திமுக மாநகரச் செயலாளர் வீட்டு முன் தீக்குளித்த திமுக நிர்வாகி… மதுரையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

மதுரை மாநகர திமுக செயலாளர் கோ.தளபதி வீட்டு முன் தி.மு.க நிர்வாகி மானகிரி கணேசன் என்பவர் தீவைத்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது மானகிரி கணேசன் சீரியசான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் சில நாள்களுக்கு முன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடித  நகல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

முதலமைச்சருக்கு அனுப்பிய கடித நகல்

இது குறித்து விசாரித்தபோது,”மதுரை ஆவின் திமுக தொழிற்சங்கத்தில் கௌரவத் தலைவராக பதவி வகித்து வந்தவர் மதுரை மானகிரி பகுதியைச் சேர்ந்த கணேசன். இவர் கடந்த 10 ஆண்டுளுக்கு மேலாக திமுகவில் நிர்வாகியாக பணியாற்றி வருகிறார். அவ்வப்போது திமுகவின் சாதனைகளை போஸ்டர் அடித்து வெளிப்படுத்துவார். இரண்டுமுறை மேலூர் சட்டமன்றத்தொகுதியில் போட்டியிட பணம் கட்டி நேர்காணலுக்குச் சென்று வந்துள்ளார்.

கடந்த ஆண்டு மதுரை சிம்மக்கல்லில் உள்ள கருணாநிதி சிலை முன்பாக தமிழக ஆளுநரை கண்டித்து தனது உடலில் டீசலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது உடல் முழுவதிலும் டீசல் பட்டு கொப்பளங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதே நேரம் மிகவும் கஷ்டமான சூழலில் வாழ்ந்து வந்தவரை திமுகவினர் யாரும் நலம் விசாரிக்க வராத நிலையில் மனம் வெறுத்துப்போய் தன் நிலையை விளக்கி திமுக தலைமைக்கும், மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதிக்கும் மனு அனுப்பியுள்ளார்.

மானகிரி கணேசன்

அமைச்சர்களை அனுப்பி வைத்தாவது தன் உடல்நிலை குறித்த உண்மை நிலையை தெரிந்து கொள்ள வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியவர், தன் கடிதத்திற்கும் உரிய பதில் கிடைக்காவிட்டால் ஆகஸ்ட் மாதத்தில் கருணாநிதியின் சிலை முன்பாக தீக்குளித்து உயிரிழப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில்தான் மதுரையிலுள்ள திமுக மாநகர செயலாளர் கோ.தளபதியின் வீட்டிற்கு மானகிரி கணேசன் இன்று காலை சென்றுள்ளார். அப்போது திடீரென வீட்டிலிருந்து வெளியே வந்த மானகிரி கணேசன் தான் கொண்டு சென்ற பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனையடுத்து 80 சதவிகித தீக்காயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த தற்கொலை விவகாரம் தொடர்பாக போலீஸ் விசாரித்து வரும் நிலையில் நீதிபதி வந்து விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார்.

கோ.தளபதி

இதுகுறித்து மானகிரி கணேசனின் உறவினர்கள், “பல ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்தவர். ஆளுநருக்கு எதிராக தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றபோது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. திமுகவினர் யாரும் கண்டு கொள்ளவில்லை. இது தொடர்பாக பலமுறை தலைமைக்கும் மாவட்ட செயலாளருக்கும் மனு அனுப்பியும் எந்த நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்று மாவட்ட செயலாளரின் வீட்டுக்குச் சென்று தீக்குளித்து இப்போது ஆபத்தான நிலையில் இருக்கிறார்” என்று வேதனையுடன் தெரிவித்தனர்.