தேசிய நல்லாசிரியர் விருது: `மாணவர்களுக்காக செய்த சின்ன சின்ன வேலைகள் இன்று…’ – நெகிழும் முரளிதரன்

“நான் செய்த சின்னச் சின்ன வேலைகள் சாதனைகளாக மாறி, தேசிய நல்லாசிரியர் விருதாகக் கிடைத்துள்ளது..” எனக் கூறி நெகிழ்கிறார், தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்ட மதுரையைச் சேர்ந்த ஆசிரியர் முரளிதரன்.

ஆசிரியர் முரளிதரன்

தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்ட தகவல் வெளியானது முதல் மதுரையைச் சேர்ந்த ஆசிரியர் முரளிதரனுக்கு பொதுமக்களும், பல்வேறு அமைப்பினரும் தேடி வந்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

மதுரை டி.வி.எஸ் மேல்நிலைப்பள்ளியின் தொழிற்கல்வி ஆசிரியர் முரளிதரனுக்கு 2024-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளதைத்தான் மதுரை மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.

38 ஆண்டுகளாக தொழிற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றும் முரளிதரன், மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பிடித்தமானவர். கொரோனா காலத்திலும் ஆட்டோ மொபைல் தொடர்பான பாடங்களை வீடியோக்களைப் பதிவுசெய்து மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளார். இவரது ஆசிரியர் பணியைப் பாராட்டி 2021-ஆம் ஆண்டு தமிழக அரசு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை வழங்கி சிறப்பித்துள்ளது.

ஆசிரியர் முரளிதரன்

தேசிய நல்லாசிரியர் விருது கிடைத்தது குறித்து ஆசிரியர் முரளிதரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “கடந்த 38 ஆண்டுகளாக டி.வி.எஸ் மேல்நிலைப் பள்ளியில் தொழிற்கல்வி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறேன். மிகவும் கஷ்டப்பட்ட ஏழை மாணவர்களுக்கு தொழிற்கல்வியை கற்று கொடுத்துள்ளேன். மதிப்பெண் குறைந்த மாணவர்கள் பாதை மாறி சென்றுவிடக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு தனி கவனம் செலுத்தி கவுன்சலிங் கொடுத்து கற்றுக்கொடுத்தேன். பள்ளியில் நான் செய்த சின்னச் சின்ன வேலைகள் சாதனைகளாக மாறி தேசிய நல்லாசிரியர் விருதாக கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

கல்வியை மட்டும் கற்றுக்கொடுக்காமல் மாணவர்களுக்கு கவுன்சலிங்கும் கொடுத்து கற்பித்து வருகிறேன்‌, கொரோனா காலத்தில் மாணவர்களின் கற்றலுக்கு தடை வந்துவிடக் கூடாது என்பதால் வீடியோ மூலம் கற்று கொடுத்தேன். புத்தகத்தை வீடியோவாக மாற்றினேன். அதோடு, பார்வையற்றோருக்காக ஆடியோ மூலமும் பாடம் நடத்தினேன். சாமானிய மாணவர்களுக்கு நல்ல கல்வியை வழங்கியதன் மூலம் அவர்கள் அதிக மதிப்பெண் பெற்று இன்று சர்வதேச அளவில் பணியாற்றி புதிய கண்டுபிடிப்புகளை வெளி கொண்டு வந்துள்ளார்கள்.

தேசிய நல்லாசிரியர் விருது!

தேசிய நல்லாசிரியர் விருதை எனது குடும்பம் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கு சமர்ப்பிக்கிறேன். தொடர்ந்து மாணவர்கள் முன்னேற்றத்திற்க்காக பாடுபடுவேன்” என்றார்.