ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தால் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பலனடைவார்களா..?

“அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அமுலுக்கு வரும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தினால் உறுதியான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், உறுதியான குறைந்தபட்ச ஓய்வூதியம், கருணைத்தொகை, பணவீக்க அட்டவணைக்கேற்ப பண பலன்கள் கிடைக்கும்” என்று ரயில்வே அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

பிரதமர் மோடி

மத்திய அரசின் புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு ரயில்வே உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் பல ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த இறுதிகட்ட பேச்சு வார்த்தையில் புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு மாற்றாக ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபட்டுத்த முடிவு செய்துள்ளது.

இந்தப் புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் பலன்கள் குறித்து மதுரை கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் எல்.நாகேஸ்வரராவ செய்தியாளர்களிடம்  பேசும்போது, “மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு ஆகஸ்டு 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும், 01.01.2004 முதல் பணியமர்த்தப்பட்ட ரயில்வே ஊழியர்கள் உட்பட 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் இந்த புதிய ஓய்வு ஊதிய திட்டத்தின் மூலம்  பயனடைவார்கள்.

இந்த புதிய ஓய்வூதிய திட்டம் 01.4.2025 முதல் அமுலுக்கு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் உறுதியான ஓய்வூதியம், உறுதியான குடும்ப ஓய்வூதியம், உறுதியான குறைந்தபட்ச ஓய்வூதியம், கருணைத்தொகை, பணவீக்க அட்டவணைக்கேற்ப ஓய்வூதிய பண பலன்கள் வழங்கப்படும்.

ரயில்வே ஊழியர்கள்

தெற்கு ரயில்வேயில் தற்போது ரயில்வே ஊழியர்களின் எண்ணிக்கை 81,311 ஆகும். இதில் 689 ரயில்வே அதிகாரிகள் மற்றும் 17,916 ஊழியர்கள் உட்பட மொத்தம் 18,605 பேர் பழைய ஓய்வூதிய திட்டத்தில் உள்ளனர். மீதமுள்ள 439 ரயில்வே அதிகாரிகள் மற்றும் 62,267 ஊழியர்கள் உட்பட மொத்தம் 62,706 பேர் இந்த புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு விருப்பம் தெரிவிக்க தகுதி பெற்றவர்கள்.

மதுரை ரயில்வே கோட்டத்தில் தற்போது ரயில்வே ஊழியர்களின் எண்ணிக்கை 8242 ஆகும். இதில் 49 ரயில்வே அதிகாரிகள் மற்றும் 1560 ஊழியர்கள் உட்பட மொத்தம் 1609 பேர் பழைய ஓய்வூதிய திட்டத்தில் உள்ளனர். மீதமுள்ள 30 ரயில்வே அதிகாரிகள் மற்றும் 6603 ஊழியர்கள் உட்பட மொத்தம் 6633 பேர் இந்த புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு விருப்பம் தெரிவிக்க தகுதி பெற்றவர்கள்.

இந்தத் திட்டத்தில் முக்கியமான 9 சிறப்பம்சங்கள் உள்ளன. 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்த ஊழியர்களுக்கு பணி நிறைவுக்கு முந்தைய 12 மாதங்களின் பெற்ற சராசரி அடிப்படைச் சம்பளத்தில் 50 சதவிகிதம் ஓய்வூதியம் வழங்கப்படும். ஓய்வூதியர் இறந்தால் அவரது குடும்பத்தினருக்கு அவர் பெற்ற ஓய்வு ஊதியத்தில் 60 சதவிகிதம் ஓய்வூதியமாக வழங்கப்படும்.

செய்தியாளர் சந்திப்பில்

10 வருடங்கள் சேவை செய்த ஊழியர்களுக்கு உறுதியான குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதம் ரூ 10,000 வழங்கப்படும். பண வீக்கத்திற்கு ஏற்ப ஓய்வூதியங்கள் அட்டவணைப்படுத்தப்படும், அகில இந்திய நுகர்வோர் விலை குறையீட்டுக்கேற்ப நிவாரணப் படி வழங்கப்படும்.

ஓய்வு பெறும் நாளன்று உரிய கருணைத் தொகையுடன் மொத்தமாக பணப்பலன்கள் வழங்கப்படும். இது ஓய்வூதியத் தொகையை பாதிக்காது. நடப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் இந்த திட்டம் பொருந்தும் அவர்களுக்கும் ஏற்கனவே பெறப்பட்ட பணப் பலன்களை கணக்கிட்டுஉரிய நிலுவைத் தொகை வழங்கப்படும். இந்த திட்டம் ஊழியர்களின் விருப்பத்தின் பேரில் மட்டுமே வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தில் ஊழியர்களின் பங்களிப்பு தொகை உயராது. ஆனால் அரசின் பங்களிப்பு 14 சதவிகித்திலிருந்து 18.5 சதவிகிதமாக உயர்த்தப்படும்” என தெரிவித்தார்.