“மக்களை ஏமாற்ற திமுக போடும் நாடகமே முருகன் மாநாடு..!” – வானதி சீனிவாசன் காட்டம்

“நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழ்நாடு அரசியலிலிருந்து ஒதுங்கிவிட்டீர்களே… தமிழ்நாடு பாஜக மீதான வருத்தம்தான் காரணமா?”

“அப்படியல்ல, தேசிய பொறுப்பிலும், தொகுதி சார்ந்த பிரச்னைகளிலும் கவனம் செலுத்துகிறேன். எனவே தமிழ்நாடு பா.ஜ.க என்ன முடிவெடுக்க வேண்டுமென்பதும்,  அதன் செயல்பாடுகளை பார்த்துக் கொள்ளவும் மாநிலத் தலைவர் அடங்கிய குழு இருக்கிறது. இருப்பினும் தேவைகேற்ப தமிழக அரசியலிலும் பாஜக-விலும் என் குரல் ஒலிக்கத்தான் செய்கிறது.”

வானதி சீனிவாசன்

“சனாதனத்தை எதிர்த்து போராடும் திமுக-வோடு பாஜக இணக்கம்காட்டுவதாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளனவே!” 

“சனாதனம் உள்ளிட்ட கருத்து நிலைப்பாடுகளில் தி.மு.க-வுக்கு எதிராக இருந்தாலும்கூட மறைந்த தலைவரின் அரசியல் பங்களிப்புக்காக மத்திய அரசின் மரியாதைதான் நினைவு நாணயம் வெளியீடு. ராஜ்நாத் சிங் அரைமணி பேசியதை வைத்து அரசியல் நிலைப்பாடு மாறிவிட்டதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். கூட்டணி குறித்து கேட்கிறீர்கள் `வருங்காலங்களில் தி.மு.க-வுடன் கூட்டணி அமையுமா அமையாதா என்பதை தேசியத் தலைமைதான் முடிவு செய்யும்.”

“தி.மு.க அரசு நடத்திய முருகன் மாநாட்டை வரவேற்கிறதா பா.ஜ.க?”

`இதெல்லாம் ஏமாற்று வேலை. ஆன்மீக உணர்வுகளை புரிந்துகொள்ளாத தி.மு.க. சனாதனத்தை ஒழிப்போம் என இளைஞர் தலைவரை வைத்து மாநாடு நடத்திவிட்டு அமைச்சரை வைத்து முருகன் மாநாடு நடத்துவதில் என்ன அர்த்தம் இருக்கிறது. அனைத்து மதத்தினரை சமமாக நடத்தாமல் மக்களை ஏமாற்ற தி.மு.க போடும் நாடகமே முருகன் மாநாடு. சொல்லப்போனால் மக்களிடம் ஏற்படும் மாற்றத்தை தி.மு.க புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறது. எனவே இதுபோல சிவன், அஞ்சநேயர் மாநாடுகள் நடத்தட்டும்”

முத்தமிழ் முருகன் மாநாடு, பழனி

“ஆட்சி அதிகாரத்தில் இல்லாத அ.தி.மு.க-வை குறிவைத்து தமிழ்நாடு பா.ஜ.க விமர்சித்து வருவது தி.மு.க-வுடன் ரகசிய உறவு சந்தேகத்துக்கு வலு சேர்த்திருக்கிறதே!”

“ஆட்சி அதிகாரத்தில் இல்லையென்றாலும் கட்சிகளின் நிலைப்பாட்டிற்கேற்ப விமர்சனங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் அ.தி.மு.க-வையோ அ.தி.மு.க-வின் தலைவர்களையோ தனிப்பட்ட முறையில் நாங்கள் தாக்குவதில்லை.”

“மாநிலத் தலைவர் அண்ணாமலை `தற்குறி எடப்பாடி` என வரம்புமீறி அ.தி.மு.க-வை விமர்சித்திருக்கிறாரே.. எங்களால்தான் எதிர்க்கட்சியானதெனவும் எல்.முருகன் பேசியிருக்கிறாரே?”

“அதுபற்றி எனக்கு தெரியவில்லை. குறிப்பாக ஒவ்வொரு தலைவர்கள் பேசியதற்கும் நான் கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது”

எடப்பாடி பழனிசாமி

“இதர மாநிலங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை மெட்ரோ பணிகளுக்காக கொடுத்துவிட்டு தமிழ்நாட்டுக்கு மட்டும் பாரபட்சம் காட்டுவது ஏன்?” `

`இதுபோன்ற பெரிய திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசே முழுமையாக தந்துவிட முடியாது. சர்வதேச பொருளாதார நிறுவனங்களின்மூலம் தமிழ்நாட்டுக்கு என்னவெல்லாம் உதவி தேவைப்படுகிறதோ அதனையெல்லாம் மேற்கொண்டு வருவதாகவும், கட்டுமானம் உள்ளிட்ட வேலைகளை வைத்து கடனுதவியை வழங்குவார்கள் என்பதே நிதியமைச்சரின் பதில். விமான நிலைய விரிவாக்கம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்தபோதும் இதுகுறித்தும் விவாதித்தோம்.”

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88