`தலைவர்களுக்கு மரியாதை’: அண்ணாமலை vs தமிழிசை… மீண்டும் மோதலா?!

சமீபத்தில் பா.ஜ.க பொதுக் கூட்டத்தில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, “எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க பிட்டிங் ஏஜென்ட் கட்சியாக இருக்கிறது. பழனிசாமி என்னைப் பற்றியும், கட்சியைப் பற்றியும் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். யாரையோ பிடித்து, உழைக்காமல் பதவிக்கு வந்த அண்ணாமலைக்கு என்ன தெரியும். மைக்கை பார்த்தாலே பொய் பேசுவார் எனச் சொல்லியிருக்கிறார். அதற்கு நான் கருத்துச் சொல்ல வேண்டும். முன்னொரு காலத்தில் சிலுவம்பாளையத்தில் நடந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர் ஒருவர் பின்னர் தி.மு.க அமைச்சரின் தயவால் அந்த வழக்கை உடைத்து சிலுவம்பாளையம் பஞ்சாயத்துத் தேர்தலில் நின்று தோற்றவர்தான் இந்த பழனிசாமி.

எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, மோடி

எனவே நீங்கள் நேர்மையைப் பற்றி எனக்கு நீங்கள் பாடம் எடுக்க வேண்டாம். கூவத்தூரில் நடந்தது கட்சியின் பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வா?. அங்கு நடந்தது அலங்கோலம். டெண்டர் சிஸ்டத்தில் முதல்வரைத் தேர்வு செய்தார்கள். ஹைய்ஸட் பிட்டராக எடப்பாடி பழனிசாமி இருந்தார். என்ன பிட்டிங் என்றால் எந்த எம்எல்ஏ-வுக்கு மாசம், மாசம் எவ்வளவு என்ன பணம் கொடுக்க வேண்டும் என்பதுதான் கூவத்தூரில் நடந்த பிட்டிங் முறை. அதன்பிறகு தவழ்ந்து வந்து முதல்வர் பதவியைப் பிடித்தவர் எடப்பாடி பழனிச்சாமி. புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி நடத்திய கட்சியை இன்று கிணற்றுத் தவளைகள் வழிநடத்திக் கொண்டிருக்கிறீர்கள். 2026-ம் ஆண்டு நடக்கும் தேர்தலில் தூக்கியெறியப்படுவீர்கள். அப்போது நான்காவது இடம் கூட அ.தி.மு.க-வுக்கு கிடைக்காது.

2019-ம் ஆண்டு வாரணாசியில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்வதற்குச் சென்றார். கூட்டணிக் கட்சி முதல்வர்கள் அங்குச் சென்றார்கள். நீங்களும் வாங்கண்ணா போகலாம் என்றேன். அதற்கு எடப்பாடி தோற்கப்போகும் மோடிக்காக நான் ஏன் வாரணாசிக்கு வர வேண்டும் என்றார் எடப்பாடி. அதை இல்லை என்று எடப்பாடி சொல்லட்டும். என்னுடைய தலைவனைப் பற்றி எடப்பாடி எப்படி தவறாகப் பேச முடியும். அன்றிலிருந்து மானமுள்ள அண்ணாமலை கூட்டணிக் கட்சித் தலைவராக எடப்பாடியைப் பார்த்தது இல்லை. தவழ்வதைப் பற்றி, ஒருவரின் காலை பிடித்து ஆட்சிக்கு வருவது பற்றி, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் எம்எல்ஏ-க்களுக்கு மாசம், மாசம் பணம் கொடுத்து முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் எடப்பாடி தயவுசெய்து எனக்குப் பாடம் எடுக்க வேண்டாம்” எனப் பேசியிருந்தார்.

தமிழிசை செளந்தரராஜன்

இதற்கு அ.தி.மு.க தலைவர்கள் எதிர்வினையாற்றியதால் அதகளமானது தமிழக அரசியல் களம். இந்த சூழலில்தான் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை, “பொது மேடையில் பேசுவதில் அவரவர்களுக்கென ஒரு பாணி இருக்கும். அண்ணாமலை பேசியது அவரது பாணி. ஆனால், என்னைப் பொறுத்தவரைத் தலைவர்களுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதைக் கொடுக்க வேண்டும். வார்த்தைகள் கடுமையாக இருக்க வேண்டாம் என்பது எனது கோரிக்கை. அ.தி.மு.க-வுடன் பா.ஜ.க இனி எப்போதும் கூட்டணி கிடையாது என அண்ணாமலை கூறியிருக்கிறார். ஒரு கட்சியின் மாநிலத் தலைவராகக் கருத்துச் சொல்வதற்கும், முடிவெடுப்பதற்கும் அவருக்கு உரிமை இருக்கிறது.

பின்பு அது விவாதங்களுக்கு உட்படுத்தப்படலாம். தொண்டர்களிடம் கருத்துகள் கேட்கப்படலாம். எனவே மேடையில் மட்டுமே முடிவு செய்வது என்பது எனது அரசியல் அனுபவத்தில் சரியா என்பது என் கேள்வி?. இதை வைத்து அண்ணாமலைக்கும் எனக்கும் சர்ச்சையை ஏற்படுத்திவிடக் கூடாது. எனது அணுகுமுறை வேறு, அவரது அணுகுமுறை வேறு. நானும் அதே கட்சியில் ஐந்தரை வருடங்கள் மாநிலத் தலைவராக இருந்தவள்தான். மாநிலத் தலைவராக அவரின் கருத்துகளை உறுதியாகச் சொல்கிறார். ஆனால், கட்சியின் கருத்து, நிர்வாகிகளின் கருத்து எல்லாம் கேட்கப்பட்டு, அதில் ஒரு முடிவுக்கு வரலாம். மாநிலத் தலைவரின் கருத்தை, அந்தக் காலப்பொழுதில் ஏற்றுக்கொள்வதுதான் ஒரு கட்சியின் காரியக்கர்த்தாக்களின் முடிவாக இருக்க முடியும். அதனால் அதை ஏற்கிறேன். ஒருகோடி உறுப்பினர்களைக் கட்சியில் சேர்ப்பது எங்கள் குறிக்கோளாக இருக்கிறது. இப்போது எங்களின் முழு கவனம் அதில்தான்” என்றார்.

அண்ணாமலை – தமிழிசை திடீர் சந்திப்பு

ஏற்கெனவே தேர்தல் முடிவுகள் வெளியான நேரத்தில் அண்ணாமலை குறித்து தமிழிசை அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு அண்ணாமலையின் ஆதரவு ஐ.டி-விங் தமிழிசையைக் கடுமையாக விமர்சனம் செய்தததாகவும் தனிப்பட்ட முறையில் விமர்சனங்கள் செய்ததாகவும் சொல்லப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த தமிழிசை தரப்பு டெல்லிக்கு விஷயத்தைக் கொண்டு சென்றது. மேலும் சீனியர் நிர்வாகிகள் பலரும் அண்ணாமலை மீது புகார் கடிதங்களை அனுப்பினார்கள். இதையடுத்து தமிழிசையின் வீட்டுக்குச் சென்று பேசினார் அண்ணாமலை. இந்த சூழலில்தான் மீண்டும் இருவருக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், “தமிழிசையின் கருத்து மறைமுகமாக அண்ணாமலையை விமர்சனம் செய்யும் வகையிலேயே இருக்கிறது. மேடையில் பேசும் போது தலைவருக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுக்க வேண்டும் எனச் சொல்வது அண்ணாமலைக்கான வார்த்தைதான். ஆனால் இதை மோதல் என்று சொல்லிவிட முடியாது. தற்குறி, தவழ்ந்து வந்து பதவியைப் பிடித்தார் என்றெல்லாம் அண்ணாமலை பேசுவது தவறு. யாராவது கோபப்படுத்தினால் வார்த்தைகளை விட்டுவிடுவேன் என்பது நாகரீகமான அரசியல் கிடையாது.

குபேந்திரன்

பிஎஸ்ஜி, ஐஐஎம்-ல் படித்தவர். மேலும் யுபிஎஸ்சி தேர்வு எழுதி ஐபிஎஸ் அதிகாரியானவர். இவ்வளவு தகுதிகள் இருந்தும் பொது மேடையில் ஒருவரை எப்படி விமர்சனம் செய்ய வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. தலைவராக இருக்கும் போது வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அண்ணாமலையின் பேச்சு தமிழிசைக்கு நெருக்கடியைக் கொடுத்துள்ளது. அதாவது அ.தி.மு.க தலைவர்களுடன் அவர் அரசியல் ரீதியிலான நட்புணர்வில் இருக்கலாம். அவர்கள் தமிழிசையைத் தொடர்பு கொண்டு, ‘அண்ணாமலை இப்படிப் பேசுவது சரியாய் அக்கா?’ எனக் கேள்வி எழுப்பலாம். எனவேதான் மறைமுகமாக கண்டித்துள்ளளார்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88