புதுச்சேரி: `செயலரா… சி.எம்-மா?’ – முதல்வரின் தனிச்செயலரைச் சாடிய எம்.எல்.ஏ – என்ன நடந்தது?

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் தனிச் செயலராக இருப்பவர் அமுதன். இவர் பதவியேற்ற நாளிலிருந்து தன்னிச்சையாக செயல்படுவதாக, என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களே குற்றம் சுமத்தி வருகின்றனர். இந்த நிலையில் தொகுதியில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் காசோலையை, தொகுதி எம்.எல்.ஏ-விடம் கொடுக்காமல் அமுதனே நேரடியாக வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று சட்டப்பேரவை வளாகத்திலுள்ள தனிச் செயலர் அலுவலகத்திற்கு சென்றார் இந்திரா நகர் தொகுதியின் எம்.எல்.ஏ ஏ.கே.டிஆறுமுகம். அப்போது அங்கிருந்த ஊழியர்கர்ள் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

கடுப்பான எம்.எல்.ஏ ஏ.கே.டி ஆறுமுகம், “என் தொகுதியில் இவர் எப்படி பயனாளிகளுக்கு செக்கை கொடுக்கலாம். இவர் தனிச் செயலாரா இல்லை சி.எம்.ஆ… இல்லை சி.எம்மை விட பெரிய ஆளா ? பதவியை ரிசைன் பண்ணிட்டு, எம்.எல்.ஏ-வாகிவிட சொல்லேன். செக்கை நீங்க ஏண்டா பயனாளியிடம் நேரடியா கொடுக்கறீங்க ? ஒழிச்சிடுவேன். நாங்களெல்லாம் லோல்பட்டு கோடிக்கணக்கில் செலவழிச்சிட்டு இருக்கோம்.

எம்.எல்.ஏ ஏ.கே.டி ஆறுமுகம்

நீங்க உள்ள உக்காந்துகிட்டு வேலை காட்டிக்கிட்டு இருக்கீங்களா ? தூக்கிப் போட்டு மிதிச்சிடுவேன்” என்று கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சில மாதங்களுக்கு முன்பு கார் விவகாரத்தில் தனிச் செயலர் அமுதனிடம், ஏ.கே.டி ஆறுமுகம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தற்போது மீண்டும் இன்று அவரிடம் எம்.எல்.ஏ வாக்குவாதத்தில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.