Kangana Ranaut: விவசாயிகள் போராட்டம் குறித்த சர்ச்சைக் கருத்து; கங்கனாவை அழைத்துப் பேசிய நட்டா!

சில நாள்களுக்கு முன்பு 2020 – 21-ல் நடந்த விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசியிருந்தார், ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலம், மண்டி மக்களவைத் தொகுதியின் எம்.பி கங்கனா ரனாவத்.

கங்கனாவின் கருத்து, பொது வெளியில் அனலைக் கிளப்பவே… அதில் கட்சிக்கு உடன்பாடு இல்லை என்றும், கட்சி சார்பாகப் பேச கங்கனாவுக்கு அதிகாரம் இல்லை எனவும் உடனடியாக மறுத்தது பா.ஜ.க. தொடர்ந்து இனி, கங்கனா இது போன்ற கருத்துகளைத் தெரிவிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியது.

இந்த நிலையில் கங்கனா ரனாவத்தை பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான ஜே.பி.நட்டா சந்தித்துள்ளது கவனிக்கப்படுகிறது.

வியாழக்கிழமை காலையில் நடைபெற்ற நட்டா – கங்கனா இடையேயான இந்தச் சந்திப்பு 30 நிமிடங்கள் வரை நீண்டதாகக் கூறப்படுகிறது. கங்கனாவை நேரில் அழைத்துப் பேசியது அவருக்கான எச்சரிக்கையாக இருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை 303-ல் இருந்து 240 ஆகக் குறைந்துள்ளது. இந்தச் சறுக்கலுக்கு விவசாயிகள் போராட்டமும் முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், வரும் அக்டோபர் மாதம் ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், கங்கனாவின் கருத்து பா.ஜ.க வாக்கு வங்கியில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். கடந்த இரண்டு நாள்களில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் கங்கனாவின் கருத்துக்கு தீவிரமாக எதிர்வினையாற்றி வருகின்றனர்.

கங்கனா ரனாவத் விவசாயிகளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கின்றனர்.

விவசாயிகள் போராட்டம்

சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பேசி விவாதங்களில் சிக்குவது கங்கனாவிற்கு புதிதல்ல. ஆனால் எம்.பி ஆன பிறகும் இப்படி பின்விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் பேசுவது பா.ஜ.க-வினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.