்ந்து `திரும்பிச் செல்லுங்கள், பதவி விலகுங்கள்’ என்று முழக்கமிட்டு தர்ணாவிலும் அவர்கள் ஈடுபட்டனர். இவர்களின் இத்தகைய செயலுக்கு காரணம், பி.ஆர்.எஸ் கட்சியிலிருந்து காங்கிரஸில் சேர்ந்த காலே யாதய்யாவுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம்தான் என்று சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவரும் நிலையில், கட்சிக்குள்ளும் அதிருப்தி நிலவுவதாகக் கூறப்படுகிறது.