Aadhaar Update: `ஆதார் புதுப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 14′ – புகைப்படமும் மாற்றலாம்; வழிமுறை என்ன?

இந்தியர்களின் ஆதார அடையாளமாகக் கருதப்படும் ஆதார் (Aadhar) அட்டை புதுப்பித்தல் குறித்த முக்கிய அறிவிப்பை, ‘ஆதார் ஆணையம்’ வெளியிட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டில் ஆதார் ஆணையம், ஆதார் தொடர்பான மோசடி தடுப்பு, ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் ஒழுங்குமுறை விதிகளைக் கொண்டு வந்திருந்தது. விதிப்படி ஆதார் அட்டைகளை, ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். அதன்படி, பெரும்பாலான மக்கள் புதுப்பித்து விட்டதாகச் சொல்லப்படும் நிலையில், இன்னும் 40 கோடிக்கும் அதிகமான மக்கள் புதுப்பிக்காமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவேதான், இந்த ஆண்டு ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்கும் சேவையை செப்டம்பர் 14-ம் தேதி வரை, ஆதார் ஆணையம் வழங்குகிறது.

UIDAI – ஆதார் கார்டு

ஆதார் அட்டையில் உங்களின் பெயர், முகவரி, புகைப்படம் போன்ற பிற விவரங்களை புதுப்பித்துக்கொள்ள குடும்ப அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகிய ஆவணங்களில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தி அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தை அணுகலாம். அல்லது வீட்டிலிருந்தே எளிமையாக ஆதாரின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கட்டணம் இல்லாமல் புதுப்பித்துக் கொள்ளலாம். (UIDAI) இந்திய தனித்துவ அடையாள ஆணையமும், ஆதாரை இலவசமாக புதுப்பிக்கும் வசதியை வழங்குகிறது.

புதுப்பிக்கும் முறை (Update) :

முதலில் ஆதார் வெப்சைட் uidai.gov.in-ல் உள்நுழையவும். பின்னர் புதுப்பிப்பு விருப்பத்தை க்ளிக்செய்து, புதுப்பிக்க வேண்டியவற்றை, பெயர் மாற்றம் அல்லது குடும்பப் பெயர் தொடர்பான ஆவணத்தை சமர்ப்பித்து, படிவத்தில் கேட்கப்படும் தகவல்கள் அனைத்தையும் பூர்த்தி செய்து, மீண்டும் அதை மதிப்பாய்வு செய்து சமர்ப்பிக்கவும். 90 நாள்களுக்குள் உங்கள் பெயர் அல்லது குடும்பப் பெயர் புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டையைப் பெறுவீர்கள். நீங்கள் விரும்பினால், வீட்டுக்கு அருகில் உள்ள இ-சேவை மையத்தில், உங்கள் ஆதார் அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இணையதளம் மூலம் மட்டுமல்லாமல், MyAadhaar செயலி மூலமாகவும் புதுப்பிக்கலாம்.

ஆனால் போட்டோ மற்றும் கைரேகையை ஆதார் சேவை மையத்தில்தான் புதுப்பிக்க முடியும். மேலும் செப்டம்பர் 14-ம் தேதிக்குப் பிறகு புதுப்பிக்காத அட்டைதாரர்கள், ரூ.50 கட்டணம் செலுத்தி புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.