Assam : முஸ்லிம் திருமணச் சட்டம் ரத்து; UCC-ஐ அமல்படுத்துகிறதா அஸ்ஸாம் பாஜக அரசு?!

அஸ்ஸாம் சட்டமன்றத்தில் வியாழக்கிழமை `அஸ்ஸாம் ரத்து மசோதா, 2024′ நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, அஸ்ஸாம் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டம், 1935-ஐ ரத்து செய்கிறது. 

குழந்தைத் திருமணத்தை ஒழிக்கவும், இஸ்லாமியர் திருமணப் பதிவில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த Qazi முறையை ரத்து செய்யவும் இந்த புதிய மசோதா கொண்டுவரப்பட்டதாக அஸ்ஸாம் அரசுத் தெரிவிக்கிறது. இதற்கு மாற்றாக அஸ்ஸாம் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து கட்டாய பதிவுச் சட்டம், 2024 நடைமுறைப்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. 

புதிய சட்டம் குறித்துப் பேசிய அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, “நாங்கள் Qazi முறையையும் குழந்தைத் திருமணங்களையும் ஒழிக்க விரும்புகிறோம்” எனக் கூறியுள்ளார்.

ஆளும் தரப்பு பழைய சட்டத்தில் பல ஓட்டைகள் இருப்பதாகக் குறிப்பிடுகிறது. 21 வயதுக்கு உட்பட்ட ஆணுக்கும் 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணுக்கும் திருமணம் நடத்தப் பழைய சட்டத்தில் இடம் உள்ளது என்றும், ஒருவரின் விருப்பம் இன்றி திருமணம் நடத்தவும், திருமணங்களைத் தவறாகப் பயன்படுத்தவும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர் அமினுல் இஸ்லாம்

புதிய மாசோதாவவை எதிர்க்கட்சிகள் ‘இஸ்லாமியர்களுக்கு எதிரான அடக்குமுறை’ என்கின்றன. அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர் அமினுல் இஸ்லாம், “நாங்கள் குழந்தைத் திருமணத்துக்கு எதிராக உள்ளோம். அரசு முந்தைய சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு அமல்படுத்தியிருக்கலாம். ஆனால் சட்டத்தை முழுவதுமாக ரத்து செய்ததால் தற்போது எங்களுக்கு நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழி இல்லை.” எனப் பேசியுள்ளார்.

முன்னதாக அஸ்ஸாம் முதலமைச்சர் இஸ்லாமியர்கள் அஸ்ஸாமில் அதிக அளவில் பெருகிவருகின்றனர் எனச் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். uniform civil code அமல்படுத்தப்பட வேண்டும் எனவும் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். 

அஸ்ஸாமில் பத்து வருடங்களுக்கு 30% அதிகரிக்கும் இஸ்லாமியர்கள் மக்கள்தொகை 2041-ல் இந்துக்களை விட அதிகமாக இருக்கும் என அவர் கூறினார். மேலும் இந்துக்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும் மாவட்டங்களில் இந்துக்கள் சிறுபான்மையினராக அங்கீகரிக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.