தினசரி சராசரி வேலை செய்து செலவை சந்திக்கும் அளவிற்கு மட்டுமே சம்பளம் ஈட்டும் மனிதர்கள்கூட, வேலை செய்யும் இடத்திற்கு அருகே ஒரு நல்ல வீடு ஒன்றினை வாங்கி குடியேற நினைப்பர். ஆனால் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு நபர் ஆண்டிற்கு 1.6 மில்லியன் டாலர் (சுமார் ரூ.13.43 கோடி) சம்பளம் பெற்றும் தினம் 1,600 கிமீ பயணித்து ஆபிஸ் செல்கிறார்.
அது என்ன வேலை, என்ன அலுவலகம் என்றுதானே யோசிக்கிறீர்கள். இளைஞர்களை ஈர்க்கும் ஆடம்பர கஃபே தான் ‘ஸ்டார் பக்ஸ்’. இந்த ஸ்டார்பக்ஸின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார் பிரைன் நிகோல். இவரது ஆண்டு சம்பளம் என்று குறிப்பிட்டு மட்டுமே ஒரு வருடத்திற்கு 1.6 மில்லியன் டாலர் பெறுகிறார். இது மட்டுமல்லாது வேலையில் ஈடுபடும் விதம், ஆர்வம், அதில் அடையும் வெற்றிகள் என்று அதன் அடிப்படையில் சுமார் 3.6 மில்லியன் டாலர்கள் முதல் 7.2 மில்லியன் டாலர்கள் வரை போனஸ் கிடைக்கும். இப்படி மில்லியன் டாலர்களில் மிளிரும் நிகோல் தான் வசித்து வரும் கலிபோர்னியாவில் இருந்து தினம் 1600 கிமீ பயணம் செய்து வாஷிங்டன்னில் உள்ள ஸ்டார் பக்ஸ் ஆபீஸுக்குச் செல்கிறார்.
இப்போது உள்ள காலக்கட்டத்தில் நமது வாழ்க்கை சூழலின் மாற்றத்தினாலும் வாழ்வியல் மாற்றத்தினாலும் 30 வயதை அடையும்போதே 20-25 கிமீ பயணத்திற்கே உடல் சோர்வு, அலைச்சல் என சோர்ந்துவிடுகின்றனர் . ஆனால் தினம் 1600 கி.மீ பயணம் செய்யும் நிகோலிற்கு 50 வயதாகிறதாம்.
தினம் இது எப்படி சாத்தியம் என்று பார்த்தால், நிகோல் தினம் தொலைதூரத்திற்கு பயணம் செய்வதற்காகவே ‘கார்ப்பரேட் ஜெட்’ ஒன்றை வைத்துள்ளார். நிக்கோல் இதுபோல தினசரி விமானத்தில் பயணித்து பணிபுரிவது முதல் முறையல்ல, 2018-ம் ஆண்டு சிபொட்டில் (Chipotle) நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தபோது, இதேபோன்ற வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
சிபொட்டில் நிறுவனத்தின் தலைமையகம் முதலில் கொலராடோவில் இருந்தது. அப்போது நிக்கோலின் வீட்டில் இருந்து அலுவலகம் 15 நிமிட பயணத்தில் அடையும்படி இருந்தது. ஆனால் நிக்கோல் சி.இ.ஓ ஆன பிறகு, அதன் தலைமையகம் கலிபோர்னியாவிற்கு மாற்றப்பட்டது. இதனால் அவர் விமான வசதியை பயன்படுத்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டார். தற்போது ஸ்டார் பக்ஸ்’ நிறுவனமும் அவருக்கு கார்பரேட் ஜெட் வசதியை கொடுத்திருக்கிறது.